விடாது விரட்டும் விராட்:
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அணியின் கேப்டனான விராட் கோலி, 37 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் இவர், சின்னசாமி மைதானத்தில் டி20 போட்டிகளில் விளையாடி 92 இன்னிங்ஸில் 3,015 ரன்களை அடித்துள்ளார். ஓரே மைதானத்தில் டி20 போட்டிகளில் 3,000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், விராட் கோலி.

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி, தொடர்ந்து 14வது சீசனிலும் 300 ரன்களை கடந்துள்ளார். ஐபிஎல் சீசன்களில் தொடர்ச்சியாக அதிக முறை 300+ ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் விராட் கோலி (14) முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்து, சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் இருவரும் ஐபிஎல் வரலாற்றில், 12 முறை 300+ ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
ஆர்.சி.பி-யின் 4 டிராகன்ஸ்:
பெங்களூர் அணியின் பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல், விராட் கோலி மற்றும் ஃபாப் டூ ப்ளெஸ்ஸிஸ் ஆகியோர், இந்தத் தொடரின் ஆகச் சிறந்த கூட்டணியாக வலம் வருகின்றனர். இந்த தொடரில் ஃபாப் டூ ப்ளெஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் தலா 5 அரை சதங்களை அடித்துள்ளனர். மேக்ஸ்வெல் 3 அரை சதங்களை அடித்துள்ளார். இந்தத் தொடரில் அதிக அரை சதங்களை (13) பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அதேபோல், பந்துவீச்சிலும் முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். இவர், இந்த நடப்பு தொடரில் வீசிய 32 ஓவர்களில், 100 பந்துகள் டாட் பால்களே ஆகும். இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் நிறத் தொப்பியையும் கைப்பற்றியுள்ளார், சிராஜ்.

கொல்கத்தாவின் வெற்றிப் பயணம்:
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, கொல்கத்தா அணி.

இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து 5வது முறையாக சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. கடந்த 2016, 2017, 2018, 2019 மற்றும் இந்த 2023 ஐபிஎல் சீசன்களில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது கொல்கத்தா அணி.
ஜேசன் ராய்க்கு அபராதம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து, 10 வது ஓவரில் வைஷக் விஜயகுமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வைஷக் விஜயகுமார் வீசிய 10வது ஒவரின் கடைசிப் பந்தை எதிர்கொண்ட போது பந்து ஸ்டம்பில் பட்டதால், பெய்ல்கள் கீழே விழுந்தன. கீழே விழுந்த பெய்ல் ஒன்றை தனது பேட்டை வைத்து அடித்தார், ஜேசன் ராய். இந்த ஐபிஎல் நடத்தை விதிமுறையை மீறியதற்காக ஜேசன் ராய்க்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதமாக விதித்துள்ளது, ஐபிஎல் நிர்வாகம்.

ரசிகரின் போனில் பேசிய சஞ்சு:
இன்றிரவு ஜெய்ப்பூர் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்நிலையில், மைதானத்தில் வீரர்கள் பயிற்சி செய்வதை காண்பதற்காக ரசிகர்கள் வந்திருந்தனர். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுடன் ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுத்தனர்.

இதில் ரசிகர் ஒருவரின் ஃபோனை வாங்கி சஞ்சு சாம்சன் செல்ஃபி எடுத்த போது, எதார்த்தமாக ரசிகரின் மொபைலுக்கு கால் ஒன்று வந்தது. அந்த ரசிகரும் ஃபோனை எடுத்து பேசச் சொல்ல, சஞ்சுவும் அவரின் மொபைலில் க்யூட்டாக பேசினார். இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.