`நீ ஜெயிக்கிறாயா; இல்லை நான் ஜெயிக்கிறேனா!' என போட்டி போட்டு ஆடும் அணிகளை தான் இதுவரை நாம் பார்த்திருப்போம். ஆனால் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் நீ தோற்கிறாயா அல்லது நான் தோற்க்கிறேனா பார்ப்போம் என்று இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு மோதினர்.

ஒரு கட்டத்தில் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் சிரிப்பு வரும் அளவுக்கான இன்னிங்ஸை இரண்டு அணிகளும் விளையாடின. டெல்லி மற்றும் கொல்கத்தா மோதிய ஐபிஎல் போட்டி நேற்று இரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்பு வரை இரண்டு அணிகளுமே அதிக தோல்விகளை சந்தித்து இருந்ததால் இரண்டு அணிகளிலும் நிறைய மாற்றங்கள் இருந்தன. டெல்லி அணிக்கு சீனியர் இசாந்த் அணிக்குள் வந்திருந்தார். கூடவே இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட்டும் அணியில் இருந்தார். கொல்கத்தாவில் ஜேசன் ராய், லிட்டன் தாஸ், மந்தீப் சிங், கெஜ்ரோலியா என பல மாற்றங்கள் இருந்தன. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பல மாற்றங்களை அணியில் கொண்டு வந்திருந்தாலும் கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் பெரிய விதமாக எந்த மாற்றமும் இல்லை. இரண்டாவது ஓவரில் லிட்டன் தாசும், நான்காவது ஓவரில் வெங்கடேஷும் ஆட்டமிழந்தனர். கூடவே ஆறாவது ஓவரில் கேப்டன் நித்திஷ் ரானாவும் கிளம்ப கொல்கத்தா அணி பவர்பிளே முடிவில் 35 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர் பிளே முடிந்த பின்பு அணி நிதானமாக விளையாடும் என்று எதிர்பார்த்தால் அதன் பின்பும் வீரர்கள் வருவதும் போதுமாகவே இருந்தனர். மந்திப் சிங், ரிங்க்கு சிங் மற்றும் நரைன் என அடுத்த மூன்று விக்கெட்டுகளை அடுத்த ஆறு ஓவர்களுக்குள் இழந்து அதிர்ச்சி தந்தது கொல்கத்தா.
ஆச்சரியம் என்னவென்றால் பல ஆண்டு காலமாக அந்த அணியில் இருக்கும் சீனியர் டி20 வீரரான ரசல், வரிசையாக விக்கெட்டுகள் சென்று கொண்டிருந்த போதும் மேலே இறங்கி அணியை காப்பாற்ற வேண்டும் என்று எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

என்ன தான் பினிஷராக இருந்தாலும் பொல்லார்ட் , தோனி எல்லாம் எத்தனையோ முறை அணியை காக்க முன் வரிசையில் விளையாடியதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் ரசலோ ஆறு விக்கெட்டுகள் விழுந்த பின் தான் களத்திற்கு வந்தார். ரசல் வந்த சிறிது நேரத்திலேயே நன்கு விளையாடிக் கொண்டிருந்த ஜேசன் ராய் 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்த இரண்டு விக்கெட்டுகளை கொல்கத்தா இரண்டே ஓவர்களில் விட ரசல் தனிமரமாக ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தார்.
ரன்கள் ஓடவும் முடியாமல், நினைத்த நேரத்தில் சிக்ஸர்கள் அடிக்கவும் முடியாமல் தடுமாறினார் ரசல். ஒரு கட்டத்தில் 26 பந்துகளில் 19 ரன்கள் என்று இருந்தார். கடைசி ஓவரில் முகேஷ் குமார் வீசிய பந்துகளில் 3 பந்துகள் வசமாய் சிக்க அதை சிக்ஸர் ஆக மாற்றினார் ரசல். 20 ஓவர் முடிவில் 127 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. டெல்லி சார்பில் இஷாந்த், குல்தீப் மற்றும் நார்கியா ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். எளிய இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு வழக்கம் போல பிரித்வி ஷா ஏமாற்றினாலும், வார்னர் பழைய வார்னராக மாறி கர்ஜித்தார். பவர்பிளே ஓவர்களில் தனி ஆளாக வார்னர் மட்டுமே 11 பவுண்டரிகளை அடித்தார்.
எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த டெல்லிக்கு எட்டாவது ஓவரில் மார்ஷும் அதற்கு அடுத்த ஓவரில் சால்ட்டும் ஆட்டம் இழந்தனர். கூடவே வார்னரும் கிளம்ப, ஆட்டம் சூடு பிடித்தது. சூடு பிடித்தது என்று கூறுவதை விட டெல்லி தனக்கு தான் தீ வைத்துக் கொண்டது என கூறலாம். இனிய இலக்கு என்றாலும் ஏகப்பட்ட டாட் பால்களை வைத்துக் கொண்டே இருந்தது டெல்லி.

இவர்கள் ஸ்பின்னில் திணறுகிறார்கள் என்பதை உணர்ந்த கொல்கத்தாவும் நித்திஷ் ராணாவை வைத்துக்கொண்டு நான்கு ஓவர்கள் போட்டு முடித்தது. அவரும் இரண்டு விக்கெட்டுகள் எல்லாம் வீழத்தி அசத்தினார். 18வது கீப்பர் லிட்டன் தாஸ் ஒரு ஸ்ட்ம்ப்பிங் வாய்ப்பை விட, கடைசி ஓவரில் டெல்லிக்கு ஏழு ரன்கள் தேவை என்றானது. ஸ்பின் வீச ஆள் இல்லை என்பதால் கெஜ்ரோலியா பந்து வீசினார். வெறும் ஏழு ரன்களை defend செய்கையில் அவர் நோ பால் எல்லாம் வீச டெல்லி ஓடி ஓடியே ஏழு ரன்களை எட்டி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐந்து ஆட்டங்களில் தோல்வி கண்ட டெல்லி முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றியை இந்த ஆட்டத்தின் மூலம் பெற்றது.
பல நல்ல ஆட்டங்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த ஆட்டத்தைக் காண ஆப்பிள் சிஇஓ டிம் குக்கை எல்லாம் அழைத்து வந்திருந்தனர். IPL என்றால் இப்படி தூக்கம் வருகிற ஆட்டம் என்று அவர் நினைக்காமல் இருந்தால் சரி தான்.