வீரர்களுக்கு அபராதம்:
வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில், 3 வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. முதல் இன்னிங்ஸின் 9 வது ஓவரை, மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹிரிதிக் ஷோகீன் வீசினார். முதல் பந்திலேயே நிதிஷ் ராணா, கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஆடுகளத்தை விட்டு வெளியேறும் முன்னர், இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக நிதிஷ் ராணாவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதமும், ஹிரிதிக் ஷோகீனிற்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ், பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கும் 12 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ரோஹித்தின் புதிய சாதனை:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார், ரோஹித் சர்மா. இந்த ஆட்டத்தில், 13 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர், ஐபிஎல் தொடரில் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1040 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார், ரோஹித் சர்மா. அடுத்த இடத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஷிகர் தவான் 1029 ரன்களை அடித்துள்ளார்.
தோனி vs ஆர்.சி.பி
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடவுள்ளன. ஆர்.சி.பி அணிக்கு எதிராக 31 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார், சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி. இதில் 838 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஆர்.சி.பி அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்துள்ள வீரர், தோனியே ஆவார். இதுவரை நடைபெற்ற CSK vs RCB இடையேயான 30 போட்டிகளில், 19 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியிலும் தோனியின் ஆதிக்கம் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சஞ்சுவின் சாமர்த்திய ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. முதல் 10 ஓவர்களில், விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். சஞ்சு சாம்சன், களத்தில் நின்று தன்னுடைய சாமர்த்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் 32 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 3000 ரன்களை கடந்த முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார், சஞ்சு சாம்சன். மேலும், ரஷித் கான் வீசிய 13 வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து மிரள வைத்தார். இதற்கு முன்னர், கிறிஸ் கெய்ல் மட்டுமே ரஷித் கான் ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை - மகன் நெகிழ்ச்சி!
நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கினார், அர்ஜூன் டெண்டுல்கர். இவர், கடந்த இரு ஐ.பி.எல் சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

இதன் மூலம், ஐ.பி.எல் தொடரில் ஒரே அணிக்காக தந்தையும் மகனும், தங்களது அறிமுக ஆட்டத்தில் விளையாடியுள்ளனர். இவரின் தந்தையான சச்சின் டெண்டுல்கர், கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமாகி விளையாடினார். இவர்கள், ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் தந்தை-மகன் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.