Published:Updated:

LSGvRCB : கோலி - கம்பீர் சண்டையைத் தாண்டி அந்தப் போட்டியில் என்னதான் நடந்தது?

LSGvRCB

மற்ற பிட்ச்கள் எல்லாம் வந்தே பாரத் ரயில் என்றால் லக்னோ பிட்ச் சரக்கு ஏற்றிச் செல்லும் பிரிட்டிஷ் காலத்து கரி என்ஜின் ரயில் போல. ரன் வருவேனா என அடம்பிடிக்கும். அப்படியான பிட்ச்சில் பலமான பேட்டிங் கொண்ட இரு அணிகளும் மோதக் களமிறங்கின.

Published:Updated:

LSGvRCB : கோலி - கம்பீர் சண்டையைத் தாண்டி அந்தப் போட்டியில் என்னதான் நடந்தது?

மற்ற பிட்ச்கள் எல்லாம் வந்தே பாரத் ரயில் என்றால் லக்னோ பிட்ச் சரக்கு ஏற்றிச் செல்லும் பிரிட்டிஷ் காலத்து கரி என்ஜின் ரயில் போல. ரன் வருவேனா என அடம்பிடிக்கும். அப்படியான பிட்ச்சில் பலமான பேட்டிங் கொண்ட இரு அணிகளும் மோதக் களமிறங்கின.

LSGvRCB

கோலிக்கும் கம்பீருக்குமான சண்டைக்கு வயது இந்த சீசனோடு பத்து. போதாக்குறைக்கு இந்த சீசனின் முதல் சுற்றுப் போட்டியில் தெறி பட பர்ஸ்ட் லுக் போல கவுதம் கம்பீர் வாயில் விரல் வைத்து பெங்களூரு ரசிகர்களை வெறுப்பேற்ற, பழிவாங்க ஆர்சிபியைத் தாண்டி வெறியாய்க் காத்துக்கிடந்தார்கள் அந்த அணியின் ரசிகர்கள்.

ஒருவேளை பெங்களூரு ஜெயித்துவிட்டால் ராஜஸ்தான், சென்னை, லக்னோ அணிகளோடு புள்ளிப்பட்டியலில் சமமாய் ஜம்மென அமர்ந்துவிடும். அதனாலேயே இந்தப் போட்டிக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது.
KL Rahul -  Faf
KL Rahul - Faf

மற்ற பிட்ச்கள் எல்லாம் வந்தே பாரத் ரயில் என்றால் லக்னோ பிட்ச் சரக்கு ஏற்றிச் செல்லும் பிரிட்டிஷ் காலத்து கரி என்ஜின் ரயில் போல. ரன் வருவேனா என அடம்பிடிக்கும். அப்படியான பிட்ச்சில் பலமான பேட்டிங் கொண்ட இரு அணிகளும் மோத களமிறங்கின. கோலியிடமிருந்து கேப்டன் காப்பை வாங்கி கையில் மாட்டிக்கொண்டு டாஸுக்கு வந்தார் டு ப்ளெஸ்ஸி. லக்னோவுக்கு வேறு வழியே இல்லை. அடித்தாலும் பிடித்தாலும் ராகுல் தான் கேப்டன். டாஸ் வென்ற டுப்ளெஸ்ஸி பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் இரு மாற்றங்கள். 'தூதுவன் வருவான்' என ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன் அண்ட் கோ மாதிரி காத்திருந்த ஆர்.சி.பிக்காக ஒருவழியாய் களம் கண்டார் ஹேசல்வுட். ஷபாஸ் அகமதுவுக்கு பதிலாய் அனுஜ் ராவத். லக்னோவில் கடந்த முறை இரு அணிகளும் மோதியபோது ஏதோ தானே அடித்து டீமை ஜெயிக்க வைத்ததுபோல ஹெல்மெட்டை எல்லாம் தூக்கி வீசி ஓடிய அவேஷை வெளியே அமர்த்தி வைத்திருந்தார்கள். கிருஷ்ணப்பா கெளதம் அவருக்குப் பதிலாய்!

ஸ்லோ பிட்ச் என்பதால் ஸ்பின்னைக்கொண்டே தொடங்கினார் ராகுல். க்ருணால் வீசிய முதல் பந்தே பயங்கரமாய் டர்ன் ஆக, பவுண்டரி தட்டினார் கோலி. ஆனாலும் அந்த ஓவரில் ஐந்தே ரன்கள். அடுத்த ஓவர் ஸ்டாய்னிஸ். ஓவரின் கடைசி பந்தில் டு ப்ளெஸ்ஸி எக்ஸ்ட்ரா கவர் பக்கம் அடித்த பந்தை பவுண்டரி போகாமல் தடுக்க ஓடிய ராகுல் அப்படியே ஓடியபடி சுருண்டு விழுந்தார். தொடையில் ஏதோ பிசகல் போல. மனிதர் வலியில் துடித்ததைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. அப்படியே அவரை பெவிலியனுக்குத் தூக்கிப் போனார்கள்.

