ராஜஸ்தான் அணி நிர்வாகம் ட்விட்டரில் 'எல் க்ளாசிக்கோ' என ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அந்த பதிவிற்கு கீழ் 'ஏன்ய்யா பஞ்சாபும் ராஜஸ்தானும் ஆடுறதெல்லாம் எல் க்ளாசிக்கோன்னு சொல்லி அதுக்குண்டான மரியாதையையே கெடுத்துட்டியே' எனப் பலரும் பொங்கியிருந்தார்கள். ஆனால், உண்மையிலேயே ஐ.பி.எல் ஐ பொறுத்தவரை சென்னை Vs மும்பை ஒரு எல் க்ளாசிக்கோ என்றால் ராஜஸ்தான் Vs பஞ்சாபை ஒரு குட்டி எல் க்ளாசிக்கோ என்று கூட சொல்லலாம். அந்த அணிகள் ஆடிய பழைய போட்டிகளைப் பார்த்தால் இது புரியும்.
நேற்றும் ஒரு எல் க்ளாசிக்கோவிற்கான அத்தனை சுவாரஸ்யத்தையுமே அந்தப் போட்டி உள்ளடக்கியிருந்தது. கடைசி ஓவர் வரை திரில்லாக சென்ற அந்தப் போட்டியை பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 197 ரன்களை எடுத்திருந்தது. டார்கெட்டை நோக்கி சேஸ் செய்த ராஜஸ்தான் அணியால் 192 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 190+ ரன்களை எடுப்பதற்கு அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவானும் பிரப்சிம்ரன் சிங்கும்தான் மிக முக்கிய காரணமாக இருந்தனர். பிரப்சிம்ரன் சிங் தொடக்கத்திலிருந்தே நல்ல அதிரடியாக அரைசதத்தை எட்டி பஞ்சாபிற்கு ஒரு உத்வேகமளிக்கக்கூடிய மொமன்ட்டத்தைக் கொடுத்தார். பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடிக்கு ஒத்துழைக்கும் வகையில் இன்னொரு முனையில் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்த தவான், செட்டிலான பிறகு அதிரடியாக ஆடத் தொடங்கினார். எதிர்கொண்ட முதல் 29 பந்துகளில் 29 ரன்களை எடுத்திருந்த தவான் கடைசி வரை நாட் அவுட்டாக இருந்து இன்னிங்ஸை முடிக்கையில் 56 பந்துகளில் 86 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 153.57. பஞ்சாப் அணி இத்தனை பெரிய ஸ்கோரை எடுத்ததற்கு இவர்கள் இருவருமேதான் பிரதான காரணம்.

பஞ்சாபின் பேட்டிங் சிறப்பாக இருந்த அளவுக்கு பௌலிங்கும் ஃபீல்டிங்கும் சிறப்பாக அமையவில்லை. நாதன் எல்லீஸ்தான் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி எக்கனாமிக்கலாகவும் பந்துவீசியிருந்தார். டெத் ஓவரிலெல்லாம் பயங்கர அடி வாங்கியிருந்தார்கள். கடைசி ஓவரில் எப்படியோ சாம் கரன் சமாளித்துவிட்டார். ஃபீல்டிங்கில் பல கேட்ச்சுகளையும் மிஸ் ஃபீல்ட்களையும் செய்திருந்தனர். ஆனால், இத்தனைக்குப் பிறகும் ராஜஸ்தான் அணியால் வெல்ல முடியவில்லை. அந்த அணியின் சார்பிலும் சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக், ஜூரேஷ் ஆகியோர் சிறப்பாகத்தான் ஆடியிருந்தனர். ஆனாலும் டார்கெட்டுக்கு நெருக்கமாகத்தான் வந்திருந்தார்களே தவிர, டார்கெட்டை எட்டிப்பிடிக்க முடியவில்லை.
ராஜஸ்தான் அணியின் தோல்விக்கான மிக முக்கிய காரணமாக தேவ்தத் படிக்கலைத்தான் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். அத்தனை வீரர்களும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்க படிக்கல் மட்டும் 80 ஸ்ட்ரைக் ரேட்டில் ரொம்பவே மெதுவான ஒரு இன்னிங்ஸை ஆடியிருந்தார். பவர்ப்ளேக்குள்ளேயே க்ரீஸூக்குள் வந்தவர் 15வது ஓவரில்தான் அவுட் ஆகியிருந்தார். அத்தனை ஓவர்களுக்கு க்ரீஸில் நின்ற போதும் 26 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை மட்டும்தான் அடித்திருந்தார். கடைசியில் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்றதை பார்க்கையில் தேவ்தத் படிக்கல் ஒரு 100-120 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தால் கூட ராஜஸ்தான் வென்றிருக்கக்கூடும்.
இந்த கோணத்தில் பார்த்தால் தோல்விக்கான பழி மொத்தத்தையும் படிக்கலின் மீதே சுமத்திவிடலாம். ஆனால், இதை அப்படி மட்டுமே பார்ப்பது சரியாக இருக்காது. தேவ்தத் படிக்கல் சரியாக பெர்ஃபார்ம் செய்யாமல் போனதற்கு அவர் மட்டுமே காரணமல்ல. அணியின் கேப்டனும் பயிற்சியாளர்களுமே கூட இதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும்.

