Published:Updated:

RR vs GT: நம்பிக்கை நாயகன் ரஷீத் கான்; பாட்ஷா டு மாணிக்கம் என ராஜஸ்தான் போட்ட ரிவர்ஸ் கியர்!

ரஷீத் கான் | RR vs GT

ரஷீத் கான் பேசும் போது, தற்போது ஆப்கானிஸ்தானில் ஆயிரம் சுழற் பந்து வீச்சாளர்களாவது இருப்பார்கள் எனக் கூறினார்.

Published:Updated:

RR vs GT: நம்பிக்கை நாயகன் ரஷீத் கான்; பாட்ஷா டு மாணிக்கம் என ராஜஸ்தான் போட்ட ரிவர்ஸ் கியர்!

ரஷீத் கான் பேசும் போது, தற்போது ஆப்கானிஸ்தானில் ஆயிரம் சுழற் பந்து வீச்சாளர்களாவது இருப்பார்கள் எனக் கூறினார்.

ரஷீத் கான் | RR vs GT
முதல் பகுதியில் மாணிக்கமாக இருந்துவிட்டு அடுத்த பகுதியில் பாட்ஷாவாக மாறினால் அது `பாட்ஷா' படத்தின் கதை. அதுவே முதல் பகுதியில் பாட்ஷாவாக இருந்துவிட்டு அடுத்த பகுதியில் சாதாரண மாணிக்கமாக மாறினால் அது ராஜஸ்தானின் கதை. அதுவும் நேற்றெல்லாம் கம்பத்தில் கட்டப்பட்டு அடிவாங்கும் ரஜினி போல நிராயுதபாணியாகச் சிரித்துக்கொண்டே அவ்வளவு பெரிய அடியை வாங்கியது ராஜஸ்தான்.‌
RR vs GT
RR vs GT

ஜெய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. குஜராத் அணியின் பலம் முதல் நான்கு ஓவர்களில் வீசப்படும் ஷமியின் டாப் குவாலிட்டி பௌலிங்.‌ அதேபோல் ராஜஸ்தானின் பலம் எதிரே எந்த பந்துவீச்சாளர் இருந்தாலும் தைரியமாக அடித்து ஆடும் அதிரடி.‌ இந்த இருவரும் மோதிக் கொள்வதால் மிகச் சிறப்பான ஆட்டமாக இருக்கும் என்று பலரும் நம்பிக் காத்திருந்தனர்.

ஷமி வழக்கம் போல அட்டகாசமாக வீசினார். பாண்டியா ஓவரில் பட்லர் இரண்டு பவுண்டரிகள் அடித்த பின்னரும் தேவையற்ற‌ ஷாட் ஒன்று ஆடி ஆட்டமிழந்தார். ஷமி வீசிய அடுத்த ஓவரிலேயே அற்புதமான சிக்ஸர் ஒன்றைப் பறக்கவிட்டார் ஜெயிஸ்வால். மீண்டும் ஓர் அதிரடியை காண‌ ஆசையாய் இருந்தனர் ரசிகர்கள். ஆனால் புத்தர்‌‌ பிறந்த தினமான நேற்று இப்படி‌ ஆசைப்படுவதுதான் துன்பத்துக்குக் காரணம் என்ற‌ தத்துவத்தை நிறுவும் வண்ணம், வாயடைத்து போகும் அளவிற்கான ஒரு ரன் அவுட் ஆனார் ஜெய்ஸ்வால்.

