பாதிக்கிணறு தாண்டியாகிவிட்டது ஐ,பி.எல்லில்! இதற்கு முந்தைய சீசன்களில் பாதித் தொடர் முடிவடையும்போது ஒன்றிரண்டு அணிகளையாவது கணித்துவிடலாம் ப்ளே ஆஃப்பிற்கு செல்லுமென. ஆனால் இந்த முறை சீட்டுக்கு சண்டை போடும் கூட்டணிக் கட்சிகளைப் போல முண்டியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் கொஞ்சம் கொஞ்சமாய் யார் உள்ளே யார் வெளியே எனத் தீர்மானிக்கும். அப்படி ஒரு போட்டியில்தான் நேற்று மோதின நடப்பு சாம்பியன் குஜராத்தும் முன்னாள் சாம்பியன் மும்பையும்.
டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. பல கோடி கொடுத்து எடுத்த ஆர்ச்சர் மறுபடியும் வெளியே. அவருக்கு பதில் ரைலி மெரிடித். ஹ்ரித்திக் ஷோகீனுக்குப் பதில் குமார் கார்த்திகேயா. குஜராத் அணியில் எந்த மாற்றங்களுமில்லை.
முதல் ஓவர் மும்பையின் பவர்ப்ளே பவுலராக உருவெடுத்துவிட்ட அர்ஜுன் டெண்டுல்கர். நான்கே ரன்கள். பெஹ்ரண்டாஃப்பின் அடுத்த ஓவரில் கில் ப்ளிக் அடித்து பவுண்டரி எடுக்க மொத்தம் எட்டு ரன்கள். மூன்றாவது ஓவரின் முதல் பந்தை நேராய் சாஹாவின் காலுக்கு இறக்கினார் அர்ஜுன். போர்டு மீட்டிங்கில் மணிக்கணக்கில் பேசி முடிவெடுப்பது போல டிஆர்எஸ் நேரமெல்லாம் முடிந்தபின் ரிவ்யூ எடுத்தார் சாஹா. எந்தப் பயனுமில்லை. அவுட். நான்கே ரன்களில் பெவிலியன் திரும்பினார் சாஹா.

ஹர்திக் பாண்டியா களத்தில். ஆனால் அடுத்த இரண்டு ஓவர்களிலும் பெரிதாய் ரன்களில்லை. பவர்ப்ளேயின் இறுதி ஓவரில்தான் கேமரூன் க்ரீன் போட்டுப் போட்டுக் கொடுக்க, 'வாப்பா அய்யாச்சாமி' என வெளுத்தார் கில். அந்த ஒரு ஓவரில் மட்டும் 17 ரன்கள். ஸ்கோர் டீசன்ட்டாய் 50/1. இந்த ஐ.பி.எல்லில் பவர்ப்ளேயில் குறைவான விக்கெட்கள் வீழ்த்தியிருப்பது மும்பைதான். மொத்தம் ஏழு போட்டிகளில் எட்டே விக்கெட்கள்.
ஆறாவது ஓவரின் முதல் பந்தில் சாவ்லாவை சாத்த ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார் ஹர்திக். ஒருகாலத்தில் இந்திய அணியின் நம்பர் நான்காக இருந்த விஜய் சங்கர் டைட்டன்ஸ் அணியின் நம்பர் நான்காக களம்கண்டார். சாவ்லா ரன்னே தராமல் ஸ்ட்ரிக்ட்டான வாத்தியாராய் பந்துவீச குமார் கார்த்திகேயாவுமே முதல் ஓவர் நன்றாகவே வீசினார். அவரின் இரண்டாவது ஓவரில் கில் மறுபடியும் மட்டையைச் சுழற்ற இன்னுமொரு 16 ரன்கள். அந்த ஓவரின் முடிவில் அரைசதம் தொட்டார் கில். மும்பைக்கெதிராக இரண்டு போட்டிகள் ஆடி இரண்டிலும் அரைசதம் அடித்திருக்கிறார் கில். ஸ்கோர் பத்து ஓவர்கள் முடிவில் 84/2.
பிட்ச் கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்லோவாக அதை நன்றாக பயன்படுத்தி ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினார்கள் மும்பை பவுலர்கள். அடுத்த நான்கு ஓவர்ர்களில் வெறும் 29 ரன்களே. விஜய் சங்கரும் கில்லும் நடையைக் கட்டியிருந்தனர். அபினவ் மனோகர் வந்துதான் பொறியை பற்றவைக்கவேண்டியதிருந்தது. சாவ்லாவை ஒரு சீனியர் என்றும் பாராமல் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸுக்கு சாத்தியிருந்தனர். ஸ்கோர் 130-ஐ தொட்டது 15 ஓவர்கள் முடிவில்.

