Published:Updated:

DCvMI: தவறுகளைத் திருத்திக் கொண்ட மும்பையும்; `தப்பெல்லாம் தப்பே இல்ல' மோடில் டெல்லியும்!

Rohit

கேப்டன் ஃபார்முக்குத் திரும்பியது, பவுலிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டது என மும்பைக்கும், அக்‌ஷர், நார்க்கியா, முஷ்டாஃபிஸுர் ஆகியோரின் ஃபார்ம் என டெல்லிக்கும் இந்த ஆட்டத்திலிருந்து எடுத்துப்போக நிறைய இருக்கின்றன.

Published:Updated:

DCvMI: தவறுகளைத் திருத்திக் கொண்ட மும்பையும்; `தப்பெல்லாம் தப்பே இல்ல' மோடில் டெல்லியும்!

கேப்டன் ஃபார்முக்குத் திரும்பியது, பவுலிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டது என மும்பைக்கும், அக்‌ஷர், நார்க்கியா, முஷ்டாஃபிஸுர் ஆகியோரின் ஃபார்ம் என டெல்லிக்கும் இந்த ஆட்டத்திலிருந்து எடுத்துப்போக நிறைய இருக்கின்றன.

Rohit
`உங்களில் யார் மோசமான டி20 டீம்?' என ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தினால் அதன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக இந்த சீசனின் டெல்லியையும் மும்பையையும் அனுப்பிவிடலாம். டெல்லி அணியின் பேட்டிங்கோ படுமோசம். இதுவரை 60 ஓவர்கள் முழுக்க ஆடி 447 ரன்கள். இப்போதெல்லாம் ஒரே டி20 போட்டியில் மொத்தமாய் இதைவிட அதிக ரன்கள் அடித்துவிடுகிறார்கள். மும்பை அணியோ பவுலிங்கில் சொதப்பல். இந்த சீசனில் 34 ஓவர்கள் வீசி மொத்தமே ஐந்து விக்கெட்கள்தான் எடுத்திருக்கிறது.

ஒரு அணியின் கேப்டனோ ரன் எடுக்கவே தடுமாறுகிறார். இன்னொரு அணியின் கேப்டன் ரன் எடுத்தாலும் அது ஸ்ட்ரைக் ரேட்டால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை என்கிற ரேஞ்சில் இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் பொதுவாய் இருக்கும் இரண்டே விஷயம் காயம்பட்டு முக்கிய வீரர்கள் வெளியே இருப்பதும் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருப்பதும்தான்.

DCvMI
DCvMI

இதிலும் தோற்கும் அணி டேபிளில் கடைசி இடத்திலேயே தேங்கிப் போய்விடும் வாய்ப்பிருப்பதால் இரு அணிகளும் முனைப்புடனே களமிறங்கின. டெல்லி சேஸிங்கிற்கு சாதகமான மைதானம். கடைசியாய் இங்கே ஆடப்பட்ட 23 ஆட்டங்களில் 16-ல் சேஸ் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. டாஸ் வென்ற ரோஹித் எதிர்பார்த்தது போலவே பவுலிங்கைத் தேர்வு செய்தார். பவுலிங்கை பலமாக்க ரைலி மெரிடித்தை உள்ளே கொண்டு வந்திருந்தார்கள். செகண்ட் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடவும் ஆள் வேண்டுமென்பதால் இம்பேக்ட் பிளேயராய் இன்னொரு ஃபாரீன் வீரரைக் கொண்டுவர வசதியாய் மூன்றே வெளிநாட்டு பிளேயர்கள்தான் ப்ளேயிங் லெவனில். டெல்லியில் ரூஸோவுக்கு பதில் முஷ்டாஃபிஸுர், கலீல் அகமதிற்கு பதில் டெல்லிக்காக ரஞ்சி ஆடும் யஷ் துல்.

முதல் ஓவரிலேயே ட்ரைவ் ஆடி பவுண்டரி கணக்கைத் தொடங்கினார் ப்ரித்வி ஷா. அதற்கடுத்த ஓவரில் ஆளுக்கொரு பவுண்டரி. மூன்றாவது ஓவரில் வார்னர் மட்டும் இரண்டு பவுண்டரிகள். ஒன்றைத் தவிர மீதி எல்லாமே நல்ல டைமிங்கில் ஆடப்பட்ட ஷாட்கள். `ஆஹா விடிவுகாலம் வந்துடுச்சு, விடிவுகாலம் வந்துடுச்சு' என ஆர்ப்பரித்தார்கள் ரசிகர்கள். `தம்பி, விடியல் வர இது அரசியல் இல்ல, ஐ.பி.எல்' என அடுத்த ஓவரிலேயே அதற்கு ஆப்படித்தார் ஹ்ரித்திக் ஷோகீன். ஸ்வீப் அடிக்க ஆசைப்பட்டு சரியாய் பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் பீல்டரிடம் கேட்ச்சைக் கொடுத்தார். `ஷா ஷாட் தேர்வுகள், ஸ்டைலில் மறுசீரமைப்பு செய்யவேண்டும்' என சென்னை 28 ஷார்க்ஸ் டீம் கேப்டன் மிர்ச்சி சிவாவைத் தவிர மீதி எல்லா உள்ளூர், அசலூர் முன்னாள் கேப்டன்களும் அறிவுறுத்தி அலுத்துப் போய்விட்டார்கள்.

