Published:Updated:

KKR v RR: `தவ்ளூண்டு ஆங்கர்தான்,அவ்ளோ பெரிய கப்பலையே நிறுத்துது'- மிரட்டிய ஜெய்ஸ்வால்; வென்ற ஆர்ஆர்

ஜெய்ஸ்வால்

`அணியின் நெட் ரன்ரேட் உயரவேண்டும் என்று மட்டுமே நான் நினைத்தேனே தவிர என் சதத்தைப் பற்றியல்ல' - ஜெய்ஸ்வால்

Published:Updated:

KKR v RR: `தவ்ளூண்டு ஆங்கர்தான்,அவ்ளோ பெரிய கப்பலையே நிறுத்துது'- மிரட்டிய ஜெய்ஸ்வால்; வென்ற ஆர்ஆர்

`அணியின் நெட் ரன்ரேட் உயரவேண்டும் என்று மட்டுமே நான் நினைத்தேனே தவிர என் சதத்தைப் பற்றியல்ல' - ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால்
`தீவிர பயிற்சி பெற்ற ஆனால், களத்தில் ஒருநாளும் வெல்லாத ஒரு போர் வீரன் உயிரோடு இருக்கிற வரையில் அவன் தோற்றுவிட்டான் என முத்திரை குத்த முடியாது. ஒரு சந்தர்ப்பம், ஒரு போர்க்களம், ஒரு வாள்வீச்சு அவனுக்கு வெற்றியை அளித்துவிடும். அவன் களத்தில் நின்று வென்றுவிடுவான். தேர்ந்த பயிற்சியையும், திடமிக்க மனஉறுதியையும்விட வெற்றி கிடைத்தற்கு அரியதல்ல!' - எழுத்தாளர் ஜெயகாந்தன்.
ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால்
ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால்

கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டுகளில் எந்த ஒரு தனிப்பட்டவரின் வெற்றியும் அணியின் வெற்றியே. போலவே தனி ஒருவரின் சாதனையும் அவனுக்கானது மட்டுமே அல்ல. `It's okay but standing in a winning side is more important' எனப் பல வீரர்களும் சொல்லிக் கேட்டிருப்போம். அணி தோல்வியுற்ற நிலையில் ஆட்ட நாயகன் விருது பெறும் எந்த ஸ்போர்ட்ஸ் மேன்னும் பெரும் மகிழ்ச்சி கொள்வதில்லை. தன் அணிக்காக விளையாட வேண்டும், வெல்ல வேண்டும் என்பது மட்டுமே ஒரு தேர்ந்த ஆட்டக்காரனின் மனநிலையாக இருக்கும். ஒவ்வொரு ஆட்டக்காரனுக்கும் தான் நின்று விளையாடி தன் திறமையால் தன் அணி வெல்ல வேண்டும் என்கிற ஆசையிருக்கும். அப்படி தன் அணிக்காக வெற்றியைப் பெற்றுத்தருகிற தருணம் மறக்க முடியாத தருணமாக இருக்கும். அதுவரை அனுதினமும் மேற்கொண்ட பயிற்சி, கற்ற துல்லியம் கைவரப்பெறும். இழப்பு, அவமானம் என முந்தைய காலகட்டத்தின் அத்தனையும் ஒரு நொடியில் மாறிப்போகும். யஸ்ஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நேற்று அப்படியான ஒருதினம்.

ஒல்லியான தேகம், போஷாக்குகள் ஊட்டி வளர்க்கப்பட்ட குழ்ந்தையல்ல. வாய்ப்புகளைப் பெற கடினமாகப் போராடி கிரவுண்டிலேயே தங்கி பயிற்சி பெற்றவர் என ஜெய்ஸ்வாலின் முன்கதை பலரும் அறிந்ததே. ஆனால், இனி இவரின் முன்கதை பானிப்பூரி விற்றதோ, வாட்ச்மேன் அறையில் தங்கி பயிற்சி பெற்றதோ மட்டுமல்ல. மிகக் குறைந்த பந்தில் ஐ.பி.எல்லின் அரைசதம் அடித்தது. யாருடைய பந்துவீச்சாக இருந்தாலும் பயப்படாமல் பறக்கவிடும் திறன். எத்தனை பெரிய இலக்காக இருந்தாலும், ஜெய்ஸ்வால் இருக்கும் வரையில் சாத்தியம் என நம்பிக்கை கொள்கிற அணியினரின் எண்ணம், இவையும் ஜெய்ஸ்வால் என்றதும் இனி நினைவில் வரப்போகிற ஒன்றாக இருக்கும்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

கடைசி 6 போட்டிகளில் தோல்வி. 4 போட்டிகளில் தொடர் தோல்வி. பேட்டிங் தவறை சரிசெய்து 200 ரன்களைத் தொட்டால், பௌலிங்கில் சொதப்பலாகி தோல்வி, பீல்டிங்கில் வெளிப்படாத தன்னம்பிக்கை என ராஜஸ்தான் தடுமாறிக் கொண்டிருந்தது. நல்ல பேட்டிங் லைன் அப், திறமையான பௌலர்கள் என இருந்தும் அந்த அணிக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒரு வெற்றி. நம்பிக்கை. இழந்த அந்த உத்வேகம். இந்த மூன்றும் நேற்று ராஜஸ்தான் அணிக்குக் கிடைத்திருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ், நேற்று தன்னை முற்றிலுமாக புதுப்பித்துக் கொண்டு களமிறங்கியது. இந்த முறை டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சேஸிங்கைத் தேர்வு செய்தார். `கடந்த தோல்விகளை மறக்க முடியாது.அதே சமயம் விளையாட்டு வீரர்களாக தோல்வியை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதும் முக்கியம். நாங்கள் இன்று சேஸ் செய்வோம்!' எனக் கூறி சேஸிங் செய்ய ஆயத்தமானார் சஞ்சு சாம்சன். அணியில் போல்ட், ஆசிப் இருவரும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆட்டத்தின் முதல் ஓவர் தொடங்கி ராஜஸ்தான் அணியின் வீரர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