பெஹ்ரண்டாஃப் அடுத்த ஓவரில் ரன்ரேட்டை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவந்தார். இருப்பது நான்கு ஓவர்கள், போனதோ நான்கு விக்கெட்கள். 'வந்தா மலை, போனா மணல்' என அடித்து ஆட ஆரம்பித்தார்கள். மெரிடித் வீசிய 17வது ஓவரில் 13 ரன்கள். ஸ்கோர் 150-ஐத் தொட்டது
`ச்சே அதெப்படி, உங்களை 200 தொடவைக்காம விடமாட்டேன்' என சத்தியம் செய்துகொண்டு வந்தார் க்ரீன். மனோகர் இரண்டு சிக்ஸ்கள், மில்லர் ஒரு சிக்ஸ் என அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள்.
அடுத்த ஓவரில் அபினவ் அவுட்டாக வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து தொடங்கினார் திவேதியா. அதே ஓவரில் மில்லரும் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட 19 ரன்கள். பெஹ்ரண்டாஃப் வீசிய கடைசி ஓவரில் இன்னும் இரண்டு சிக்ஸர்கள் திவேதியா பேட்டிலிருந்து. ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 207/6.
கடைசி நான்கு ஓவர்களில் 70 ரன்களை வாரிக்கொடுத்தது மும்பை. இந்த ஐ,பி.எல்லில் கடைசி நான்கு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணி என்கிற சாதனைக்குச் சொந்தமானது குஜராத். இமாலய இலக்கோடு களமிறங்கிய மும்பை அணி பேட்ஸ்மேன்களோடு ஸ்விங் கபடி ஆடினார் ஷமி. முதல் ஓவரில் வெறும் இரண்டே ரன்கள். அடுத்த ஓவர் ஹர்திக்.

வழக்கத்தைவிட வேகமாய் ஹர்திக் வீச அது அவரின் முன்னாள் கேப்டன் ரோஹித் பேட் முனையில் பட்டு எகிறியது. லபக்கென பிடித்தார் பாண்டியா. அடுத்த மூன்று ஓவர்கள் பாண்டியாவும் ஷமியும் பேட்ஸ்மேன்களை கதறவிட்டார்கள். ஐந்து ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 26/1.
போதாக்குறைக்கு பாண்டியா ரஷித்தையும் இறக்க அவர் மூன்று ரன்களை போனால் போகட்டும் என விட்டுக்கொடுத்தார். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 29/1. மற்றொரு ஆப்கன் பவுலரான நூர் முகமதையும் பின்னாடியே பாண்டியா களமிறக்க, சிக்ஸ் அடித்து வரவேற்றார் கேமரூன் க்ரீன். அந்தப்பக்கம் ரஷித்தை தன் வழக்கமான புல் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு அவுட்டானார் இஷான் கிஷன். மும்பை பெரிதாய் நம்பிக்கொண்டிருந்த திலக் வர்மா இம்பேக்ட் பிளேயராய் களமிறங்கி கண்ணை மூடித் திறப்பதற்குள் எல்.பி.டபிள்யூ ஆனார். அதற்கடுத்த நூர் ஓவரில் க்ரீன் மீண்டும் ஒரு சிக்ஸ். திரும்ப ரஷித் வந்து ரன்னைக் கட்டுக்குள் வைக்க ஸ்கோர் பத்து ஓவர்கள் முடிவில் 58/3.