DCvMI
DCvMI

அடுத்து வந்த மனிஷ் பாண்டே வந்த வேகத்தில் ஐந்து பவுண்டரிகள் அடித்தார். அதில் மூன்று பந்தே பாவம் பார்த்து பேட் எட்ஜில் பட்டுப் போன பவுண்டரிகள். பியூஷ் சாவ்லா வந்து பாண்டேவை பேக் செய்து பெவிலியன் அனுப்பினார். அப்புறமென்ன, அதே 'வந்தான் போனான் ரிப்பீட்டு' கதைதான். அனுபவமில்லாத யஷ் துல் மெரிடித் பந்தில் அவுட்டானார். ரோவ்மன் பவுலுக்கு பாண்டிங்கும் கங்குலியும் சேர்ந்து அடுத்த ஓவரும் ஃபாஸ்ட் பவுலிங்தான் வரும் என நம்ப வைத்து இறக்கி விட்டிருப்பார்கள் போல. ஆனால் வந்ததோ பியூஷ் சாவ்லா. 'ஸாரி சார்' என வணக்கம் வைத்து வெளியேறினார் பவுல். வேகப்பந்து வீச்சாளர்களை எல்லாம் விரட்டி விரட்டி அடிக்கும் பவுல் ஸ்பின்னைப் பார்த்தாலே அம்மாவுக்கு பம்மிய அ.தி.மு.க முன்னாள்களைப் போலாகி விடுகிறார். இதுவரை ஸ்பின் ஆடிய ஆறே பந்துகளில் மூன்று முறை அவுட்.

அடுத்து வந்த லலித் யாதவும் சாவ்லாவின் அற்புதமான கூக்ளியில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் 'என் கடன் பந்தோடு ஐஸ்பால் ஆடிக்கிடப்பதே' என மறுபக்கம் உருண்டு கொண்டிருந்தார் வார்னர். ஸ்கோர் 13 ஓவர்களில் 103/5. இந்த சீசனில் டெல்லிக்கு தப்பித் தவறி ஏதேனும் நல்லது நடக்குமானால் அது அக்‌ஷர் வழியே நடந்தால்தான் உண்டு. மனிதர் செம ஃபார்மில் இருக்கிறார். களமிறங்கிய சூட்டோடு திலக் வர்மா பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 'அதான் ஆறு பவுலிங் ஆப்ஷன் இருக்கே ஏற்கனவே, ஏன் திலக் பவுலிங் போடணும்' என்கிறீர்களா? இருக்கும் நிலைமையில் அடுத்த ஆட்டத்திலிருந்து ரோஹித்தே பவுலிங் போடத் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Rohit
Rohit

ஷோகீன் வீசிய 15வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள். க்ரீனின் அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள். பெஹ்ரான்டாஃப்பின் அதற்கடுத்த ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள். மெரிடித் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர். முதல் பந்திலிருந்து வார்னர் கஷ்டப்பட்டு எழுப்பி வைத்திருந்த ஸ்லோ பிட்ச் என்கிற மாயையை 'இதையா இவ்வளவு நேரம் உக்காந்து ஒட்டிகிட்டு இருந்தீங்க' என நான்கே ஓவர்களில் முடித்துவைத்து அரைசதம் அடித்து அவுட்டானார் அக்‌ஷர். ஸ்கோர் 165/5. 'ச்சே மட்டுமரியாதையே இல்லாம போச்சே' என அதற்கடுத்த இரண்டாவது பாலே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார் வார்னர். 47 பந்துகளில் 51 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 108. அதே ஓவரில் அபிஷேக் பொரேலும் காலி. மிச்சமிருந்த ஒரு விக்கெட்டையும் மெரிடித் கடைசி ஓவரில் காலி செய்ய 19.4 ஓவர்கள் முடிவில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது டெல்லி.

ஒருவழியாக 12வது ஓவரின் முதல் பந்தில் அரைசதம் தொட்டார் ரோஹித். 24 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவர் அடிக்கும் அரைசதம் இது. குல்தீ - அக்‌ஷர் - குல்தீப் - அக்‌ஷர் - லலித் என ஸ்பின்னை வைத்து வார்னர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட அதைத் தாண்டி ரன்கள் சேர்த்துக்கொண்டே இருந்தார்கள் இருவரும். முஷ்டாஃபிஸுரும் ஸ்லோ ட்ராக்குகளை நன்றாய் பயன்படுத்துவார் என்பதால் அவரையும் நன்றாகவே பயன்படுத்தினார் வார்னர். 15 ஓவர் முடிவில் ஸ்கோர் 123/1.

