லக்னோவின் ஸ்லோ பிட்சில் டேக் ஆஃப் ஆகவே தடுமாறும் லக்னோவின் பேட்டிங் யூனிட், மொகாலியில் தார்ரோட்டுக்கு இணையான பேட்டிங் பிட்ச் கிடைக்க, அங்கே உக்கிரமாக உருவெடுத்ததோடு பஞ்சாப்பையும் வீழ்த்தியுள்ளது.
முரண்களின் பின்னல்தானே வாழ்க்கை. அதை விளக்குவதைப் போன்றே இயல்பு மாறிச் சிரிக்கும் கம்பீரையும், டென்ஷனை முகத்தில் காட்டும் தவானையும் இப்போட்டி காட்சிப்படுத்தியது. பந்துகளை உருட்டி விளையாடியே பழக்கப்பட்ட லக்னோவோ கொலைப்பசியோடு ரன்களைக் குவித்து ஐ.பி.எல் வரலாற்றின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவேற்றியது. இந்த சீசனில் முந்தைய மோதலில் பஞ்சாப்பிடம் பட்ட அடிக்குப் பழிதீர்த்தும் கொண்டது.
சிறுவயதில் ஆடிய புக் கிரிக்கெட் பலருக்கும் நினைவிருக்கும். அதில் ஆட்டமிழக்க நிகழ்தகவு குறைவு. அதேசமயம் நான்கும் ஆறுமாக ரன்களும் எகிறும். அப்படிப்பட்ட புக் கிரிக்கெட்டை மெகா அளவில் களத்தில் ஆடினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது முதல் பாதியில் லக்னோவின் வெறியாட்டமும். அதிலும் லக்னோவின் பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரும் தங்களது பேட்டினை அதிரடி மொழி பேச வைத்தனர்.

35 மதிப்பெண்களைக்கூட எடுக்க முடியாமல் தேர்வில் தேறத் தவறிய மாணவன் போல குஜராத்துக்கு எதிராக முந்தைய போட்டியில் இறுதி 36 பந்துகளில் 31 ரன்களைக்கூட எட்ட முடியாமல் லக்னோ வீழ்ந்தது. தோல்வியுற்ற அதே மாணவன் அடுத்த தேர்விலேயே 100 மதிப்பெண்களை எடுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் கம்பேக் கொடுத்தது லக்னோவும். போன போட்டியின் முடிவில் "என்ன நடந்ததென்றே விளங்கவில்லை" என கே.எல்.ராகுல் கூறியிருந்தார். இப்போட்டியில் பார்வையாளர்கள் மொத்தப் பேரையும் முதல் பாதி முழுவதும் அதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்ல வைத்தது லக்னோ பேட்டிங். சி.எஸ்.கே 2008-ல் அடித்த 240தான் இந்தப் பிட்சில் அதிகமாக அடிக்கப்பட்ட ஸ்கோர். தொடக்கத்திலிருந்தே இதனைத் தாண்டும் முனைப்பு லக்னோவிடம் ஒவ்வொரு ஓவரிலும் தெரிந்தது.
"நெட் ரன்ரேட்டுக்காக ஆடுகிறீர்கள், இதில் இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதி", என மொத்த பேட்ஸ்மேன்களையும் யாரோ மூளைச் சலவை செய்துவிட்டனர் போலும். வருகின்ற போகின்ற அத்தனை பேட்ஸ்மேன்களும் பஞ்சாப் பௌலிங்கைத் துண்டாடினர். பென்சில் செய்யும் தவற்றினை எல்லாம் அதற்குப் பின்னால் உள்ள ரப்பர் அழித்துச் சரிசெய்யும், ராகுல் - மேயர்ஸ் கூட்டணி முதலிரு போட்டிகளில் இப்படித்தான் தொடர்ந்தது. ராகுலின் ஸ்ட்ரைக்ரேட்டால் உண்டான பள்ளம் மேயர்ஸால் நேர்செய்யப்பட்டது. ஆனால் அதற்கடுத்து வந்த போட்டிகளில் ராகுலின் சாயலிலேயே மேயர்ஸும் ஆடத்தொடங்கினார். அதனை மாற்றியே ஆகவேண்டும் என்ற முடிவோடு வந்தவர் போல், அர்ஷ்தீப்பின் முதல் ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசி ஆரம்பித்தார். அழிவைத் தாங்கிய சுனாமி வருவதற்கு முந்தைய சின்ன நில அதிர்வு போல அந்த ஓவர் இருந்தது. மரண பீதியினை லிட்டர் கணக்கில் பஞ்சாப்பின் பக்கம் ஓடவிட்டார் மேயர்ஸ்.