தேவ்தத் படிக்கலை நம்பர் 4 பேட்டராக ராஜஸ்தான் அணி பார்க்கிறது. அப்படித்தான் அவரைப் பயன்படுத்தியும் வருகிறது. நேற்றைய போட்டியில் எல்லாம் அஷ்வினை ஓப்பனராக்கிவிட்டு படிக்கலை நம்பர் 5 பேட்டராக்கியிருந்தார்கள். ஆனால், தேவ்தத் படிக்கல் இந்த மிடில் ஆர்டருக்கான வீரரே கிடையாது. ஓப்பனிங்கில் இறங்கி மரபார்ந்த முறையில் ஆடக்கூடியவர். உள்ளூர் தொடர்களில் கர்நாடகா அணிக்காவும் அப்படித்தான் ஆடியிருக்கிறார். ஐ.பி.எல் இல் பெங்களூர் அணிக்காகவும் அப்படித்தான் ஆடியிருக்கிறார். பெங்களூர் அணிக்காக ஓப்பனிங் இறங்கி படிக்கல் ஆடிய ஆட்டம்தான் அவருக்கு அடையாளத்தையே கொடுத்தது. அதை வைத்துதான் ராஜஸ்தான் அணியும் அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால், அவரை இப்போது மிடில் ஆர்டர் பேட்டராகப் பயன்படுத்தியிருக்கின்றனர். டி20 யில் அவர் அடித்திருக்கும் சதங்கள் அரைசதங்கள் பெரும்பாலும் ஓப்பனிங்கில் இறங்கிய போதுதான் அடிக்கப்பட்டன. கடந்த சீசனிலுமே நம்பர் 4-ல் தான் இறங்கியிருந்தார். சீசன் முழுக்கவும் சேர்த்தே ஒரே ஒரு அரைசதம் மட்டும்தான் அடித்திருந்தார். மேலும், படிக்கல் அத்தனை பெரிய அதிரடி வீரரெல்லாம் கிடையாது.

120-130 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவதுதான் அவரது வழக்கம். இப்படிப்பட்ட ஒரு வீரரை 190+ சேஸிங்கின் போது நம்பர் 5-ல் இறக்கியதே பெரும் குற்றம். ஆக, தேவ்தத் படிக்கலை எந்தளவுக்கு விமர்சிக்கிறோமோ அதே அளவுக்கு அவரை மிடில் ஆர்டரில் இறக்கலாம் என எடுக்கப்பட்ட அந்த முடிவையும் நாம் விமர்சித்தாக வேண்டும்.
அடுத்தடுத்தப் போட்டிகளிலாவது ராஜஸ்தான் அணி படிக்கலை டாப் ஆர்டருக்கு மாற்றுகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.