Published:Updated:

CSK v RR: ஸ்பின்னர்களால் அணைகட்டிய சஞ்சு சாம்சன்; தோற்றாலும் `நீ சிங்கம்தான்' எனச் சொல்ல வைத்த தோனி!

தோனி - CSK v RR ( R. Parthibhan | AP )

21 ரன்கள் இறுதி ஓவரில் தேவையென்ற போது இதற்கு முன்னதாக எத்தனையோ முறை தோனி இறுதி ஓவரை நின்று வென்று தந்த நிமிடங்களும் அவரது கடைசி பந்து சிக்ஸர்களும் நினைவுக்கு வந்திருக்கும்.

Published:Updated:

CSK v RR: ஸ்பின்னர்களால் அணைகட்டிய சஞ்சு சாம்சன்; தோற்றாலும் `நீ சிங்கம்தான்' எனச் சொல்ல வைத்த தோனி!

21 ரன்கள் இறுதி ஓவரில் தேவையென்ற போது இதற்கு முன்னதாக எத்தனையோ முறை தோனி இறுதி ஓவரை நின்று வென்று தந்த நிமிடங்களும் அவரது கடைசி பந்து சிக்ஸர்களும் நினைவுக்கு வந்திருக்கும்.

தோனி - CSK v RR ( R. Parthibhan | AP )
`கடைசி நேர (ஓவர்) மாறுதலுக்குப்பட்டது' என்று பரபரப்புடன் நடந்த போட்டியில் சிஎஸ்கே-வை வீழ்த்தியுள்ளது ராஜஸ்தான்.

சேப்பாக்கத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட் ஏந்துவதும் கொலைக்களத்தில் வேண்டி விரும்பி தலையை வைப்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். அதிலும் டர்னோடு விளையாடி ஸ்பின்னோடு உறவாடும் இரு அணிகளின் தலைசிறந்த ஸ்பின்னர்களுமே மோதலுக்கு மேலும் செறிவூட்டுபவர்கள். ஆகவே பல திருப்பங்களை சிஎஸ்கே - ராஜஸ்தான் இடையிலான போட்டி சந்திக்கும் என்பது பலருமே யூகித்த ஒன்றாகவே இருந்தது.

டாஸ்கூட 200-வது முறையாக சிஎஸ்கேவிற்குத் தலைமையேற்ற தோனிக்கே வாழ்த்தி வாக்களித்தது. கிட்டத்தட்ட 60 சதவிகிதம் போட்டிகளில் அணியை வெல்ல வைத்திருக்கும் தோனியின் ஹோம் ரெக்கார்ட் 72 சதவிகிதம். ஒவ்வொரு முறை அவர் களத்தில் காலடி வைக்கும் போதும் பல சாதனைகள் உடைக்கவும் படைக்கவும் படுகின்றன. ஒவ்வொரு முறையும் அது அனுப்பும் சமிக்ஞை அணிக்குள் அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கான அளவீட்டைத்தான்.

CSK v RR
CSK v RR
AP

இரண்டாவது பாதியில் குறுக்கிடும் பனிப்பொழிவு தோனியை சேஸிங்கைத் தேர்ந்தெடுக்க வைத்தது. லக்னோவிற்கு எதிரான சிறந்த செயல்பாட்டுக்குப் பிறகும் தீக்ஷனாவை உள்ளே கொண்டுவர வேண்டுமென்பதற்காக சாண்ட்னரை வெளியே அமர்த்திய கடினமான சூழல் சிஎஸ்கேவிற்கு. ராஜஸ்தானின் பக்கமோ படிக்கல் மறுபடி சேர்க்கப்பட்டிருந்தார். போல்ட் இல்லாதது சிஎஸ்கேவின் டாப் ஆர்டரின் வயிற்றில் சற்றே பாலை வார்த்திருந்தது.

இந்த சீசனில் தாராளமயமாக்கும் கொள்கையை பவர்பிளேயில் கடைபிடிக்கும் சிஎஸ்கே, சராசரியாக 68.7 ரன்களைக் கசிய விட்டிருந்தது. தீபக் சஹாரின் மோசமான ஃபார்மும் முக்கிய காரணம். தீபக்கால் தீராத சாபம் தீக்ஷனா வந்தும் தீராமல் 57 ரன்கள் இப்போட்டியில் அள்ளி இறைக்கப்பட்டன.

ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தி ஆட்டத்தை சிஎஸ்கே நன்றாகவே தொடங்கியது. அந்த நிலையில் அவருக்கு வாகான ஜோனுக்குள் நின்று ஆடட்டும் என படிக்கல்லை ராஜஸ்தான் முன்கூட்டியே அனுப்பியது அவர்களுக்கு பவர்பிளேயில் ஓரளவு கைகொடுத்தது. ஸ்லிப்பில் நின்றிருந்த மொய்ன் அலி விட்ட கேட்ச் படிக்கல்லுக்கான இரண்டாவது வாய்ப்பை உருவாக்கியது. இக்கூட்டணியை உடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் 41 பந்துகளில் சேர்க்கப்பட்ட 77 ரன்களும் இறுதியில் ஆட்டங்காட்டிய ஹெட்மயராலும்தான் ராஜஸ்தான் சவாலான இலக்கையே நிர்ணயிக்க முடிந்தது.

CSK v RR
CSK v RR
AP

சென்னைக் களத்தை நன்கு அறிந்தவர் என நினைத்தோ, ஆங்கரிங் ரோலினை செய்து பட்லருக்கு பக்கத் துணையாகட்டும் என யோசித்தோ, ஸ்பின்னர்களின் ஓவர்களை முடித்து வைக்கட்டும் எனக் கருதியோ, இரண்டாவது பாதியில் இம்பேக்ட் பிளேயராக ஜாம்பாவை உள்ளே கொண்டுவர வேண்டுமென்பதால் இன்னொரு பேட்ஸ்மேனை அழைத்து வீணடிக்க முடியாதெனச் சிந்தித்தோ என ஏதோ ஒரு வியூகத்தோடு அஷ்வின் முன்பாகவே இறக்கப்பட்டார். எண்ணம் எதுவாக இருப்பினும் அது சரியாகச் செல்லாமல் சில பந்துகள் வீணடிக்கப்பட்டு மத்திய ஓவர்களில் ரன்குவிப்பு மட்டுப்பட்டது. 10 - 14 ஓவர்களில் மொத்தமே ஒரு பவுண்டரியும் 31 ரன்களும் மட்டுமே வந்திருந்தன. ராஜஸ்தானை சிஎஸ்கே சற்றே அல்லாட வைத்ததும் அங்கேதான். ஹெட்மயர் போன்ற வீரருக்குத் தரப்படும் கூடுதலான பந்துகள் எதிரணியினை உருக்குலைப்பவை. அதை ராஜஸ்தான் செய்யத் தவறியிருந்தது. ஃபீல்டிங்கின் போது ஷிஸாண்டா மகாலாவுக்கு ஏற்பட்ட காயமும் அவரது பங்கான இரு ஓவர்கள் இறுதியில் வீசப்பட முடியாமல் போனதும் சிஎஸ்கேவின் கணக்கில் நஷ்டமாகவே வரவு வைக்கப்பட்டது.

ஷார்ட் பால்களைத் தங்கத்தட்டில் வைத்துத் தந்து பட்லரை பேக் டு பேக் சிக்ஸர் அடிக்க வைத்த மொயின் அலியின் ஓவர் 18 ரன்களோடு காஸ்ட்லியானது. ஸ்பின் ஓவர்களில் ஸ்லிப்பைக் காவல் காப்பவர் ரஹானே. கடந்த போட்டியிலேயே ஃபீல்டிங் முயற்சிகளின் போது சற்றே ரெய்னாவை நினைவுபடுத்தினார். ஆனால் இரண்டு கேட்ச்களை விட்டபின்னும்கூட மொயின் அலியை விடுவித்து அந்த இடத்தில் ரஹானேவை நிறுக்கவைக்காததும் அணிக்குப் பின்னடைவானது. மொத்தத்தில் மொயின் அலி ஃபீல்டிங்கில் சொதப்பினார். பேட்டிங்கில்கூட அது அவருடைய நாளாகச் செல்லவில்லை. இருப்பினும் பட்லருடைய விக்கெட்டினை வீழ்த்தி எல்லாவற்றையும் நேர் செய்திருந்தார் மொயின் அலி. மீதமிருந்த டெத் ஓவர்களிலும் பட்லர் இருந்திருந்தால் இலக்கு இன்னமும் அதிகரிக்கப்பட்டிருக்கும். ஒரு சீசனில் ஆரஞ்சுக் கேப் வாங்கியவர்களின் ஆட்டம், அதற்கடுத்த வருடம் மங்கி ஒளி இழக்கும். ஆனால் பட்லரோ இந்தாண்டும் அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் தூக்கிச் சுமக்கிறார்.