ரபாடாவின் எக்ஸ்ட்ரா பவுன்ஸில் ராகுலும், ஷார்ட் பால் கண்ணாம்பூச்சியில் மேயர்ஸும் வெளியேறினார்கள்தான். என்றாலும் பவர்பிளே முடிவே 74 ரன்களைப் பார்த்து விட்டது. இந்த இரு விக்கெட்டுகள்கூட லக்னோவின் ஓட்டத்துக்கு வேகத்தடை இடவில்லை.
ஸ்டோய்னிஸ் - பதோனி கூட்டணி முன்பு பார்த்தது முன்னோட்டமே என்பதை மத்திய ஓவர்களில் முரசறைந்து முழங்கியதோடு 46 பந்துகளில் 89 ரன்களை எடுத்தும் நிரூபித்தது. எப்புள்ளியிலும் ரன்ரேட் 12-க்குக் கீழிறங்க இவர்கள் அனுமதிக்கவேயில்லை. முன்னதாக மேயர்ஸின் அரைசதம் 20 பந்துகளிலேயே வந்திருக்க, ஸ்டோய்னிஸுடையது சற்றே தாமதமாக (!!) 29 பந்துகளிலேயே வந்தது. ஆனாலும் மேயர்ஸ் போல அதோடு முற்றுப்பெறாமல் ஸ்டோய்னிஸின் அதிரடி தொடர்ந்தது.
பதோனியின் விக்கெட் 14-வது ஓவரில் விழுந்தாலும் அதை நினைத்து பஞ்சாப் ஆனந்தப்படுவதற்கு ஏதுமில்லை. ஏனெனில் அடுத்து வந்தது பூரண். அவருடன் ஸ்டோய்னிஸின் அதிரடி தொடர்ந்தது. ஹாட்ரிக் பவுண்டரியோடு தொடங்கிய பூரண், மொத்த பஞ்சாப்பையும் பஞ்சர் ஆக்கினார்.
பதற்றத்தில் பஞ்சாப் பௌலர்களின் பந்துகள் காற்றிழந்த பலூன் போலவே லைன் அண்ட் லென்த் தவறிக் கண்ட இடத்தில் தரையிறங்கின. அதற்குரிய தண்டனையும் பலமாக இருந்தது. 15 ரன்கள் உதிரியாக வந்திருந்தன என்றாலும் அவை மட்டுமே மோசமான பந்துகள் இல்லை. பெரும்பாலான பந்துகள், 'இலவச ரன்கள்' என்ற எழுத்துகளைத் தாங்கியே வந்தன.
மொத்தம் ஏழு பௌலர்களைப் பந்துவீச வைத்திருந்தார் தவான். அதில் ராகுல் சஹார் மட்டுமே 7.2 எக்கானமியோடு வீசியிருந்தார். மற்ற அத்தனை பேரின் எக்கானமியும் 12-ஐ தாண்டியே பயணித்திருந்தது. லக்னோவுக்குக் களம் ஒரு கை கொடுத்ததென்றால் பஞ்சாப்பின் மோசமான பௌலிங்கும் இன்னொரு கரம் கொடுத்து லக்னோவினை எழ வைத்தது. 4 ஓவர்கள் மீதமிருக்கையிலேயே 200-ஐ தாண்டியிருந்த லக்னோ அதிகபட்ச ஸ்கோருக்கான ஆர்சிபியின் சாதனையை முறியடிக்கும் வேகத்திலேயே முன்னேறியது. இறுதி இரு ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் கொடுக்கப்பட்டதோடு இரு விக்கெட்டுகளும் விழுந்தது சற்றே அவர்களை மட்டுப்படுத்தி ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக லக்னோவின் 257-ஐ பதிவேற்றியது. 2013-ல் அடிக்கப்பட்ட ஆர்சிபியின் 263, முதலிடத்திலேயே தொடர்கிறது.

200 ரன்கள் வரை இங்கே எளிதாக எட்டப்படக் கூடியதே, பஞ்சாப்பின் வலுவான பேட்டிங் லைன்அப்பும் அதற்கு வழிசெய்யும்தான். போதாக்குறைக்குப் பனிப்பொழிவின் கரிசனமும் நிரம்பவே உண்டு. முன்னதாகச் சொன்ன, சிஎஸ்கே 240 ரன்களை எட்டிய போட்டியில்கூட 207 ரன்கள் வரை பஞ்சாப் சேஸிங்கின் போது சேர்த்திருந்தது. எனினும் 258 என்பதனைத் துரத்தி அடைவது `Herculean Task' என்ற பதத்திற்கான மொத்த அர்த்தத்தையும் சொல்லக்கூடியது. ஏனெனில் 13 ரன்ரேட்டோடு பவர்பிளேவினைக் கடப்பதே கடினமெனில் மொத்த ஓவர்களிலும் அதே அதிகபட்ச கியரில் பயணித்து ரன்குவிக்க முற்படுகையில் விக்கெட் விபத்து என்பது தவிர்க்க முடியாதது. அதுவே இலக்கு எட்டப்படுவதைத் தடுத்துவிடும்.
பஞ்சாப் தங்களின் சேஸிங்கில் பவர்பிளேவுக்குள்ளேயே இரு விக்கெட்டுகளை விட்டனர். அதுவும் அணி பெரிதும் நம்பும் தவானும் அவரில்லாத சமயத்தில் இம்பேக்ட் பிளேயராக நுழைந்து தன் இடத்தை உறுதி செய்த பிரப்சிம்ரனும் விரைவாகவே வெளியேறியிருந்தனர். தொடர்ந்து ஆறு ஓவர்களில் சேர்க்கப்பட்ட 55 ரன்கள் என்பதே அணி பற்றாக்குறையோடு தொடங்கியிருப்பதைப் பறைசாற்றியது. எனினும் அணி திவால் ஆகிவிடாதென்ற ஒரு திவளை நம்பிக்கையை ரசிகர்களிடம் மிச்சம் வைத்தது அதர்வா - ரசா கூட்டணி. ஆனால் மத்திய ஓவர்களில் விக்கெட் மேல் வைத்த அதீத கவனத்தை ரன்ரேட்டின் மேல் வைக்கத் தவறிவிட்டனர்.