RR vs GT
RR vs GT

சாம்சன் வழக்கம் போல நல்ல பந்துகளை எல்லாம் சமாளித்து‌ விட்டு, அடிக்க சிரமமே‌ இல்லாத ஒரு பந்தைத் தேடிப் பிடித்து அதில் ஆட்டமிழந்தார். சாம்சன் அவுட் ஆனதும் அஷ்வின் மற்றும் படிக்கல் களத்தில் இருந்தனர்.‌ இதே சமயத்தில்‌‌ ரஷீத் கான் பந்து வீச வந்தார்.‌ உலகத்தர பேட்டிங் வீரர்களையே 'அப்படி ஓரமா போ' என்று டீல் செய்பவர் ரஷீத் கான். அஷ்வின் எல்லாம் கிடைத்தால் விடுவாரா? மூன்றே பந்துகள்.‌ அஷ்வினால் ஒன்றைக் கூடத் தொட முடியவில்லை. மூன்றாவது பந்தில் பவுல்டானார். எந்தத் திட்டமும் சரிவரவில்லை என்று ராஜஸ்தானின் செல்ல பிள்ளையான ரியான் பராகை 'Impact வீரராக' அனுப்பிப் பார்த்தது நிர்வாகம். "பெரிய ஆள் யாராச்சு இருந்தா கூப்ட்டு வாப்பா" என்று அவரையும் 4 ரன்களில் அனுப்பி வைத்தார் ரஷீத் கான்.

ரஷீத் இப்படி விக்கெட்டுகளை அள்ளியதைப் பார்த்து மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதும் ஆசைப்பட, அவர் கையில் பந்தைத் தந்தார் கேப்டன் பாண்டியா.‌ அவர் பங்குக்கு இரண்டு‌ விக்கெட்டுகளை‌ எடுத்தார்‌ நூர். அதிரடி வீரர்‌ ஜூரலும் அதில் அடக்கம். கடைசி நம்பிக்கை ஹெட்மயரும் ரஷீத் கானிடம் அவுட் ஆக, ராஜஸ்தான் துவண்டு போனது.

சாம்சன் அவுட்டான பிறகு ஆட்டத்தில் நடந்த ஒரே சுவாரஸ்யம் என்னவென்றால் ரஷீத் பந்தில் போல்ட் அடித்த சிக்ஸர்தான். அது கேமராமேனைத் தாக்க ரஷீத் கானே ஓவர் முடிந்த பிறகு ஓடிச் சென்று கேமராமேனை நலம் விசாரித்தார்.‌ 18 ஓவர்களிலேயே 118 ரன்களில் ஆல் அவுட் ஆனது ராஜஸ்தான். இரண்டு ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களும் இணைந்து மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
RR vs GT
RR vs GT

தொடர்ந்து ஆடிய குஜராத் ஆரம்பத்தில் விக்கெட் போகாமல்‌ மிக கவனமாக ஆடியது. அதுவும் குறிப்பாக போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை விடாமல் ஆடுவது எப்படி என‌ப் பல அணிகளுக்கு கற்றுக் கொடுத்தது‌ சஹா - கில் இணை. ஒரு விக்கெட் கூட போகாத நிலையிலும் கடைசிவரை அஸ்வினைப் பயன்படுத்தவே இல்லை சாம்சன். இந்த வித்தியாசமான கேப்டன்சியை‌ பயன்படுத்தி எளிதாக ஆட்டத்தை முடித்தது குஜராத். ஒரே விக்கெட்டாக சஹால் பந்தில் கில் மட்டும்‌ 36 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

கடந்த ஆட்டத்தில் மெதுவாக ஆடியதாக விமர்சனம் எழுந்த நிலையில் அதை இந்தப் போட்டியில் மாற்றினார் பாண்டியா. 15 பந்துகளில்‌ 39 ரன்கள் எடுத்து நல்ல ரன்‌‌ரேட்டையும் தனது அணிக்குப் பெற்று தந்தார். ராஜஸ்தானின் தோல்வியால் புள்ளிப்பட்டியல் மேலும்‌‌ சிக்கலானதாக மாறியுள்ளது. முதல் 5 போட்டியில் நான்கில் வென்ற ராஜஸ்தான் அடுத்த‌ 5ல் வெறும்‌ ஒன்றை மட்டுமே வென்றுள்ளது.

RR vs GT
RR vs GT
ரஷீத் கான் பேசும் போது, தற்போது ஆப்கானிஸ்தானில் ஆயிரம் சுழற் பந்து வீச்சாளர்களாவது இருப்பார்கள் எனக் கூறினார். அந்நாடு அரசியல் காரணங்களால் பல பிரச்னைகளை சந்தித்து வந்தாலும் விளையாட்டால் அந்நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஷீத் கான்.