CSK v RR
CSK v RR
R. Parthibhan | AP

போட்டிக்கு முன்னதாகவே ரவீந்திர ஜடேஜா, "இந்த 200வது போட்டியை வென்று தோனிக்குச் சமர்ப்பிப்போம்" என்று கூறியிருந்தார். அவரது பௌலிங் மற்றும் பேட்டிங் இரண்டுமே அதை எந்தளவு உளமார சொல்லியிருந்தார் என்றே யோசிக்க வைத்தது. சற்றே வேகம் அதிகரிக்கப்பட்ட அவரது பந்துகள் ஒவ்வொன்றுமே அபாயகரமானவையாகவே மாறின. எல்லோரும் கிட்டத்தட்ட ஓவருக்கு 10 ரன்கள் என அள்ளி வீசியிருக்க 5.2 எக்கானமியோடு பந்துவீசி ராஜஸ்தானை நெருக்கியிருந்தார் ஜடேஜா.

பட்லர் - படிக்கல் பார்ட்னர்ஷிப்பை உடைக்கத் தவறிய மற்றும் ஹெட்மயருக்கு வேகத்தடை இட திணறிய இரு புள்ளிகள்தான் சிஎஸ்கே இறுதியில் இரு புள்ளிகளைப் பெறவிடாமல் செய்தன. 176 என்பது ஓரளவு டிஃபெண்ட் செய்யக்கூடிய இலக்குதான். அதை நிரூபிக்கும் வகையில்தான் சென்னையின் பேட்டிங்கும் இருந்தது.

சந்தீப் - குல்தீப் சென் கூட்டணி பவர்பிளே ஓவர்களைச் சிறப்பாகத் தொடங்கியது. சந்தீப்பின் ஸ்விங் ஆகும் பந்துகள் ஓப்பனர்களைச் சிரமப்படுத்தின. சீசனின் தொடக்கத்தில் போல கெய்க்வாட் ஒரு சிறப்பான அதிரடித் துவக்கத்தைக் கொடுத்து பவர்பிளே சரியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது ராஜஸ்தானின் பக்கம் அழுத்தத்தைத் திருப்பி விட்டிருக்கும். ஆனால் அவர் அடித்த ஒரு பவுண்டரியோடு ஆறுதல் பட்டுக் கொண்டு கிளம்பியது சிஎஸ்கேவுக்கான முதல் பின்னடைவானது. அதற்கடுத்து இணைந்த கான்வே ரஹானே இணை ஓவருக்கொரு பெரிய ஷாட்டுக்குப் போவது என்ற முடிவோடு ரன்ரேட் சரியாமல் ஈடுகட்டி வந்தது. எனினும் ரஹானேவின் விக்கெட்டினை வீழ்த்திய அஷ்வினின் கேரம் பால்தான் கேம் சேஞ்சர்.

CSK v RR
CSK v RR
AP

சாம்சனின் திட்டம் தெளிவாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு மூச்சுவிட முடியாத அளவு பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவது, மத்திய ஓவர்களை ரன்களின்றி உலர விடுவது அதன் மூலமாகப் பந்துகளுக்கும் தேவைப்படும் ரன்களுக்குமான இடைவெளியைக் கூட்டிக் கொண்டே போய் இறுதி ஓவர்களில் இலக்கை கண்ணுக்குத் தெரியாத அளவு எங்கேயோ எடுத்துச் செல்வது! அவரது ஸ்பின்னர்கள் சாம்சன் போட்ட கோட்டில் அப்படியே போட்டியை எடுத்தும் சென்றனர், களமும் ஆதரவளித்தது. அஷ்வின், சஹால், ஆடம் ஜாம்பா விரல்களைச் சொடுக்கியோ மணிக்கட்டைச் சுழற்றியோ விடுவிக்கும் பந்துகளோடு பயத்தையும் விளைவித்தனர். அந்த 12 ஓவர்கள்தான் சிஎஸ்கே எட்டவேண்டிய ரன்களை, அவர்களின் தலைமேல் பளுவாக ஏற்றிக்கொண்டே போனது. இறுதி ஓவர்களில் அதற்கான தண்டனையே பல மடங்கு வட்டியோடு சிஎஸ்கேவின் பக்கமாக வந்து முடிந்தது.

