ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியை ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியை சாம்சன் மற்றும் ஹெட்மயரின் அதிரடியால் ராஜஸ்தான் வென்றிருக்கிறது.
ஏற்ற இறக்கங்களையும், வளைவு நெளிவுகளையும் உடைய மலைவழிப் பயணம்தான் டி20. இதில் எந்தக் கட்டத்தில் எந்த கியரில் எப்படிப் பயணிப்பது, வேகம் என்னும் ஸ்ட்ரைக் ரேட்டையும் ரன் ரேட்டையும் கூடவே விக்கெட்டையும் எப்படி க்ளட்ச் மற்றும் பிரேக் போலக் கட்டுப்படுத்துவது என்பதிலுள்ள நிபுணத்துவம்தான் விபத்தென்னும் தோல்வியைத் தவிர்க்க வைக்கும். இதை உணர்ந்து இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தானின் இன்னிங்க்ஸ் இண்டென்ட் என்னும் இங்க்கினால் இன்ச் இன்சாக எழுதப்பட்டிருக்க முதல் பாதியில் அது இல்லாததாலேயே குஜராத் தத்தளித்தது.

போல்டின் பந்துவீச்சும் முதல் ஓவர் விக்கெட்டுகளும் பிரிக்க முடியாத காதல் கதைகளாகி விட்டன. இத்தொடரில் அவர் ஓப்பனிங் ஓவரில் விக்கெட் எடுத்த மூன்று போட்டிகளிலுமே ராஜஸ்தான் வென்றுள்ளது. சாஹாவுக்கு அவர் வீசிய பந்து எட்ஜாகி அவரைச் சுற்றியிருந்த அத்தனை ஃபீல்டர்களையும் சுறுசுறுப்பாக்கியது. "My Catch" என்று சொல்லி மற்றவரை விலக்கும் பழைய வழிமுறையெல்லாம் மறந்து மூன்று பேர் மோதிக் கொள்ள அவர்கள் எப்படியும் விட்டு விடுவார்கள் என தள்ளி நின்று கவனித்து அவர்களிடமிருந்து விடுதலையாகி எம்பிக் கிளம்பிய பந்தினை தானே கைப்பற்றி சாஹாவை வெளியேற்றினார் போல்ட். பவர்பிளேவுக்குள்ளேயே சாய் சுதர்சனின் விக்கெட்டையும் ரன்அவுட்டில் பலி கொடுத்திருந்தது குஜராத். கிராஸ் ஆக ஓடாமல், நேராக ஒடி க்ரீஸை நோக்கித் தாவியிருந்தால் அவரது விக்கெட் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இத்தகைய சின்ன சின்ன அடிப்படை விஷயங்களில் விடும் தவறுகள்தான் சமயத்தில் பெரிய பலியைக் கேட்கிறது.
பவர்பிளே முடிவில் வெறும் 41 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாற்றமான தொடக்கத்தை குஜராத் சந்தித்திருந்தது. ஒட்டுமொத்தமாகவே இத்தொடரில் அவர்களது ஸ்கோரிங் ரேட் நத்தை வேகத்திலேயே நகர்கிறது. கடந்த போட்டியில்கூட `இறுதி ஓவர்கள் வரை போட்டியை நீட்டிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை' என இதை மனதில் வைத்தே ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார்.
இது அவரது நினைவிலாடியதோ என்னவோ அவரே முன்னின்று ஆக்ஸிலரேட்டரை முறுக்க அஷ்வின் மற்றும் ஜம்பா அடுத்தடுத்து வீசிய மூன்று ஓவர்களைக் குறிவைத்து 40 ரன்களை குஜராத் எட்டிவிட்டது. இதைப் போலவே இறுதியாக வீசப்பட்ட கடைசி 3 ஓவர்களிலும் சரியாக 40 ரன்களை எடுத்திருந்தனர். அந்த ஆறு ஓவர்களில் அதாவது 36 பந்துகளில் குவிக்கப்பட்ட 80 ரன்கள்தான் ஓரளவு சவாலான இலக்குக்குக் காரணமாக இருந்தது. கூடவே போல்டின் ஓவர்கள் மட்டுமல்ல டெத் ஓவரில் வீசிய சாஹல் மற்றும் ஜம்பாவின் பந்துகளும், மில்லர் - மனோகர் இணையால் பந்தாடப்பட்டன. அது மட்டுமே 178 என்ற ஓரளவு சவாலான இலக்கை நிர்ணயிக்க வைத்தது.

