"ஹிட்மேன்" ரோஹித்தின் எழுச்சி:
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 25 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அரைசதம் அடித்திருந்தார். இதில் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு, ஐ.பி.எல் தொடரில் ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 'அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்' (19 முறை) என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்து தோனி, 17 ஆட்டநாயகன் விருதுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கள்ளச்சந்தையில் சிஎஸ்கே மேட்ச் டிக்கெட்:
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகின்றது. இந்தப் போட்டிக்கு அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்தப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்நிலையில் மைதானத்திற்கு வெளியேயும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் 750 ரூபாய் விலையுடைய டிக்கெட் 5,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்சிபி-யில் இலங்கை ஆல்ரவுண்டர்:
இலங்கை அணியின் ஆல்-ரவுண்டரான வனிந்து ஹசரங்கா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமானார். அதே 2021 டி20 உலகக் கோப்பையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். சென்ற வருடம் 2022 ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இவரை, 10.75 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. கடந்த போட்டியின் போது பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் மீது விமர்சனம் எழுந்தநிலையில், ஆர்சிபி அணிக்குப் பலம் சேர்க்கும் வகையில் இவர் இணைந்துள்ளார்.

வார்னரின் புதிய சாதனை:
நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் கேப்டனாக விளையாடி 3,000 ரன்களைக் கடந்து சாதித்துள்ளார். இந்த 2023 ஐபிஎல் தொடரில், 4 போட்டிகளில் 209 ரன்கள் எடுத்து, 'ஆரஞ்சு கேப்' பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கேப்டன் தோனியின் 200வது போட்டி:
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி விளையாடும் 200வது போட்டி இதுவாகும். இது குறித்து நேற்று பேட்டியளித்த ஜடேஜா, "சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200வது போட்டியில் விளையாடும் தோனிக்கு, சேப்பாக்கம் ரசிகர்களின் முன்னிலையில் வெற்றியை பரிசாக அளிப்போம்" எனக் கூறியுள்ளார்.