பார்ட்னர்ஷிப்கள் உருவாக உருவாக உடைக்கப்பட்டன. கான்வே, ராயுடு இருவரையும் சஹாலின் ஓவரின் முதல் மற்றும் கடைசி பந்துகள் வெளியேற்றின. டெத் ஓவர்களில் 63 ரன்கள் என்ற கடின இலக்கில் வந்து போட்டி நின்ற போதுதான் தோனி - ஜடேஜா கூட்டணி ஒன்றிணைந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்பின்னுக்கு எதிரான தோனியின் ஸ்ட்ரைக்ரேட் ஐபிஎல்லில் 100-க்கும் குறைவு. ஜடேஜாவும் பேஸ் ஹிட்டர் என்பதால் டெத் ஓவரின் முதல் மூன்று ஓவர்களையுமே ஸ்பின்னர்களின் வசமே சாம்சன் தந்தார். ஜாம்பாவின் ஒரு ஓவர் அடிவாங்கியும்கூட மூன்று ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் விட்டுத் தந்திருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்கள் வருவதற்காகவும் அவர்களைக் குறிவைப்பதற்காகவும் காத்திருந்த இக்கூட்டணிக்கு 19-வது ஓவரில் வந்து 19 ரன்களை வாரியிறைத்துச் சென்றார் ஹோல்டர். 21 ரன்கள் இறுதி ஓவரில் தேவையென்ற போது இதற்கு முன்னதாக எத்தனையோ முறை தோனி இறுதி ஓவரை நின்று வென்று தந்த நிமிடங்களும் அவரது கடைசி பந்து சிக்ஸர்களும் நினைவுக்கு வந்திருக்கும். அதுவும் அவரது 200-வது போட்டி என்பதால் அதே தருணங்களைத் திருப்பி ஓட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாக இது மாறலாம் என்றே பல ரசிகர்களும் காத்திருந்தனர்.
CSK v RR
CSK v RR
R. Parthibhan | AP

இறுதி ஓவரில் சந்தீப் ஷர்மாவிற்குப் பதற்றத்திலேயே முதல் இரு பந்துகள் லைன் தப்பி வொய்டு வாங்கின. அடுத்த இரண்டுமோ லென்த் தப்பி ஃபுல் டாஸ் ஆக தோனியின் பேட் பேக் டு பேக் சிக்ஸர்களைப் பார்க்க வைத்தன. இறுதி 3 பந்துகளில் 7 ரன்கள் வேண்டுமென்ற நிலையில் தோனியை விட அதிக அழுத்தம் சந்தீப்பின் பக்கமே இருந்தது. கடைசிப் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட யார்க்கராக்கி தப்பிப் பிழைத்தார் சந்தீப். 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான். இந்த இரு அணிகளும் சேப்பாக்கத்தில் வைத்து மோதிய எழு போட்டிகளில் முன்னதாக 1-ல் மட்டுமே வென்றிருந்த ராஜஸ்தான் 15 ஆண்டுகள் கழித்து ஒரு போட்டியில் வென்றிருக்கிறது.

கான்வே - ரஹானே தொடக்கத்திலும் தோனி - ஜடேஜா இறுதியிலும் போராடியிருந்தது. இறுதி 5 ஓவர்களில் 59 ரன்களைக் குவித்து விண்டேஜ் சிஎஸ்கேவினையே நினைவுக்குக் கொண்டு வந்திருந்தனர். மத்திய ஓவர்களில் இன்னமும் கொஞ்சம் ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தால் வெற்றி சிஎஸ்கேவின் பக்கம் விடிந்திருக்கும். சாம்சன் தனது ஸ்பின்னர்கள் மூலம் அது நிகழவிடாமல் அணைக் கட்டியிருந்தார். இறுதி ஓவர் வரை நீளும் ஓயாத நாடகங்கள் கடந்த ஒரு சில போட்டிகளாகவே ஐபிஎல்லினை மேலும் சுவாரஸ்யமாக்கிக் கொண்டுள்ளன. அணிகளுக்கு இடையிலான கடும் போட்டியையும் அவை காட்சிப்படுத்துகின்றன.

தோனி - CSK v RR
தோனி - CSK v RR
R. Parthibhan | AP
தன்னைப் போலவே பௌலிங் பலவீனத்தை வைத்துள்ள ஆர்சிபியை பேட்டிங் பேரடைஸ் பெங்களூரில் வைத்து அடுத்ததாகச் சந்திக்க உள்ளது சிஎஸ்கே. யாருக்கு விடியும் யாருக்கு முடியும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.