16வது ஓவரில் மறுபடியும் முகேஷை கூட்டிவந்தார் வார்னர். அதில் கோச் பாண்டிங் உள்பட யாருக்கும் உடன்பாடில்லை என்பது தெளிவாய் தெரிந்தது. குல்தீப் இரண்டு ஓவர்களே வீசியிருந்த நிலையில் இன்னுமொரு ஓவராவது அவருக்குக் கொடுத்திருக்கலாம் என்பது டக் அவுட்டில் எண்ணவோட்டமாய் இருந்திருக்கலாம். ஆனால் அந்த ஓவர் டெல்லிக்கு நல்லதும் செய்தது, கெட்டதும் செய்தது. ஓவரின் முதல் மூன்று பந்துகளிலேயே 16 ரன்கள். அடுத்த பால் டாட். அதற்கடுத்த பால் திரும்ப சிக்ஸர் அடிக்கப் பார்த்து அவுட்டானார் திலக்.

Rohit
Rohit

பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கினார் சூர்யகுமார் யாதவ். 'விட்றாதப்பே' என ஆடுகளம் படத்தில் சேவலைப் பார்த்து மன்றாடும் தனுஷைப் போல கைகோர்த்துக் காத்திருந்தார்கள் ரசிகர்கள். ஷார்ட் பாலை ஃபைன் லெக் பக்கம் தூக்கியடிக்க கப்பென பிடித்தார் குல்தீப். சூர்யா எப்போதும் ஸ்டைலாய் கெத்தாய் ஆடும் ஷாட் தான் அது. ஆனால் தொடர் விமர்சனங்களாலோ என்னவோ நேற்றைய ஆட்டத்தில் அவரின் உடல்மொழியில் தடுமாற்றம் இருந்துகொண்டே இருந்தது. டீப்பில் செம பீல்டரான சூர்யா இரண்டு முக்கியமான கேட்ச்கள் தவறவிட்டதே அதற்கு சாட்சி. 16 ஓவர் முடிவில் ஸ்கோர் 139/3.

'கைல ஏழு விக்கெட், நாலு ஓவர் இருக்கு. 34 ரன் அடிக்கமாட்டாங்களா?' என்றுதான் நினைத்தார்கள் மும்பை ரசிகர்கள். ஆனால் அடுத்த ஓவரே ரோஹித் நடையைக் கட்ட இப்போது களத்தில் இருந்தது டிம் டேவிட்டும் க்ரீனும். இருவருக்குமே ஐ.பி.எல் அனுபவம் மிகக் குறைவு. அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டார் ஐ.பி.எல் பழகிய நார்க்கியா.

அவர் வீசிய 18வது ஓவரில் ஆறே ரன்கள். தேவை இரண்டு ஓவர்களில் 20 ரன்கள். முஷ்டாஃபிஸுரின் 19வது ஓவரில் ஆளுக்கொரு சிக்ஸ் அடிக்க கடைசி ஓவரில் தேவை ஐந்தே ரன்கள் தான். மீண்டும் வந்தார் நார்க்கியா. முதல் பந்து சிங்கிள், அடுத்த இரண்டு பந்துகள் டாட். நான்காவது பந்து சிங்கிள், ஐந்தாவதில் ஒரு சிங்கிள். இப்போது தேவை ஒரு பந்தில் இரண்டு ரன்கள். எல்லாரும் பல்லைக் கடித்தபடி காத்திருக்க கடைசி பந்தையும் அருமையாய் போட்டார் நார்க்கியா. லாங் ஆஃபில் அதை டேவிட் தட்டிவிட பந்தையெடுத்த வார்னர் அதை அவசரத்தில் தலைக்கு மேலே தூக்கி வீசிவிட்டார். அதை கீப்பர் பிடித்து அடிப்பதற்குள் டேவிட் இரண்டாவது ரன் ஓடி க்ரீஸுக்குள். காத்திருந்த வெற்றியை முத்தமிட்டது மும்பை. 65 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா தான் ஆட்டநாயகன்.

DC Vs MI
DC Vs MI

கேப்டன் ஃபார்முக்குத் திரும்பியது, பவுலிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டது என மும்பைக்கும், அக்‌ஷர், நார்க்கியா, முஷ்டாஃபிஸுர் ஆகியோரின் ஃபார்ம் என டெல்லிக்கும் இந்த ஆட்டத்திலிருந்து எடுத்துப்போக நிறைய இருக்கின்றன. அதேபோல சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் ஆகியோரின் மோசமான ஃபார்ம், விளையாடிய நான்கிலும் தோல்வி, அதிலும் இரண்டு ஹோம் கிரவுண்டில் என இரு அணிகளும் கவலைப்படவும் நிறைய இருக்கின்றன. இரண்டு மாத நெடிய தொடரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த ஆட்டம் தொடங்கும் முன் இருந்த அதே இடங்களில்தான் இந்தத் தொடர் முடியும்போதும் இந்த அணிகள் இருக்குமா என்கிற கேள்விக்கு நிஜமாகவே காலம்தான் பதில் சொல்லும்.