ஸ்டேண்ட் இன் கேப்டன் க்ருணால். அவரின் அடுத்த ஓவரில் நான்கே ரன்கள்.
LSG
LSG

நவீன் உல் ஹக் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தை கணிக்க முடியாமல் டு ப்ளெஸ்ஸி தடுமாற ஒரு ரன் அவுட் வாய்ப்பை தவற விட்டார் நவீன். அதற்கும் சேர்த்து வைத்து அந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார்கள் கோலியும் டுப்ளெஸ்ஸியும். க்ருணால் பவர்ப்ளேவிற்குள்ளேயே மூன்றாவது ஓவரும் போடவந்தார். ஐந்தே ரன்கள். பிஸ்னோய் வீசிட பவர்ப்ளேயின் கடைசி ஓவரிலும் பெரிதாய் ரன்கள் இல்லை. ஸ்கோர் 42/0 பவர்ப்ளே முடிவில்.

மிஸ்ரா, யஷ் தாகூர் என பவுலர்கள் பிட்ச்சை தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ள ஸ்கோர் மந்தமாய் ஓடும் மாநகரப் பேருந்து போல மெதுவாகவே ஏறியது. பிரஷர் அதிகரிக்க அதிகரிக்க வேறு வழியில்லாமல் ஒன்பதாவது ஓவரில் பிஸ்னோய் வீசிய கூக்ளியை மிஸ் செய்து ஸ்டம்பிங் ஆனார் கோலி. அனுஜ் ராவத் ஒன் டவுன். ஸ்கோர் ஒன்பது ஓவர் முடிவில் 62/1. கெளதமும் பிஸ்னோயும் மாறி மாறி ஆஃப் ஸ்பின்னும் லெக் ஸ்பின்னுமாய் பேட்ஸ்மேன்களுக்கு கண்ணாமூச்சி ஆடினார்கள். அதே பிரஷர் காரணமாக தூக்கியடித்து அவுட்டானார் அனுஜ்.

பிஸ்னோய் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து வந்த மேக்ஸ்வெல். மிஸ்ராவின் அனுபவத்திற்கு பதில் சொல்ல முடியாமல் பின்னாலேயே நடையைக் கட்டினார் பிரபுதேசாய். ஸ்கோர் 15 ஓவர்களில் 92/4. ஒரு பக்கம் விக்கெட்கள் விழுந்துகொண்டே இருந்தாலும் இன்னொருபக்கம் சளைக்காமல் சந்திரமுகி கோவாலு போல ஒண்டியாய் நின்று வெள்ளையடித்துக்கொண்டிருந்தார் டு ப்ளெஸ்ஸி. ஆனால் ரன்கள் வந்தபாடில்லை. ஒன்பதாவது ஓவர் தொடங்கி அடுத்த ஏழு ஓவர்களுக்கு ஒரு பவுண்டரி கூட அடிக்கமுடியவில்லை ஆர்.சி.பி பேட்ஸ்மேன்களால்.

Faf - Virat
Faf - Virat

மழை வேறு நடுவே வந்து ரசிகர்களுக்கு பயம் காட்டியது. மழைவிட்டு ஆட்டம் தொடங்கிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அடித்து மங்களகரமாய் தொடங்கி வைத்தார் டிகே. மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் ஏற்கெனவே டயர்டாகியிருந்த டு ப்ளெஸ்ஸி மேற்கொண்டு அடிக்க எனர்ஜி இல்லாமல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நவீன் வீசிய 18 ஓவரில் லோம்ரோரும் காலி. 19வது ஓவரில் ஹசரங்கா அடித்த பந்தை அப்படியே கையோடு எடுத்து நான் ஸ்ட்ரைக்கர் பக்க ஸ்டம்ப்பில் எறிந்தார் பவுலர் யஷ் தாக்கூர். பாதி பிட்ச் வரை ஓடிவந்திருந்த தினேஷ் கார்த்திக் நடு பிட்ச்சில் தடுக்கி விழ, ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் நவீன் வீசிய பந்தை கெளதமுக்கு கேட்ச் பிராக்டீஸ் போல கொடுத்து வெளியேறினார் கரன் சர்மா. அதற்கடுத்த பந்திலேயே சிராஜும் காலி. பூரனை நம்பி ரிவ்யூ எடுத்ததற்கு கை மேல் பலன். இறுதியாய் 20 ஓவர்கள் முடிவில் 126/9.

பெரிய பெரிய ஸ்கோர்களையே டிபெண்ட் செய்யமுடியாமல் தடுமாறும் அணி பெங்களூரு, அதே சமயம் இதே பிட்ச்சில் குஜராத்திற்கு எதிராக இதைவிட கொஞ்சம் அதிக ரன்களை டார்கெட்டாகக் கொண்டு அதை எடுக்க முடியாமல் தடுமாறி தோற்ற வரலாறு லக்னோவுடையது.

எனவே இந்த இரண்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள் இரு அணியின் ரசிகர்களும்.