குருவைப் போலவே சிஷ்யன் நூர் முகமதுவும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை 11 வது ஓவரில் வீழ்த்தி பழிதீர்த்தார். க்ரீன், டிம் டேவிட் என இரு பவர்ஹிட்டர்களும் வெளியேறிவிட்டதால் பொறுப்பு மொத்தமும் இப்போது சூர்யகுமார் யாதவ் தலையில். ஆனால் அவரும் ரொம்ப நேரமெல்லாம் நீடிக்கவில்லை. 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அதே நூர் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்கோர் 13 ஓவர்கள் முடிவில் 90/6. ஆட்டம் அப்போதே குஜராத்தின் வெற்றிக்கணக்கில் எழுதப்பட்டுவிட்டது.
அடுத்து நடந்தது இரு அணிகளுக்குமிடையிலான ரன்ரேட் யுத்தம்தான். 140 ரன்களுக்கு குறைவாய் மும்பை எடுத்தால் குஜராத் சென்னையைத் தாண்டி முதலிடம் போய்விடும் என்பதுதான் நிலை.
இப்படியான முன்னரே முடிவு தெரிந்துவிடும் போட்டிகளில் பிரஷர் இல்லாமல் ஆடுவார்கள் இளம் வீரர்கள். அந்த இன்னிங்ஸ் அந்த வீரர் மீதான அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். அப்படியொரு இன்னிங்ஸ் அமைந்தது நேற்று நேஹல் வதேராவுக்கு. விறுவிறுவென ரன்கள் சேர்த்தார். ஷமி, மோகித் ஷர்மா போன்ற சீனியர் வீரர்களையே பவுண்டரிக்கும் சிக்ஸுக்குமாய் விரட்டினார். 21 பந்துகளில் 40 ரன்கள். அவர் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் ஸ்கோர் 137/8. முன்னர் சொன்ன அதே தான் இப்போது களத்திலிருக்கும் அர்ஜுன் டெண்டுல்கருக்கும். ஐ.பி.எல்லில் முதல்முறையாய் பேட்டிங் ஆடுகிறார் ஆல்ரவுண்டர் அர்ஜுன். இன்னிங்ஸின் கடைசி ஓவரில் மோகித் ஷர்மா பந்தை டீப் ஸ்கொயர் பக்கம் இழுத்துத் தூக்கினார். இன்னுமொரு சிக்ஸரை பறக்கவிட ஆசைப்பட்டு அதே ஓவரில் அவுட்டும் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 152/9. ஆட்ட நாயகன் ஸ்மார்ட்டாய் ஸ்கோர் செய்த அபினவ் மனோகர்.

55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போன மும்பைக்கு கடந்த சில சீசன்களில் இதுதான் மோசமான தோல்வி. பும்ரா இல்லாமல் ஆர்ச்சரும் கைவிட, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சீரற்ற ஃபார்ம், மிடில் ஆர்டரின் அனுபவமின்மை, ரன்களை வாரிக்கொடுக்கும் பவுலர்கள் என மும்பை எனும் பிரமாண்ட கப்பலில் ஏகப்பட்ட ஓட்டைகள். இதையெல்லாம் சரி செய்வதற்குள் சீசன் முடிந்துவிடும் போல. மறுபக்கம் எப்படியாவது போராடி வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுகிறது குஜராத் அணி.
இப்போதைய நிலையில் டேபிளின் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ப்ளே ஆப்பிற்குள் சென்றுவிட வாய்ப்புகள் அதிகம்.