Published:Updated:

GT v SRH: கில்லின் சதம்; ஷமியின் ஆக்ரோஷம்; முதல் அணியாக குஜராத் பிளே ஆப்க்குள் நுழைந்தது எப்படி?

Gujarat Titans

ஷமி மற்றும் மோகித் ஆகியோர் ஆளுக்கு நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி சன்ரைசர்ஸ்சை தொடரை விட்டு வழி அனுப்பி வைத்தனர். குஜராத் முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Published:Updated:

GT v SRH: கில்லின் சதம்; ஷமியின் ஆக்ரோஷம்; முதல் அணியாக குஜராத் பிளே ஆப்க்குள் நுழைந்தது எப்படி?

ஷமி மற்றும் மோகித் ஆகியோர் ஆளுக்கு நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி சன்ரைசர்ஸ்சை தொடரை விட்டு வழி அனுப்பி வைத்தனர். குஜராத் முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Gujarat Titans
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணியில் இலங்கை அணியின் டி20 கேப்டன் ஷனாகா புதிதாக அணிக்குள் வந்திருந்தார்.

சன்ரைசர்ஸ் அணியோ சன்வீர் சிங் என்று அறிமுக வீரரை அழைத்து வந்திருந்தது. கடந்த போட்டிக்கு முந்தைய போட்டியை வென்று கொடுத்த பிலிப்ஸ், போன‌ ஆட்டத்தில் டக் அவுட் ஆகி விட்டார் என‌ அவரை அதிரடியாக நீக்கியிருந்தது சன்ரைசர்ஸ். `இருந்தாலும் கடலமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்டு ப்பா' என்று பலர் நினைத்திருப்பர்.

Gill
Gill

கில் மற்றும் சஹா இணை துவக்கம் தந்தனர். நீங்க கொடுத்த காசுக்கு ஒரு மேட்ச் 80 ரன் அடிச்சு தந்தாச்சு என்ற‌ மோடில் வந்த சஹா, புவனேஸ்வர் பந்தில் டக் அவுட் ஆனார். பின்பு கில் மற்றும்‌ தமிழகத்தின் சாய் சுதர்சன் இணைந்தனர். ஒரு விக்கெட் விழுந்த பதட்டத்தில் ஆடிய குஜராத் அணியை நாங்க இருக்கிறோம்‌ என வரவேற்றது சன்ரைசர்ஸ். எந்த பக்கமெல்லாம் எளிதாக ரன்கள் அடிக்கலாமோ அந்தப் பங்கம்‌‌ எல்லாம் அழகாக போட்டுக் கொடுத்தனர் சன்ரைசர்ஸ் பவுலர்கள். அதுவும் யான்சன் எல்லாம் ஆட்டத்துக்கு ரெண்டு நோ பால் போட்டுவிட்டு தான் வருவேன் என‌ தாய் மேல் ஆணையிட்டு வந்திருப்பார் போல. கீப்பர் கூட பிடிக்க முடியாத வைடு, நோ பால்‌ என வீசி குஜராத்தை குஷிப்படுத்தினார் யான்சென். அவரே ஒரு கட்டத்தில் திருந்தி ஃப்ரீ ஹிட் பந்தை நன்றாக வீசினால் கூட அதை புவனேஷ்வர் குமார் கேட்ச் பிடிக்காமல் விட்டு பவுண்டரியாக மாற்றிக் கொடுத்தார்.

குஜராத் அணி 220 ரன்களுக்கு மேல் அடிக்கும் முனைப்பில் இருந்தது.
SRH
SRH

46 ரன்களில் சாய் சுதர்சனை எப்படியோ வெளியேற்றியது சன்ரைசர்ஸ். முதல் 14 ஓவர்களுக்கு சன்ரைசர்ஸ் காமெடி படம் ஓட்டிக் காட்டியது தங்கள் பவுலிங் மூலம். 15ம் ஓவரில் இருந்து அந்த வேலையை தன் கையில் எடுத்தது குஜராத். ஹர்திக்‌ 8 ரன்கள், மில்லர்‌ 7 ரன்கள், திவேதியா 3 ரன்கள் என முதல் முறையாக சென்னை மால்களை சுற்றிப் பார்ப்பவர்கள் ஏறி இறங்கி விளையாடுவது போல வருவதும் போவதுமாய் இருந்தனர் குஜராத் வீரர்கள்.