குஜராத்தின் இன்னிங்ஸில் 26 பந்துகள் டாட் பாலாகி இருந்தன. இவையும் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் மூலமாக ரன்களாக வரவு வைக்கப்பட்டிருந்தால் வெற்றி கிட்டத்தட்ட குஜராத்தின் வசமாகியிருக்கும். சமீபகாலமாகவே ஓப்பனர்களை வறுத்தெடுக்கப்படும் ஸ்ட்ரைக் ரேட் அளவுகோலில் கில் நிரம்பவே அடிவாங்கியிருந்தார். டி20-ல் ஆவரேஜைவிட ஸ்ட்ரைக் ரேட்டே அதிகம் பேசும். அப்படியிருக்க ஒட்டுமொத்தமாக 132.33 என்பது மோசமில்லையே எனத் தோன்றினாலும், களத்தில் நீண்டநேரம் நிலைத்து நின்றாடும் பேட்ஸ்மேன்கள் விஷயத்தில், அது ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி நகர்ந்திருக்கிறது என்பதும் மிக முக்கியம்.
ஒப்பனிங்கில் இறங்கி 16-வது ஓவர் வரை களத்தில் நின்றும் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு பந்துகளைச் சந்தித்தும் அவரால் அரைசதத்தைக் கூட எட்டி முடியவில்லை. பவர்பிளே என்ற வார்த்தையின் அர்த்தத்தையே மறந்து அதில் 12 பந்துகளைச் சந்தித்து வெறும் 15 ரன்களை மட்டுமே கில் எடுத்திருந்தார். ஹர்திக்குடன் சேர்ந்து சற்றே வேகமெடுத்தவர் அவர் ஆட்டமிழந்த பிறகு ஆடிய 16 பந்துகளிலோ வெறும் 17 ரன்களை மட்டுமே வந்திருந்தது.

அனுபவமிக்கவர்தான் என்றாலும் மில்லர் புதிதாக உள்ளே வந்தவர், அவர் சற்றே செட்டிலாக எடுக்கும் நேரத்தில் களத்தைப் பழகிய கில் அந்த இடைவெளியை நிரப்பியிருக்க வேண்டும். அதை அவர் செய்யத் தவறிய இடத்தில் சற்றே பள்ளம் விழுந்தது.
மற்றவர்களால் நேர்ந்த அத்தனை தவறினையும் விஜய் ஷங்கருக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருந்த மனோஹரின் நேர்த்தியான பேட்டிங்கும் 207.7 என்ற ஸ்ட்ரைக்ரேட்டும் நேர்செய்து விட்டன. மனோஹரைப் போலவே ப்ரஷித் கிருஷ்ணாவுக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பிற்கு அணுஅணுவாய் நியாயம் கற்பித்துள்ளார் ராஜஸ்தானின் சந்தீப் ஷர்மா. சென்ற போட்டியில் தோனிக்கு எதிராக அவர் வீசிய இறுதி ஓவரின் கடைசிப் பந்து பற்றியே இன்னமும் பேசப்படுகிறது. இப்போட்டியிலோ ஸ்பின்னர்கள் வாரி வழங்க, போல்டின் பந்துகள்கூட பழுதாக்கப்பட, சந்தீப் நான்கு ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து கில் மற்றும் மில்லர் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளுக்குக் காரணமாகி இருந்தார்.
கடின இலக்குதான் என்றாலும் பனிப்பொழிவு 'Game is On' என வெற்றி விழுக்காட்டினை 50 : 50 என்றே காட்டியது. ஆனால் ஷமி - பாண்டியா வீசிய மிகச்சிறந்த பவர்பிளே ஸ்பெல் குஜராத்துக்கான வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்வதாக இருந்தது. ஷமியின் புதுப்பந்து பார்ட்னராக இணைந்த பாண்டியா பந்தை அழகாக இருபுறமும் ஸ்விங் செய்ததோடு கடினமான லைன் அண்ட் லெந்தினையும் எட்டி இருவருமாக பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். ஒருவர் எனில் உயிர் தப்பலாம் இருவரெனில் எப்படி மீள்வது? ஜெய்ஸ்வாலின் ஷார்ட் லெந்த் பலவீனத்தாலேயே பாண்டியா அவரை வீழ்த்த ஷமியின் இன்ஸ்விங்கர் பட்லரை வெளியேற்றியது. 4/2 என ராஜஸ்தானை மனதளவில் வலுவிழக்க வைத்தது குஜராத்.
விமானம் டேக் ஆஃப் ஆகும்போது சின்ன நடுக்கம் இயல்பானதுதான். பவர்பிளேயில் விழும் விக்கெட்டுகளை அப்படித்தான் அணுக வேண்டும்.

