பண்டிகை காலத்து திநகர் போல கசகசவென இருக்கிறது ஐ,பி.எல் புள்ளிப்பட்டியல். குஜராத் ப்ளே ஆப் செல்வது உறுதியாகிவிட்ட நிலையில் சென்னைக்கும் அந்த வாய்ப்புகள் பிரகாசமாகவே தெரிகின்றன.
ஆனால் மீதி இரண்டு இடங்களை யார் பிடிப்பார்கள் என்பது தேர்தல் நேரத்தில் தமிழக காங்கிரஸுக்குள் நடக்கும் தொகுதிப் பங்கீடு போல குழப்பக் காக்டெயிலாகவே இருக்கிறது. லீக் போட்டிகள் முடிய பத்து நாள்களே இருக்கும் நிலையில் இன்னும் எந்த அணியும் உறுதியாய் தொடரிலிருந்து வெளியேறாமல் இருப்பது அநேகமாய் இதுவே முதன்முறை. இந்த வாரம் நடக்கும் ஒவ்வொரு போட்டியுமே அணிகளின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் என்பதால் எதிர்பார்ப்புகளும் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது. அப்படியொரு சூழலில்தான் சந்தித்துக்கொண்டன பஞ்சாப்பும் கொல்கத்தாவும்.

ஹோம் அட்வான்டேஜ் என்கிற பதமே இந்த சீசனில் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆர்.சி.பிக்கு அது எந்தக் காலமும் இருந்ததில்லை என்பதால் அதை விட்டுவிடலாம். ஆனால் மும்பை, லக்னோ, கொல்கத்தா, குஜராத் என முக்கால்வாசி அணிகளுக்கு ஹோம் அட்வான்டேஜ் கைகொடுக்கவில்லை. ரோஹித் சர்மாவே கடந்த போட்டியில் இதைச் சொல்லியிருந்தார். ஆளானப்பட்ட சென்னைக்கே ஆடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் அடி. எனவே கிட்டத்தட்ட சமதளத்தில் நின்றபடி ஈடன் கார்டனில் மல்லுகட்டத் தயாராகின கொல்கத்தாவும் பஞ்சாப்பும்.
டாஸ் வென்ற ஷிகர் தவான் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம். ஷார்ட்டுக்கு பதில் பனுகா ராஜபக்சே. கொல்கத்தா அணியில் எந்த மாற்றங்களுமில்லை.
வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார் ப்ரப்சிம்ரன் சிங். மூன்றுமே சரியான கிரிக்கெட்டிங் ஷாட்கள். ஹர்ஷித் ராணாவின் அடுத்த ஓவரில் இரண்டு முறை தவானும் அதையே செய்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை இறங்கி வந்து ப்ரப்சிம்ரன் லெக் சைடில் தட்டப்பார்க்க அது எட்ஜில் பட்டு கீப்பரிடம் போனது.
பறந்து தட்டுத் தடுமாறி பிடித்து மீண்டும் காற்றில் பறக்கவிட்டு அப்படியே முன்னால் கரணம் அடித்து வித்தை காட்டி கேட்ச் பிடித்தார் கீப்பர் குர்பாஸ்.
வைபவ்வின் அடுத்த ஓவரில் ரன்ரேட் மட்டுப்பட்டது. கடந்த சீசனில் வெளுத்து வாங்கிய ராஜபக்சே இந்தப் போட்டியில் தடுமாற்றத்தோடே பந்தை எதிர்கொண்டார். அதுவும் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. முந்தைய விக்கெட் போலவே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். பவர்ப்ளேயில் திடீரென ரஸலை பௌலிங் போட இறக்கினார் நிதிஷ் ராணா. ஸ்லாட்டில், ஷார்ட் லென்த்தில் போடும் ரஸலை பீல்டிங் கட்டுப்பாடுகள் இல்லாத பவர்ப்ளேயில் போடவிட்டால் ரன் வராமல் இருக்குமா? அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள். ஸ்கோர் ஐந்து ஓவர்கள் முடிவில் 51/2.

ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் வருணை இறக்கினார் ராணா. கைமேல் பலன். லெக் பிரேக்கில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார் லிவிங்ஸ்டன். பவர்ப்ளே தாண்டியதும் எஞ்சிய ஓவர்களை ஸ்பின்னை வைத்து இறுக்கிப்பிடிப்பதே இந்த சீசனில் கொல்கத்தாவின் தந்திரமாக இருக்கிறது. சுயாஷ், நரைன், வருண் மூவரை வைத்தே மிடில் ஓவர்களை மொத்தமாய் நகர்த்தினார் ராணா. அதிகபட்சமாய் 11,12வது ஓவர்களில் தலா 11 ரன்கள். அந்த ஒன்பது ஓவர்களில் மொத்தமாய் 66 ரன்கள். நடுவே ஜிதேஷ் சர்மாவும் அதே போல கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி இருந்தார்.
15வது ஓவர் சட்டத்தைக் கையிலெடுத்து களமிறங்கினார் நிதிஷ் ராணா. வித்தியாசமான பௌலிங் ஸ்டைல் ராணாவுடையது. நின்றபடி அவர் வீசிய ஃபுல் லென்த் பந்தை தவான் தவறாய்க் கணிக்க அது அரோரா கையில் தஞ்சமடைந்தது. 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்த தவான் பெவிலியனில். அடுத்த மூன்று ஓவர்களும் மீண்டும் ஸ்பின். ஆளுக்கொரு ஓவர். மொத்தமாய் 19 ரன்கள். இரண்டு விக்கெட்கள்.
கடைசி இரண்டு ஓவர்களில் ஷாருக், ப்ராரின் குட்டி கேமியோக்களில் 36 ரன்கள் வர கெளரவமாய் 179/7 என்கிற ஸ்கோரைத் தொட்டது பஞ்சாப்.

இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே இரு அணிகளும் இம்பேக்ட் பிளேயர்களாய் வெளிநாட்டு வீரர்களை இறக்கின. கொல்கத்தாவில் சுயாஷுக்குப் பதில் ஓபனர் ஜேசன் ராய். பஞ்சாப்பில் ராஜபக்சேவுக்கு பதில் நாதன் எல்லிஸ். ரிஷி தவான் வீசிய முதல் ஓவரில் ஐந்தே ரன்கள். அர்ஷதீப் வீசிய இரண்டாவது ஓவரிலும் அதே. மூன்றாவது ஓவரிலிருந்து கியரை மாற்றினார்கள் கொல்கத்தா ஓபனர்கள்.
அந்த ஓவரில் ராய் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸும் ஒரு பவுண்டரியுமாய் தன் கணக்கைத் தொடங்கினார் குர்பாஸ். நாதன் எல்லீஸ் வந்துதான் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டியதாய் இருந்தது. படு ஸ்லோவாய் வந்த பந்தை பேடில் வாங்கி எல்.பி.டபிள்யூ ஆனார் குர்பாஸ்.
பவர்ப்ளேயின் கடைசி ஓவர் சுட்டிக்குழந்தை. பாவம் என்றும் பாராமல் பிரித்தெடுத்தார்கள் அவரை. 13 ரன்கள். ஸ்கோர் ஆறு ஓவர்கள் முடிவில் 52/1. லிவிங்ஸ்டன் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ராய். சுழலுக்கு எதிராய் இந்த சீசனில் 229 என்கிற ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் ராயை ப்ராரின் ஸ்பின்னைக் கொண்டு பெவிலியனுக்கு அனுப்பினார் தவான். அடுத்த இரண்டு ஓவர்கள் ரன்ரேட் அப்படியே மட்டுப்பட்டது. ஸ்கோர் பத்து ஓவர்கள் முடிவில் 76/2. அதற்கும் சேர்த்து 11வது ஓவரில் அடித்துத் துவைத்தார்கள். லிவிங்ஸ்டன் வீசிய அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள். ஒருபக்கம் கரன், லிவிங்ஸ்டன் ஆகியோரை கொல்கத்தா கேப்டன் ராணா பிரிக்க இன்னொருபக்கம் டேமேஜ் கன்ட்ரோல் செய்துகொண்டிருந்தார் ராகுல் சஹார். வெங்கடேஷ் ஐயரின் விக்கெட் வெகுமதியாய்க் கிடைத்தது அவருக்கு.

தேவைப்படும் ரன்ரேட் அதிகமென்பதால் ஐந்தாவதாய் களமிறங்கினார் ரஸல். இதற்கிடையே அரைசதம் அடித்த கையோடு சஹாரிடம் வீழ்ந்தார் ராணா. அந்த ஓவர் முடிவில் ஸ்கோர் 129/4. தேவை நான்கு ஓவர்களில் 51 ரன்கள். களத்திலிருந்தது அதிரடிக்குப் பெயர் போன ரஸலும் அவரின் வாரிசாய் உருவெடுத்துவரும் ரிங்கு சிங்கும். 17வது ஓவரிலேயே 15 ரன்கள் அடித்து காற்று யார் பக்கம் என சாம்பிள் காட்டினார்கள். 18வது ஓவரில் 10 ரன்கள்.
இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்கிர நிலையில் பவுலிங் போட வந்தார் சாம் கரன். இரக்கமே காட்டவில்லையே ரஸல். பளார் பளார் என மூன்று பிரமாண்ட சிக்ஸ்கள். மொத்தமாய் 20 ரன்கள் வந்தது அந்த ஓவரில். ஆறே ரன்கள் தேவை என்கிற நிலையில் முதல் நான்கு பந்துகளை அற்புதமாய் வீசினார் அர்ஷதீப். நான்கு ரன்கள் மட்டுமே. ஐந்தாவது பந்தில் ரஸலை அவர் ரன் அவுட்டும் செய்ய இதயத்துடிப்புகள் எகிறின.

ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்கிற நிலையில் ஃபுல் டாஸ் பந்தை டீப் பைன் லெக் பக்கம் திருப்ப பவுண்டரி. ரிங்கு கையால் மீண்டுமொரு வெற்றி கொல்கத்தாவுக்கு. 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த ரஸல் ஆட்டநாயகன்.

ஒரு வெற்றி பஞ்சாப்பை அலேக்காய் தூக்கி மூன்றாவது இடத்தில் அமர வைத்திருக்கும் என்கிற நிலையில் இப்போது ஐந்து அணிகள் தலா பத்துப் புள்ளிகளோடு நெருக்கியடித்தபடி அமர்ந்திருக்கின்றன. கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் டெல்லியும் ஹைதராபாத்தும் கூட பத்து புள்ளிகளைப் பெற ஒரு வெற்றி தேவை என்கிற நிலையில்தான் இருக்கின்றன.
கடந்த சில போட்டிகளின் முடிவுகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் குஜராத், சென்னை அணிகளுக்கு சாதகமாக முடிந்திருக்கும் நிலையில் இந்த வார முடிவில் எந்தெந்த அணிகள் முதலில் வெளியேறுகின்றன என்பது தெரிந்துவிடும்.