தோனியை முந்திய டூ ப்ளஸ்ஸிஸ் & மேக்ஸ்வெல்!
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில், டூ ப்ளஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இணைந்து விஸ்வரூபம் எடுத்தனர். இவர்கள் இருவருமே மாறி மாறி, சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் அடித்து விளாசினர். அப்போது ஜியோ சினிமா ஆப்-ல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.8 கோடியாக உயர்ந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த CSK vs LSG ஆட்டத்தில், தோனி பேட்டிங் செய்த போது 1.7 கோடி பேர் பார்த்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. இதனை முறியடித்துள்ளது, டூ ப்ளஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் கூட்டணி.

ஒரே ஆட்டம்; 1.7 லட்சம் ஃபாலோவர்ஸ்!
ஒரே ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார், ரிங்கு சிங். அந்த அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.7 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.

தற்போது வரை, இவரை 5.2 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
சிஎஸ்கே-வில் இணையும் இலங்கை வீரர்கள்!
இலங்கை வீரர்களான மஹீஷ் தீக்ஷனா மற்றும் பதிரனா ஆகிய இரு வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையவுள்ளனர். இவர்கள் இருவரும், தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதனைப் பகிர்ந்துள்ளனர். நாளை நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இவர்கள் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பந்துவீச்சாளர்களான இவர்கள் அணியில் இணைந்துள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

சாதித்த ஹர்ஷல் படேல்!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளரான ஹர்ஷல் படேல், 4 ஓவர்கள் வீசியதில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார்.

டூ ப்ளஸ்ஸிஸ்க்கு அபராதம்!
நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்து வீசியது. பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் ஐபிஎல் நிர்வாகம், பெங்களூர் அணியின் கேப்டன் டூ ப்ளஸ்ஸிஸ்க்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.