தொடர் ஆரம்பித்ததில் இருந்தே கோமாவில் இருந்த டெல்லி அணிக்கு தன்னுடைய பவுலிங் ட்ரீட்மென்ட் மூலமாக மீண்டும் உயிர் கொடுத்துள்ளது பெங்களூரு.
இனி மேலே இருக்கும் அணிகளுடன் இணைந்து டெல்லியும் ப்ளே-ஆப்ஸ் போட்டியில் பங்கேற்கும் போல என்று எண்ணும் அளவுக்கு அவர்களது ஆட்டம் இருந்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் புதிதாக கேதர் ஜாதவ் களமிறங்கினார். டூப்ளெசிஸ் மற்றும் கோலி துவக்கம் தந்தனர். கோலி தனது வழக்கமான ஃபார்முலாவில் பந்துக்கு ஒரு ரன் என்று தான் துவக்கம் முதலே போய்க்கொண்டு இருந்தார். ஆனால் கேப்டன் டூப்ளெசிஸ் ஆரம்பத்தில் சற்று திணறினாலும் போகப் போக ரன்களை உயர்த்த ஆரம்பித்தார்.
கோலி இந்த இன்னிங்ஸில் IPL வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

பத்தாவது ஓவர் வரை எல்லாம் சரியாகவே போய்க்கொண்டிருந்தது. 11வது ஓவரை வீசிய மார்ஷ் டூப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் என இருவரையும் தொடர்ந்து இரண்டு பந்துகளில் அவுட் ஆக்க லாம்ரோர் களத்திற்கு வந்தார்.
கோலி, டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல் - இந்த மூவரில் இருவர் அவுட் ஆகிவிட்டாலே பெங்களூரு அணி படுத்து விடும் பொதுவாக. ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. காரணம் லாம்ரோர் ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக சமாளித்தார். கோலி என்ன தான் மெதுவாக ஆடினாலும் லாம்ரோர் அடிக்க அடிக்க ரன்கள் வந்து கொண்டே இருந்தன. 42 பந்துகளில் 50 ரன்கள் அடித்த கோலி 46 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கவலைப்படுவதா அல்லது சந்தோஷப் படுவதா என்று யோசனையில் ஈடுபடுவதற்குள் தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்தார். வந்தது முதலே ரன் அவுட் ஆகத்தான் வாய்ப்புகளை தேடினாரே தவிர ரன்கள் சேர்ப்பதற்கு அல்ல. 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அவரால் அடிக்க முடிந்தது. லாம்ரோர் 29 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருக்க, பெங்களூரு அணி 181 ரன்கள் எடுத்தது 20 ஓவர்கள் முடிவில்.
இன்னிங்ஸ் முடிந்த பின் பேசிய கோலி, இந்த பிட்ச் பார்ப்பதற்கு 160 ரன்கள் எடுக்க வேண்டிய பிட்ச் போல இருக்கிறது என்று கூறினார். இதிலேயே 180 ரன்களைக் கடந்து விட்டோம் என்று பெங்களூரு ரசிகர்கள் ஆனந்தத்தில் இருந்தனர். ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை.

டெல்லி அணி களமிறங்கியது. தொடர் முழுவதும் அரை தூக்கத்தில் ஆடியது போலவே ஆடி வந்த வார்னர் கூட இன்று முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். கூடவே பிலிப் சால்ட்டும் அதிரடி காட்ட ரன்கள் பவர்பிளேவில் விறுவிறுவென வந்தன.
ஆட்டத்தின் நான்காவது ஓவரில் சால்ட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் தவறவிட்டார். ஆனால் பெங்களூரு கொடுத்த இந்த வாய்ப்பை சால்ட் தவறவிடாமல் அடித்தார். சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் மூன்று பந்துகள் சால்ட்டுக்கு 16 ரன்களை பெற்றுத் தந்தன. இந்நேரத்தில் சிராஜ் மற்றும் சால்ட்டுக்கு இடையில் வார்த்தை போர் கூட மூண்டது. ஆனால் சால்ட் எதையும் கண்டுகொள்ளாமல் அடித்துக் கொண்டே இருந்தார். வார்னர் ஆறாவது ஓவரில் அவுட் ஆன போது கூட அடுத்து வந்த மார்ஷ் அந்த ஓவரில் 10 ரன்கள் எடுத்தார். இப்படி டெல்லி பிரித்து மேய பெங்களூரு அடித்த 180 ரன்கள் பத்து ஓவர்களுக்கு உள்ளேயே 120 ரன்கள் போல காட்சி அளிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் பைஸ் மூலமாக நான்கு ரன்களை விட்டு பெங்களூரு ரசிகர்களின் பிரஷரை எகிற வைத்தார் டிகே. Impact வீரராக வந்த ஹர்ஷல் தனது இரண்டாவது பந்திலேயே விக்கெட் எடுத்தாலும், அவர் வீசிய இரண்டாவது ஓவர் 24 ரன்களுக்கு சென்றது.

ஹசரங்கா, கர்ண் என அனைவரின் பந்துகளையும் அடித்து வெளுத்த சால்ட் எப்படியோ 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்பு செய்ய வேண்டியதை செய்து 17வது ஓவரிலேயே வெற்றி பெற்றது டெல்லி. இது 160 ரன்களுக்கான பிட்ச் என்று கோலியிடம் கூறியது மட்டும் யாரென்று கடைசி வரை தெரியவில்லை.
ஆட்டம் முடிந்த பின்பு சிராஜ் மற்றும் சால்ட் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குலி மற்றும் கோலி இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

எந்த ஒரு ஆக்சன் சம்பவமும் இல்லாமல் இரண்டு புள்ளிகளை டெல்லிக்கு கொடுத்து அவர்களை கைதூக்கி விட்டுள்ளது ஆர்சிபி