Published:Updated:

LSG v MI: அடிதடி ஸ்டாய்னிஸ்; அசரவைத்த மோஷின் கான்; லக்னோ மும்பையை வீழ்த்தியது எப்படி?

இந்த மைதானத்தில் இது சற்று பெரிய இலக்கு தான் என்றாலும் மும்பை அணிக்கு மிகச் சிறந்த துவக்கம் கிடைத்தது. ஆனாலும்...

Published:Updated:

LSG v MI: அடிதடி ஸ்டாய்னிஸ்; அசரவைத்த மோஷின் கான்; லக்னோ மும்பையை வீழ்த்தியது எப்படி?

இந்த மைதானத்தில் இது சற்று பெரிய இலக்கு தான் என்றாலும் மும்பை அணிக்கு மிகச் சிறந்த துவக்கம் கிடைத்தது. ஆனாலும்...

கடைசி வரை யார் கொலைகாரன் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு செல்லும் சீரியல் கில்லர் திரைப்படம் போல நகர்கிறது ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல். நேற்று வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து இருக்கலாம் என்ற நிலையில் தோல்வியுற்று பல அணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது மும்பை.‌

லக்னோ மைதானத்தில் நேற்று நடந்த முக்கியமான போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியில் குமார் கார்த்திகேயாவுக்கு பதிலாக ஆப் ஸ்பின்னர் ஷோக்கின் களமிறங்கினார். லக்னோ அணியில் ஹூடா அணிக்கு திரும்பி இருந்தார். இந்த ஐபிஎல் தொடரிலேயே பேட்டிங் ஆட சவாலான பிட்ச் என்றால் அது லக்னோ பிட்ச் தான். அதனால் ஆரம்பத்தில் கொஞ்சம் ரன் அடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஓப்பனிங் வந்தார் ஹூடா. ஆனால் "கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்" என்ற‌ கதையாக ஹூடா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மான்கட் எனும் வீரரும் வெளியேறினார்.‌ இரண்டு விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் எடுத்துக் கொடுத்தார் பெஹரண்டாஃப்.

Stoinis
Stoinis

டீகாக்கை தனது முதல் பந்திலேயே வெளியேற்றினார் சாவ்லா. அதன் பின்பு களத்திற்கு வந்தார் ஸ்டாய்னிஸ். இவரும் கேப்டன் க்ரூணல் பாண்டியாவும் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடினர். இது போன்ற ஆடுகளத்தில் கைவசம் விக்கெட்டுகளை வைத்திருந்தால் கடைசி நேரத்தில் எத்தனை ரன்களை வேண்டுமானாலும் அடிக்கலாம் என்பதை தெரிந்து வைத்திருந்தனர் இருவரும். அதனால் க்ரூணால் பொறுமையாக ஆட அவ்வப்போது தேவையான பவுண்டரிகளை பெற்று தந்தார் ஸ்டாய்னிஸ். அதுவும் ஆரம்பத்தில் ஸ்டாய்னிஸ் ஸ்பின்னர்களை குறிவைத்து அடித்தார்.

Stoinis
Stoinis
ஷோக்கின், சாவ்லா ஆகியோரின் பந்துகள் சிக்ஸர்களுக்கு பறந்ததை பார்த்த கேப்டன் ரோஹித் இத்தொடரில் தங்களது சிறந்த பந்து வீச்சாளரான சாவ்லாவை மூன்று ஓவர்களுடன் நிறுத்தினார். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை கடைசி நேரத்தில் உணர்த்தினார் ஸ்டாய்னிஸ்.

அவ்வளவு பெரிய மைதானத்தில் ரன் ஓடி ஓடி ஒரு கட்டத்தில் அவுட் ஆகாமலே ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார் க்ரூணால். ஆனால் மறுமுனையில் ஸ்டாய்னிஸ் வானவேடிக்கை காட்ட ஆரம்பித்தார். குறிப்பாக ஜோர்டன் வீசிய ஓவரில் 24 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் மாத்வால் நன்றாக வீசினாலும் கடைசி பந்தில் பூரன் சிக்சர் அடிக்க‌ 177 ரன்கள் எடுத்தது லக்னோ.

ஜோர்டன் நான்கு ஓவர்கள் வீசி‌ 56 ரன்கள் கொடுத்து தனது தாராள குணத்தை வழக்கம் போல வெளிப்படுத்தி இருந்தார். ஸ்டோனிஸ் 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
MI
MI

இந்த மைதானத்தில் இது சற்று பெரிய இலக்கு தான் என்றாலும் மும்பை அணிக்கு மிகச் சிறந்த துவக்கம் கிடைத்தது. ரோகித் மற்றும் கிஷன் இணைந்து மிக சாதாரணமாக லக்னோ பந்துவீச்சை எதிர்கொண்டனர். அதுவும் ரோகித் மிக பொறுப்போடு ஆடினார். கிஷனும் தேவையான நேரத்தில் பவுண்டரிகளும் அடித்து ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பத்து ஓவர்கள் முடிவில் மும்பை தான் வெற்றி பெறும் என்ற‌ நிலை இருந்தது. ஆனால் பிஷ்னோய் சிறிது நேரத்திலேயே ரோகித் மற்றும் கிஷன் ஆகியோரை தொடர்ந்து வெளியேற்றினார்.‌ மைதானம் போக போக மிக மந்தமானது. அதை பயன்படுத்தி க்ரூணல் மற்றும் பிஷ்னோய் தங்களது பந்து வீச்சால் மும்பையை கட்டுப்படுத்தினர். வரிசையாக பல போட்டிகளில் வென்று கொடுத்த சூர்யகுமார் இன்று லீவ்‌ எடுத்துக்கொண்டார். தனது டிரேட் மார்க் ஷாட் ஒன்றுக்கு முயன்று போல்டானார் சூர்யா.

இளம் வீரரான வதீராவுக்கு இந்த மைதானத்துக்கு ஏற்ப தன் ஆட்டத்தை மாற்றுவதில் பெரும் சிக்கல் இருந்தது. அதனால் அவரிடமிருந்து அதிக டாட் பந்துகள் வந்து ரன் ரேட்டை அதிகமாக்க அத்தனை பொறுப்புகளும் டிம் டேவிட் தலையில் விழுந்தன. இதற்கிடையில் வதீரா அவுட் ஆனார். விஷ்னு வினோத் பவுண்டரி லைன் அருகே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்‌. டிம் டேவிட் சில பல சிக்சர்களை கடைசி நேரத்தில் அடித்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.‌ கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவையான போது மும்பை 5 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்களில் தோல்வியுற்றது.

Mohsin Khan
Mohsin Khan

இரண்டு அணிகளுமே கிட்டத்தட்ட சமமாக ஆடினாலும், ஸ்பின்னர்களை க்ரூணால் பாண்டியா பயன்படுத்திய விதமும் ரோகித் பயன்படுத்தி விதமும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இந்த வித்தியாசம் தான் மும்பை தோற்ற 5 ரன்கள். லக்னோ 15 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திற்கு சென்றது இந்த வெற்றியின் மூலம். மேலும் இதனால் புள்ளிப்பட்டியல் இன்னமும் பல அணிகளுக்கு வாய்ப்பு கெடுக்க காத்திருக்கிறது. அடுத்து வரும் ஏழு ஆட்டங்களில் மூன்று அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புகள் அடங்கியுள்ளதால் முக்கியமான கிளைமாக்ஸ் கட்டத்துக்குள் சென்றுள்ளது ஐபிஎல் தொடர்‌‌.