சஹல் - ஜெய்ஸ்வால்
சஹல் - ஜெய்ஸ்வால்

அணிக்குத் திரும்பியிருந்த போல்ட் தனது அனுபவமிக்க பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ராய்க்கு ஹெட்மயர் பிடித்த கேட்ச், சந்தீப் சர்மா குர்பாசுக்குப் பிடித்த கேட்ச், சாஹலின் பெளலிங் என அனைத்திலும் பாசிட்டிவ். 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணியினரால் 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரசல், ரிக்கு சிங், ராணா என நட்சத்திர பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தி பெவிலியனுக்கு அனுப்பியிருந்தனர் ராஜஸ்தான் பௌலர்கள். வெங்கடேஷ் ஐயர் மட்டுமே 57 ரன்கள் எடுத்து வலுசேர்த்திருந்தார். ராஜஸ்தான் தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகளும், சஹல் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். குறிப்பாக டெத் ஓவர்களில் சஹலின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

அதற்குப் பிறகு பேட்டிங் செய்ய வந்தனர் ராஜஸ்தான் அணி வீரர்கள். முதல் ஓவரை கொல்கத்தா அணியின் கேப்டன் நித்திஷ் ராணா வீசினார் ஆட்டத்தின் முதல் பந்தையே ஜெய்ஸ்வால் சிக்சருக்கு விளாச பந்து வீச்சின் பாசிட்டிவ் அப்ரோச் பேட்டிங்கிலும் தொடர்ந்தது.

முதல் ஓவரிலேயே 26 ரன்களை விளாசி எடுத்தார் ஜெய்ஸ்வால். அதற்கு அடுத்த ஓவரிலும் ரன் மழை தொடர பவர்ப்ளேயை சரியாகப் பயன்படுத்தி வெறும் 13 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து ஐ.பி.எல்-லின் அதிவேக அரைசதம் அடித்தவர் என்கிற சாதனையைப் படைத்தார். பட்லருக்கு தவறான கால் செய்து ரன் அவுட் ஆக வகை செய்ததாலோ என்னவோ! பட்லர் அடிக்க வேண்டியதையும் சேர்த்து ஒற்றை ஆளாக அடித்து முடித்தார். ஒவ்வொரு ஷாட்களிலும் அவரிடம் வெளிப்பட்ட தன்னம்பிக்கை அளப்பறியது. தோல்வியிலிருந்து மீளக் காத்திருக்கும் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தரவேண்டிய உத்வேகத்துடன் ஆடினார். இந்த சீசனில் பலரையும் ஆச்சர்யப்படுத்திய வீரர்களில் மிக முக்கிய இடத்தைப் பெற்ற ஜெய்ஸ்வால், நேற்றைய ஆட்டத்தில் அதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். `அணியின் நெட் ரன்ரேட் உயரவேண்டும் என்று மட்டுமே நான் நினைத்தேனே தவிர என் சதத்தைப் பற்றியல்ல' எனச் சொன்ன ஜெய்ஸ்வால் இறுதி வரை அணிக்காக நின்று விளையாடி வெற்றி பெறச் செய்வதுதான் என் இலக்கு எனத் தெரிவித்திருந்தார். அனுபவமிக்க பல வீரர்கள் ஐ.பி.எல்- மேட்ச் வின்னர்களாக இருந்திருக்கிறார்கள். மிகச் சிறிய வயதில் அந்த பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் ஜெய்ஸ்வால்.

ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன்
ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன்

தன் பர்பெக்ட் ஷாட்களால் 5 சிக்சர்கள் விளாசிய சஞ்சு சாம்சன், கடைசியில் வைட் பந்தை பீட்டன் செய்து சிக்ஸர் அடிக்கச் சொல்லி ஜெயஸ்ஸ்வாலை அழைத்தார். ஆனால் பவுண்டரி மட்டுமே ஜெய்ஸ்வால் விளாச 13.1 ஓவரில் 150 ரன்களை எடுத்து இமலாய வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஜெய்வால் எடுத்த 98 ரன்கள் அவருக்கு மட்டுமல்ல அணிக்கும் மிக முக்கியமான ஒன்று. வெற்றி பெற்ற ஆக வேண்டிய சூழலில் இப்படியான ஒரு வெற்றி அணிக்கு பெரிய உத்வேகத்தை அளித்திருக்கும். தோல்வியுற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ராணாவும்கூட ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கைப் பற்றியே பேசினார். சீனியர் பிளேயர்கள் தொடங்கி பலரும் ஜெய்ஸ்வாலை பாராட்டி வருகின்றனர். இந்திய இளம் வீரர் ஒருவர் திறம்பட விளையாடுவது இந்திய அணிக்கும் நல்லது என்கிற மனநிலையே பலருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும்.

சஞ்சு சாம்சன் சொன்னதைப் போல இனி வரும் ஒவ்வொரு போட்டியும் ராஜஸ்தான் அணிக்கு மிக முக்கியம். லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்க ஒவ்வொரு அணியும் தங்களின் முழு திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ப்ளே ஆப்பில் நுழைந்திட அனைத்து அணிகளும் போட்டிபோட இனிவரும் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாகவே இருக்கும்.

ப்ளே ஆப் செல்லப்போகும் வாய்ப்புள்ள அணிகள் எவை என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!