கடந்த ஐபிஎல் தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட அணி எதுவென்றால் அது நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியாக தான் இருக்கும். ஹர்திக், க்ரூணால், டி- காக் போன்ற முன்னணி வீரர்கள் எல்லாம் வேறு அணிக்கு சென்றவுடன் ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது.
சிறப்பான வீரர்கள் இருந்தால் மட்டுமே சிறப்பான கேப்டனாக ரோகித் செயல்படுவார் என்று கூட விமர்சனங்கள் வந்தன. ஆனால் அத்தனை விமர்சனங்களையும் இந்த ஆண்டு தவிடுபொடியாக்கி பம்பாயின் பாட்ஷா நான் தான் என்று நிரூபித்துள்ளார் ரோகித்.

இந்த ஆண்டும் மும்பை அணி முதல் இரண்டு போட்டிகளை மிக மோசமாகத் தோற்றது. ஆனால் அடுத்து வந்த போட்டிகளை சரியாக பயன்படுத்தி கடைசி நேரத்தில் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. பிளே-ஆஃப் சுற்றில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியுடன் மோதியது மும்பை. பந்துவீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சென்னை மைதானத்திற்கு ஏற்ப பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் மற்றும் கிஷன் துவக்க வீரர்களாக வந்தனர். முந்தைய போட்டியில் தோனி ஸ்பின்னர்களை பயன்படுத்தி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதை பார்த்த லக்னோ கேப்டன் க்ரூணால் முதல் மூன்று ஓவர்களை ஸ்பின்னர்களை கொண்டு வீசினார்.
இதைத் தங்களுக்கு சாதகமாக்கி முதல் மூன்று ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தது மும்பை. இது சரிப்பட்டு வராது என தன்னுடைய வேகப்பந்து வீச்சாளர்களிடம் சென்றார் கேப்டன் க்ரூணால். நவீன் உல் ஹக் வீசி இரண்டாவது பகுதியில் மும்பை கேப்டன் ரோகித் ஆட்டம் இழந்தார். யஷ் தாகூர் வீசிய அடுத்த ஓவரின் இரண்டாம் பந்தில் கிஷன் அவுட் ஆனார். முதலிலேயே வேகப்பந்து வீச்சிடம் சென்றிருக்கலாமே என்று லக்னோ ரசிகர்கள் நொந்து கொண்டனர்.

பவர் ப்ளே முடிவதற்குள்ளேயே இரண்டு விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் இழந்திருந்தது மும்பை. சேப்பாக்கம் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது என்பதை உணர்ந்து எந்த அணியாக இருந்தாலும் இந்த நேரத்தில் பொறுமையாகவே ஆடி இருப்பார்கள். ஆனால் மும்பையோ தங்களுக்கு அதிரடி தான் வரும் என்பதை உணர்ந்து ஆடினர். கிரீன் மற்றும் சூர்யகுமார் இணைந்து லக்னோ பந்துவீச்சை பதம் பார்க்க தொடங்கினர். அதுவும் சூர்யகுமார் எல்லாம் விக்கெட் விழுந்த அதே ஓவரின் கடைசி பந்தில் தன்னுடைய டிரேட் மார்க் ஷாட் மூலமாக கீப்பரின் தலைக்கு மேலே ஒரு சிக்சர் பறக்க விட்டார். லக்னோவின் ஸ்பின்னர்களை மிக எளிதாக சமாளித்தனர் இருவரும். உண்மையிலேயே ஸ்பின்னர்களுக்கு மைதானத்தில் சாதகம் இல்லையா அல்லது இவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடுகிறார்களா என்பதை க்ரூணல் உணர்ந்து கொள்ளும் முன்பே பத்து ஓவர்கள் முடிந்து போனது.