ரசா சற்றே மெதுவாகத் தொடங்க அவருக்கும் சேர்த்து பந்துகளைச் சூறையாடினார் அதர்வா. எனினும் 10 ஓவர்களில் 93 ரன்கள் மட்டுமே வந்திருந்தன. யானையின் கோரப்பசிக்கு மிகுதியாகக் கிடைத்ததென்றாலும் சோளப் பொரி போதுமானதாக இல்லை. துரத்தப்படுவது 250+ ரன்கள் எனும் போது அந்தப் புள்ளியிலேயே பஞ்சாப் 120 ரன்களையாவது எட்டியிருந்தால், அடுத்த பாதியில் சிறிதளவேனும் வாய்ப்புகள் மிஞ்சியிருக்கும். அதை செய்ய பஞ்சாப் தவற, தேவைப்படும் ரன்ரேட் 17-ஐ கடந்து பயமுறுத்தியது. இதனை உணர்ந்து 11-வது ஓவரில் ரசாவும் தனது வேகத்தைக் கூட்ட, அதற்கடுத்த ஓவரிலேயே யாஷ் தாக்கூரின் ஷார்ட் பால் அவரை வெளியேற்றியது. அதர்வாவின் விக்கெட்டையும் ரவி பிஷ்னாயின் கூக்ளி கூலியாகக் கேட்டது. செட்டில் ஆகியிருந்த இந்த இரு பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து வெளியேறினர். உண்மையில் இந்தத் தருணத்தில் அல்ல, அதற்கு முன்னதாகவே போட்டி பஞ்சாபின் கையிலிருந்து நழுவியிருந்தது. லிவிங்ஸ்டோன், சாம் கரண், ஜிதேஷ் ஷர்மா போன்ற பவர் ஹிட்டர்களில் ஒருவரை சற்றே முன்கூட்டி இறக்கியிருந்தால் பஞ்சாபுக்கு ஒரு நூலிழை வாய்ப்பாவது மிஞ்சியிருக்கும்.
12-வது ஓவருக்குப் பின் உள்ளே வந்த அவர்களால் எவ்வளவு முயன்றாலும் அதிவேகமாக அதிகரித்துக் கொண்டே இருந்த தேவைப்படும் ரன்ரேட்டினை எட்டிப்பிடிக்கவே முடியவில்லை. விக்கெட்டுகள் விழுந்தாலும் கொஞ்சமும் அஞ்சாது பேட் ஸ்விங் ஆகிக் கொண்டே இருப்பினும் ரன்கள் வந்து கொண்டே இருப்பினும் நிரப்ப முடியாத துளைகள் விழுந்த வாளி போல ஸ்கோர்போர்டு ரன்வீக்கத்தையே காட்டிக் கொண்டிருந்தது. அதுவே தோல்வியை பஞ்சாபுக்கான பரிசாகத் தந்தது.

பொதுவாக இப்படி ஒரு இமாலய இலக்கை எட்டுவதற்கான ஓட்டத்தில் பெரும்பாலான அணிகள் நிலச்சரிவு போல விக்கெட் வீழ்ச்சியை நேர் கொள்ளும். அநேக சமயங்களில் அளவற்ற அழுத்தமே அதற்குக் காரணமாகவும் இருக்கும். அதைச் சமாளித்திருப்பினும் மத்தியில் ஏற்பட்ட சின்ன பின்னடைவால் பஞ்சாப் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருந்தது. உண்மையில் பஞ்சாபால் இந்தளவு எட்ட முடிந்ததே பெரிய விஷயம்தான். அதேபோல் முதல் பாதியில் லக்னோ காட்டிய இன்டென்டுக்கு கொஞ்சமும் குறைவின்றியே பஞ்சாப் பேட்ஸ்மேன்களும் காட்டியிருந்தனர் என்பதே உண்மை.
அடுத்த போட்டியில் ஆர்சிபியை லக்னோவில் வைத்துச் சந்திக்க உள்ளது லக்னோ. இதே அதிரடி லக்னோவிலும் தொடருமா அல்லது பழையபடி கே.எல்.ராகுலின் அமைதி அணுகுமுறையினை அண்டுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.