ராகுல் காயம்பட்டிருந்ததால் மேயர்ஸோடு ஓபனிங் இறங்கினார் இம்பேக்ட் பிளேயரான ஆயுஷ் பதோனி. பவர்ப்ளே பெஸ்ட் பவுலரான சிராஜின் இரண்டாவது பந்திலேயே டைமிங் மிஸ் செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார் மேயர்ஸ். ஒன் டவுன் இறங்கிய க்ருணால் வந்த கையோடு சில பவுண்டரிகளைத் தட்டினார். லக்னோ ரசிகர்கள் கண்களில் ஒளி தெரிந்தது. அந்த ஃப்யூஸை அடுத்த ஓவரே பிடுங்கிவிட்டார் மேக்ஸ்வெல். க்ருணால் அவுட்! ஹேசல்வுட் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் பக்கம் போனார் படோனி. இந்த சீசனின் பெரிய ஏமாற்றம் தீபக் ஹூடா. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடம்பிடிப்பார் என எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, டக் அவுட்டில் தன் சீட்டை இரண்டு நிமிடங்கள் கூட பிரியத் தயாரில்லை அவர். வந்தவேகத்தில் கிளம்பிவிடுகிறார். ஹஸரங்காவின் கூக்ளியில் டிகே செய்த ஸ்டம்பிங்கில் இந்த ஆட்டத்திலும் காலி. ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 34/4.

Stoinis
Stoinis

கடந்தமுறை ஆர்.சி.பிக்கு வில்லனான பூரனும் கடந்த ஆட்டத்தில் லக்னோவிற்கு ஹீரோவான ஸ்டாய்னிஸும் களத்தில். தட்டித்தட்டியாவது இலக்கை அடைந்துவிடுவார்கள் என ஸ்டேடியத்தில் இருந்தவர்கள் நகம் கடிக்க, 'ச்சே ச்சே அவ்ளோ டென்ஷன் வேணாம்' என அவர்களின் வேலையை எளிதாக்கினார் பூரன். கரன் சர்மாவின் பந்தை சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு லோம்ரோரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பூரன். கிருஷ்ணப்ப கெளதம் வந்தபின்தான் கொஞ்ச நஞ்ச வாணவேடிக்கையும் தொடங்கியது. கர்ன் ஷர்மா வீசிய ஒன்பதாவது ஓவரில் மட்டும் 13 ரன்கள். ஹஸரங்காவின் அடுத்த ஓவரில் 10 ரன்கள். ஸ்கோர் 10 ஓவர்கள் முடிவில் 63/5.

இப்போதும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தது இலக்கு. ஆனால்

கர்ன் கடமையே கண்ணாய் ஸ்டாய்னிஸையும் தூக்க, அதற்கடுத்த ஓவரில் தேவை இல்லாமல் எக்ஸ்ட்ரா ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார் கெளதம்.

இப்போது களத்தில் அமித் மிஸ்ராவும் பிஸ்னோயும். பாவம் இருவரும் என்னென்னமோ முயற்சி செய்தும் பந்து பேட்டில் படுவேனா என்றது. அடுத்த நான்கு ஓவர்களில் பத்தே ரன்கள். போதாக்குறைக்கு 15வது ஓவரில் பிஸ்னோயும் தேவை இல்லாமல் இன்னொரு சிங்கிளுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட்டாக. 'சரி ஷோவை சீக்கிரம் முடிங்கப்பா' என மனதளவில் தோல்விக்கு தயாராகிவிட்டார்கள் ரசிகர்கள். முட்டுகொடுத்து நின்றிருந்த அமித் மிஸ்ராவும் நவீனுமே கிளம்ப, கடைசி ஆளாய் வந்து சும்மாதான் இருந்தார் ராகுல். 20வது ஓவரில் ஆல் அவுட்டானது லக்னோ அணி. பொறுமையாய் ஆடி அணியை கரைசேர்த்த டு ப்ளெஸ்ஸி தான் ஆட்டநாயகன்.

Virat Kohli
Virat Kohli

மேட்ச் முடிந்தபின் கைகுலுக்கும் சம்பிரதாயத்தின்போது நவீன் உல் ஹக் கோலியிடம் ஏதோ சொல்லிவிட்டு கையை தட்டிவிட. சட்டென சூடானார் கோலி. பஞ்சாயத்து பேச கம்பீர் இறங்க இருவருக்கும் திரும்பவும் முட்டிக்கொன்டது. மைதானமே பார்க்க, ஒரு வார்த்தைப் போரில் ஈடுபட்டுப் பின் பிரித்து வைக்கப்பட்டார்கள் தத்தமது அணி உறுப்பினர்களால். லக்னோ போன்ற பலமான அணியை பாயைப் போல சட்டென சுருட்டியிருப்பதால் ஆர்.சி.பி அணிக்கு இது பெரிய பூஸ்ட். மறுபக்கம் கேப்டன் ராகுல் அடுத்தடுத்த ஆட்டங்கள் ஆடுவாரா என்பது தெரியாமல் ஹோம் கிரவுண்டிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லாமல் சின்ன டார்கெட்டைக் கூட எட்ட முடியாமல் தொடரில் இரண்டாவது முறையாகத் தோற்று என லக்னோ கூடாரம் கவலைப்பட ஏராளமிருக்கின்றன. தவறிலிருந்து கற்காத வரையில் அந்த அணி ப்ளே ஆப் செல்வது கடினம்தான்.