பின்னடைவிலேயே தேங்கி விடாமல் அதிகபட்ச உயரத்தை அடைவதையும் இலக்கில் போய் இறங்குவதையும் பற்றி மட்டுமே எண்ணம் இருக்க வேண்டும். சாம்சன், ஹெட்மயர் அதைத்தான் செய்திருந்தனர்.
சஞ்சு சாம்சனின் லெக் ஸ்பின் பலவீனம் தெரிந்த கதைதான். முன்னதாக ஹசரங்காவிடம் மட்டுமே எதிர்கொண்ட ஏழு போட்டிகளில் ஆறுமுறை தனது விக்கெட்டை சஞ்சு சாம்சன் பறிகொடுத்திருக்கிறார். ரஷித் கானுக்கு எதிராகவோ இப்போட்டிக்கு முன்னதாக அவரது ஸ்ட்ரைக்ரேட் 100-க்கும் கீழே. ஆனால் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் சற்றும் பின்வாங்கவில்லை. மோசமான பவர்பிளே, படிக்கல்லின் விக்கெட் என எதிலும் அவர் தேங்கவில்லை. பராக் ஆட்டமிழந்த போது கூட 19 பந்துகளில்கூட 20 ரன்களை மட்டுமே எட்டியிருந்தார். ஆனால் பாண்டியாவின் விக்கெட் கில்லின் ஆட்டத்தை மெதுவாக்கியதைப் போல இல்லாமல் பராக்கின் விக்கெட்தான் சஞ்சு சாம்சன் ஆட்டத்தை முடுக்கத் தொடங்கிய புள்ளி. அதன்பிறகு அவர் சந்தித்த பதிமூன்றே பந்துகளில் 40 ரன்களைக் குவித்திருந்தார். அதுவும் அவரது பலவீனமான லெக் ஸ்பின்னை அதுவும் டி20 உலகின் தன்னிகரற்ற லெக் ஸ்பின்னரான ரஷித் கானின் பத்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸரோடு போட்டியின் லகானை தங்கள் கைக்கு மாற்றினார். அவர் ஆட்டமிழந்த போது ஹெட்மயரோ 14 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எட்டியிருந்தார். ஆனால் சாம்சன் ஆட்டமிழந்த பின் எதிர்கொண்ட 12 பந்துகள் 300 ஸ்ட்ரைக்ரேட்டில் 36 ரன்களைக் கொண்டு வந்திருந்தது. யார் தாக்குவது என்ற செங்கோல் மட்டும் கைமாறியதே ஒழிய தாக்குதலை தணிய விடவேயில்லை. த்ரூவ் மற்றும் அஷ்வின் கேமியோக்கள் கூட இண்டென்டை தலைக்குள் புகுத்தியவையாகவே இருந்தன.

இலக்கை எட்ட வேண்டுமென்பதைத் தவிர வேறொன்றுமே அவர்களது மனதில் இல்லை. எங்கே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் எங்கே எழுச்சி காட்ட வேண்டும் என்பதில் இருவருக்குமிருந்த தெளிவுதான் ராஜஸ்தானை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.
நிலநடுக்கம் உண்டாகும் ஆதிப்புள்ளி போன்றதுதான் பவர்பிளே. அது கடத்தும் அதிர்வுகள்தான் கடத்தப்பட்டு போட்டி மொத்தமும் எப்படி இருக்க வேண்டுமென முடிவு செய்யும். அப்படிப்பட்ட கட்டத்தில் இந்த சீசனின் மோசமான பவர்பிளேயை (26/2) பதிவேற்றி தடுமாறியிருந்தாலும் அதன்பின் அடித்து நொறுக்கி, கடைசி 10 ஓவர்களில் 126 ரன்களை நம்பமுடியாத வகையில் குவித்து போட்டியை வென்றதோடு புள்ளிப் பட்டியலின் உச்சத்தையும் ராஜஸ்தான் எட்டிவிட்டது.