தனி ஒருவனாய் சாதித்த தவான்!
நேற்றிரவு நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஷிகர் தவான் மட்டும் களத்தில் தனியொரு ஆளாக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில், 66 பந்துகளில் 99 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பொதுவாக, வெற்றி பெறும் அணி வீரரில் ஒருவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். ஆனால், இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்தாலும், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த நடப்பு 2023 ஐபிஎல் தொடரில், தோல்வியடைந்த அணியின் வீரர் ஒருவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டியின் மூலம் ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். 3 போட்டிகளில் விளையாடி 225 ரன்கள் எடுத்துள்ளார், ஷிகர் தவான்.

யாஷுக்கு கொல்கத்தாவின் ஆறுதல்:
குஜராத்துக்கு எதிராக ரிங்கு சிங் அசாத்தியமாக ஆடியிருந்தார். யாஷ் தயாளின் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். இந்நிலையில் கொல்கத்தா அணி யாஷ் தயாளுக்கு ஒரு மெசேஜைக் கூறியிருக்கிறது.

'இது ஒரு கடினமான நாள், அவ்வளவுதான். தலைசிறந்த வீரர்களுமே கூட இதேபோன்ற நாட்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு சாம்பியன். கட்டாயமாக இதிலிருந்து மீண்டு வருவீர்கள். தலை நிமிருங்கள்' - என கொல்கத்தா அணி நிர்வாகம் யாஷுக்கு ஆறுதல் கூறும் வகையில் ட்வீட் செய்திருக்கிறது.
2000 ரன்களைக் கடந்த கில்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சுப்மன் கில், 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இதுவரை 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2000 ரன்களைக் கடந்து, 200 பவுண்டரிகளையும் அடித்துள்ளார். இளம் வயதிலேயே இச்சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், கில்.
காயத்தில் தீபக்சஹார், பென் ஸ்டோக்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான தீபக்சஹார் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அணி நிர்வாகம், "பயிற்சியின்போது பென் ஸ்டோக்ஸுக்கு கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தீபக் சஹாருக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளது. மேலும், இவர்கள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

துஷார் தேஷ்பாண்டே விளக்கம்!
மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் துஷார் தேஷ்பாண்டே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில், ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்துவதெல்லாம் எளிது. அவர் ஒன்றும் விராட்டோ, சச்சினோ அல்ல என துஷார் தேஷ்பாண்டே கூறியதாக சமூகவலைதளங்களில் பரவியது. இதற்கான மறுப்பை துஷார் தேஷ்பாண்டே இப்போது தெரிவித்திருக்கிறார். 'கிரிக்கெட் உலகின் இந்த ஜாம்பவான்கள் மீது நான் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அவர்களை பற்றி இப்படி தரக்குறைவாக நான் ஒரு நாளும் பேசமாட்டேன். பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.' என துஷார் தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பகிர்ந்திருக்கிறார்.