ரோஹித்தின் மைல்கல்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாகும். 2020 ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளது, மும்பை அணி. இந்த ஆட்டத்தில் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஐ.பி.எல் தொடரில் 6000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோர் இதற்கு முன் 6000 ரன்களைக் கடந்துள்ளனர்.

தூள் கிளப்பும் திலக் வர்மா:
நடப்பு ஐ.பி.எல் தொடரின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார், திலக் வர்மா. நேற்றைய ஆட்டத்தில் 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து, அணிக்கு உத்வேகம் அளித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல முன்னணி வீரர்கள், இத்தொடரில் சிறப்பாக விளையாடாவிட்டாலும், திலக் வர்மா தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகின்றார். வெறும் 20 வயதான இவர், இந்த ஐபிஎல் தொடரில் 200 ரன்களைக் கடந்த முதல் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆவார்.
3 வருடங்களுக்கு பிறகு:
இன்றைய ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. 3 வருடங்கள், 11 மாதங்கள் மற்றும் 22 நாள்களுக்குப் பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூர் மைதானத்தில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும், சொந்த மண்ணில் களமிறங்குவதால், ராஜஸ்தான் அணிக்கு இன்று வெற்றி வாய்ப்பு பலமாக இருக்கின்றது.

சரித்திரத்தில் இன்று:
ஐபிஎல் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 2008-ம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடியது. இதில் 240 ரன்களை அடித்து அசத்தியது, சி.எஸ்.கே அணி. ஐபிஎல் தொடரில் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். போட்டியில் மைக்கேல் ஹஸ்ஸி, 54 பந்துகளில் 116 ரன்கள் அடித்து அசத்தினார். இதேநாளில்தான் சி.எஸ்.கே அணி தன்னுடைய பயணத்தைத் தொடங்கியது என்பதாலேயே இந்த நாள் கூடுதல் ஸ்பெஷலாகிவிட்டது.
அர்ஜுனின் முதல் விக்கெட்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 192 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தோல்வியடைந்தது.

இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர், புவனேஸ்வர் குமாரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், ஐ.பி.எல் தொடரில் தனது விக்கெட் கணக்கைத் தொடங்கியுள்ளார், அர்ஜுன் டெண்டுல்கர். இதே போல், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேனான கேமரூன் கிரீன், 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அசத்தினார். இவர், ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை அடித்துள்ளார்.