கில் மட்டும் தனியாக நின்று நடக்கும் காமெடிகளை பார்த்துக் கொண்டிருந்தார். 19வது ஓவரில் சதம் கடந்தார் கில். தனி ஆளாக, குஜராத் ஸ்கோர் நிச்சயம் 190 ரன்களை கடக்கும்‌ என உத்தரவாதம் கொடுத்துவிட்டு அவரும் அவுட் ஆனார். ஆனால் அட யாருப்பா அவ்வளவு ரன்‌ எல்லாம் எடுக்கிறது என கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை இழந்தது குஜராத். 147-1 என ஒரு கட்டத்தில் இருந்த அணி 20 ஓவர்கள் முடிந்த போது 188 ரன்களில் 9 விக்கெட்டை இழந்திருந்தது. சூர்யவம்சம் சரத் குமார் கூட இத்தனை வேகத்தில் பணக்காரராகி இருக்க மாட்டார். புவனேஸ்வர் குமார் அத்தனை வேகத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Gill
Gill

எதிர்பார்த்ததை விட குறைவான ஸ்கோருக்கு குஜராத் அணியை கட்டுப்படுத்திய மகிழ்ச்சியில் இருந்தது சன்ரைசர்ஸ். ஆனால் பவர்பிளே முடிவதற்குள்ளேயே தெரிந்து விட்டது, சன்ரைசர்ஸ் அணிக்கு எந்த ஸ்கோருமே அதிகமான ஸ்கோர் தான் என்பது. "தம்பி...பந்து ரொம்ப சீம் ஆகும். ரொம்ப நேரம் நிக்காம நீங்களே அவுட் ஆயிடுங்க" என ஷமி வெளியே இருக்கும் போதே சொல்லியிருப்பார் போல. அண்ணன் பேச்சை தட்டாத சமுத்திரம் படம் முரளி போல செயல்பட்டனர் சன்ரைசர்ஸ் பேட்டர்கள். அன்மோல்ப்ரீத், மார்க்ரம், த்ரிப்பாத்தி என மூன்று பேரையும் ஐந்து ஓவர்களிலேயே அனுப்பி வைத்தார் ஷமி. அழகாக பவுண்டரி அடித்த அபிஷேக்கை அணிக்குள் மீண்டும் வந்த "ஐந்து சிக்சர் புகழ்" யஷ் தயாள் வெளியேற்றினார்.

Shami
Shami

ரன்களை அதிகப்படுத்த சிக்சர் அடித்தார் அறிமுக வீரர் சன்வீர் சிங். பவுண்டரி அடித்து பார்த்தார் அப்துல் சமாத். இரண்டும் இல்லாமல் பொறுமையாக ஆடிப் பார்த்தார் யான்சன்‌‌. ஆனால் மூன்று பேரையும் தனது அனுபவத்தால் அசால்ட்டாக தூக்கினார் மோகித். கிளாசன் மட்டும் களத்தில் இருந்தார். ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு உழைத்திருந்த புவனேஸ்வர் குமாரை ஓய்வெடுக்க விடாமல் ஓவர் டைம் பார்க்க விட்டது சன்ரைசர்ஸ். அவரும் "இதெல்லாம் எனக்கு பழக்கப்பட்டது தான்" என்பது போல பொறுப்பாக ஆடி கிளாசனுக்கு பேட்டிங்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.

கிளாசன் அருமையாக ஆடினார். அவருடன் ஒருவர் நின்றிருந்தால் ஜெயித்திருக்கலாம் என்று காவ்யா மாறன் நினைக்கும் அளவுக்கு அடித்து கொடுத்தார் கிளாசன். 44 பந்துகளில்‌ 64 ரன்கள் எடுத்து 17வது ஓவரில் கிளாசன் வெளியேற சன்ரைசர்ஸ் அணியின் கடைசி நம்பிக்கையும்‌ முடிந்தது. நூர் அஹமத்‌ காலில் அடி‌பட்டு செல்ல கடைசி ஓவரை திவேதியா வீசினார். எப்படியோ சன்ரைசர்ஸ் ஆல் அவுட் ஆகாமல் தப்பித்தது.

Mohit Sharma
Mohit Sharma
ஷமி மற்றும் மோகித் ஆகியோர் ஆளுக்கு நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி சன்ரைசர்ஸ்சை தொடரை விட்டு வழி அனுப்பி வைத்தனர். குஜராத் முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

தொடரிலிருந்து வெளியேறினாலும் சன்ரைசர்ஸ் தனக்கு வர இருக்கும் இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் தோற்கும் அணியை தங்களோடு அழைத்துச் செல்லும் வாய்ப்பு அதிகம். அது எந்த அணி என்பதை முடிவு செய்யும் மிகப்பெரிய பொறுப்பில் தற்போது உள்ளது சன்ரைசர்ஸ்.