வேறு வழியின்றி தன்னுடைய ஆயுதமாகிய நவீனை பயன்படுத்தியது லக்னோ. அவர் வீசிய 11வது ஓவரில் கிரீன் மற்றும் சூர்யா என இருவரும் அவுட் ஆகினர். தனக்கே உரிய பாணியில் இரண்டு கைகளையும் காதில் வைத்து விக்கெட்டுகளை கொண்டாடினார் நவீன். இரண்டு விக்கெட் வேகமாக விழ களத்திற்கு திலக் மற்றும் டிம் டேவிட் வந்தனர். இந்த நேரத்தில் சரியான லைனில் பந்து வீசி ரன்களை முடிந்த அளவுக்கு குறைத்தது லக்னோ. இருந்தாலும் திலக் அவ்வப்போது சிக்சர் அடித்துக் கொண்டு தான் இருந்தார். இடுப்பு அளவுக்கு வந்த புல் டாஸ் பந்தை டேவிட் அடிக்க நினைத்து கேட்ச் ஆனார். நோ பால் கேட்டும் நடுவர்கள் தராததால் விரக்தியோடு வெளியேறினார் டேவிட்.
இந்த நேரத்தில் மிகச் சிறப்பான முடிவு ஒன்றை எடுத்தார் ரோஹித். ஸ்பின்னர்களில் ஒன்று குறைந்தாலும் பரவாயில்லை எனக்கு ரன்கள் முக்கியம் என முதல் இன்னிங்ஸிலேயே வதீராவை impact வீரராக இறக்கி விட்டார்.
அவர் வந்து இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர்கள் என அடிக்க மும்பை 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்தது. நவீன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை லக்னோ அணிக்காக வீழ்த்தினார். இந்த மைதானத்தில் இது பெரிய இலக்கு தான் என்றாலும் அதை விரட்டி பிடிக்க களத்திற்கு வந்தனர் லக்னோ அணியின் ஓப்பனர்கள். முக்கியமான ஆட்டத்தில் டீ காக்கை விட்டுவிட்டு மேயர்ஸை எடுத்து வந்திருந்தது லக்னோ. மன்கட் எனும் மற்றொரு வீரர் மேயர்ஸ் உடன் இணைந்து துவக்கம் தந்தார். ஆனால் மத்வால் வீசிய இரண்டாவது ஓவரில் மன்கட் ஆட்டமிழந்தார். பலரும் ஆச்சரியபடும்படி ஜோர்டனிடம் அவுட் ஆனார் மேயர்ஸ்.

அதன் பின்பு களத்திற்கு ஸ்டாய்னிஸ் மற்றும் க்ரூணால் வந்தனர். ஸ்டாய்னிஸ் அதிரடியாகவும் க்ரூணால் மெதுவாகவும் ஆட ஆரம்பிக்க லக்னோ ரசிகர்கள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஆனால் தேவையற்ற ஷாட் ஆடி அவர்களை மீண்டும் குனிய வைத்தார் க்ரூணால். இந்த நேரத்தில் சரியாக மத்வாலை மீண்டும் கொண்டு வந்தார் ரோகித். அவர் ஒரே ஓவரில் பதோனியையும் ஆபத்தான பூரனையும் வெளியே அனுப்ப சேப்பாக்கத்தில் இருந்த அத்தனை மும்பை ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இருந்தாலும் மும்பை ரசிகர்களை உறுத்திக் கொண்டே இருந்த ஒரு விஷயம் களத்தில் ஸ்டாய்னிஸ் இருந்ததுதான். மும்பைக்கு ஏதோ நன்றிக்கடன் பட்டது போல ஸ்டாய்னிஸை ரன் அவுட் ஆக்கி விட்டார் ஹூடா. கண்மூடி முடிப்பதற்குள்ளே மீண்டும் மற்றொரு ரன் அவுட் நடந்தது.

இந்த முறை அவுட் ஆனவர் கௌதம். இரண்டு ரன் அவுட்டுகளை பார்த்த ஹுடாவுக்கும் ஆசை வந்து அவரும் ரன் - அவுட் ஆகியே வெளியேறினார். கடைசி நேரத்தில் மத்வால் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மத்வால் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்டநாயகன் ஆனார்.
ஆட்டம் முடிந்து மத்வால், பாட்ஷா படத்தில் ரஜினி கையில் பலர் முத்தமிடுவது போல ரோகித் கையில் முகம் புதைத்தது இணையம் முழுக்க வைரல் ஆனது. மோசமான கேப்டன் என்று விமர்சிக்கப்பட்ட ரோகித் தனது அணியுடன் தற்போது குவாலிபையர் 2 போட்டியில் குஜராத்தை சந்திக்கத் தயாராக உள்ளார்.
குவாலிபையர் 2 போட்டியில் வெல்லப்போவது குஜராத் டைட்டன்ஸ் அணியா அல்லது மும்பை இந்தியன்ஸ் அணியா உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!