சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 77 ரன்களை 43 பந்துகளில் எடுத்து அசத்தினார், யாஷஸ்வி ஜெய்ஸ்வால். தனது 21வது வயதில் இப்படியொரு வியக்கத்தக்க இன்னிங்ஸை ஆடியிருக்கின்றார். இவரின் அதிரடியால் பவர்-பிளே ஓவர்களில் ரன்கள் தாறுமாறாக வந்தது.
குட்டி கங்குலியைப் போல காட்சியளித்த ஜெய்ஸ்வால் ஏறக்குறைய கங்குலி எதிரணியினருக்கு எந்தளவுக்கு மிரட்சியை கொடுப்பாரோ அதே அளவுக்கான மிரட்சியை கொடுத்திருந்தார். ஐ.பி.எல் எனும் பெரும் வெளிச்சத்தில் இன்று மிளிரும் ஜெய்ஸ்வாலின் பின்னணி அத்தனை பிரகாசமானது கிடையாது. இந்த இடத்தை அவர் அடைய கடந்து வந்த பாதை கரடு முரடானது.

மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து வந்த ஜெய்ஸ்வால், கிடைக்கும் வாய்ப்புகளை உறுதியாக பற்றிக் கொண்டு தன்னம்பிக்கையுடனும் பெரும் உந்துதலுடனும் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவர், 28 டிசம்பர் 2001 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் சூரியவான் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தையான பூபேந்திர ஜெய்ஸ்வால் ஒரு சிறிய ஹார்டுவேர் கடையை நடத்தி வந்துள்ளார். இவரது தாயார் கஞ்சன் ஜெய்ஸ்வால். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிறந்தார்.
தனது பத்து வயதில், ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக மும்பையில் உள்ள தாதர் பகுதியில் குடிபெயர்ந்தார். பிறகு, கல்பாதேவி என்ற இடத்திற்கு மீண்டும் இடம்பெயர்ந்தார். கிரிக்கெட் பயிற்சிக்கு பணம் சேர்ப்பதற்காக, ஒரு பால் நிலையத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார். ஒருபுறம் வறுமை அதிகரித்துக் கொண்டே செல்ல, மறுபுறம் இவருக்கு கிரிக்கெட்டின் மீதான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
கடையில் தங்கி வேலை செய்து வந்த இவர், இதற்கிடையில் கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டு வந்துள்ளார். இதனால், கடையில் அதிக நேரம் வேலை செய்ய முடியாமல் போனது. அதனால் ஒரு கட்டத்தில் வேலையை விட்டு வெளியேற்றப்பட்டார்.

எங்கே செல்வதென தெரியாமல் சாலைகளில் அலைந்து திரிந்த இவர், ஆசாத் மைதானத்தில் உள்ள மைதானப் பராமரிப்பாளரின் கூடாரத்தில் தங்கினார். இங்கு தங்கிய படியே, பகுதி நேரமாக பானிபூரி விற்பனையும் செய்து வந்துள்ளார். மூன்று வருடங்கள் இதே இடத்தில் தங்கி கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டார். சிறுவயதிலிருந்து தனக்கு கிடைக்கக்கூடிய சிறு சிறு வேலைகளைச் செய்து கொண்டே, தனது கனவுப் பயணமான கிரிக்கெட்டையும் தொடர்ந்துள்ளார். இவரது கிரிக்கெட் திறமையை ஜ்வாலா சிங் கண்டறிந்ததார். இவர், நடத்தும் மும்பையில் உள்ள கிரிக்கெட் அகாடமியில்தான் ஜெய்ஸ்வால் எனும் வைரம் பட்டை தீட்டப்பட்டது. ஜ்வாலா சிங், தனது பராமரிப்பின் கீழ் பயிற்சி கொடுத்ததுடன் தங்குவதற்கான இடத்தையும் வழங்கியுள்ளார். ஜ்வாலா சிங், இந்த சிறுவனுக்கு கிரிக்கெட் வழிகாட்டியாக மாறினார். ஜெய்ஸ்வால், முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கில்ஸ் ஷீல்ட் போட்டியில் 319 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், இதே போட்டியில் 99 ரன்களை விட்டுக் கொடுத்து 13 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். ஆல்-ரவுண்டராக இவர் படைத்த இச்சாதனை, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றது.

இவர், 2016 ஆம் ஆண்டு, 16 வயதிற்குட்பட்ட மும்பை அணியில் சேர்க்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் தேதியன்று 2018-19 ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக தனது முதல் அறிமுகப் போட்டியில் விளையாடினார். அதே 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் மும்பை அணிக்காக விளையாடினார். இதில்,
ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்து வியக்கவைத்தார். இதன் மூலம், இரட்டை சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அப்போது அவருக்கு வயது, 17 வருடங்கள் 292 நாட்கள் ஆகும். மேலும், இதே தொடரில் 6 போட்டிகளில் விளையாடி, 564 ரன்கள் எடுத்து அசத்தினார்.
2019-20 ஆண்டுக்கான தியோதர் டிராபி தொடரில் இந்தியா B அணியில் இடம் பெற்றார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
உலகக்கோப்பை தொடரில் கலக்கிய இவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. 2020 ஐபிஎல் ஏலத்தில் 2.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.

அறிமுகவீரரான இவருக்கு ஐபிஎல் ஏலத்திலும் கடும் போட்டி நிலவியது. செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறிமுக வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார். ஆனால் இந்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. 2020 ஐபிஎல் தொடரில் வெறும் 3 போட்டியில் மட்டுமே களமிறங்கி 40 ரன்கள் அடித்தார்.
2021 ஐபிஎல் தொடரில் அதே விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார். இந்தத் தொடரில் 10 போட்டிகளில் களமிறங்கி 249 ரன்கள் அடித்தார். இவரின் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் 2022 ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்தது. 2022 ஐபிஎல் ஏலத்தில் 4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வாங்கியது. இத்தொடரிலும் தனது சிறந்த பங்களிப்பை அணிக்கு வழங்கினார். இதில் 10 போட்டிகளில் விளையாடிய இவர், 258 ரன்களை எடுத்திருந்தார்.
இந்த 2023 ஐபிஎல் சீசனில் இவர் எடுத்த விஸ்வரூபம் வேறு. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 304 ரன்களை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இத்தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான, ராஜஸ்தான் ராயல்ஸின் முதல் போட்டியிலேயே 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வியக்கவைத்தார். இந்த சீசனில் இதுவரை 3 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

பசி மட்டுமே அன்றாட சிக்கலாக இருக்கும் ஒரு சிலந்தி வலை போன்ற வாழ்விலிருந்து தன் முயற்சியினால் மட்டுமே தப்பிப்பிழைத்து இப்படி ஒரு நிலையை எட்டியிருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சாமானியர்கள் அத்தனை பேருக்குமான இன்ஸ்பிரேஷன்!