Published:Updated:

IPL 2023 Daily Round Up: `பிளே ஆஃப்-ல் இந்த அணிகள் தான்'- ஹர்பஜனின் கணிப்பு முதல் தோனியின் மாஸ் வரை!

தோனி

ஐபிஎல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL 2023 Daily Round Up: `பிளே ஆஃப்-ல் இந்த அணிகள் தான்'- ஹர்பஜனின் கணிப்பு முதல் தோனியின் மாஸ் வரை!

ஐபிஎல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

தோனி

நிதிஷ் ராணாவின் சாதனை:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் முதல் இன்னிங்ஸில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்தது, கொல்கத்தா. அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ராணா இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் நிதிஷ் ராணா 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2,000 ரன்களை அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு முன்னர் கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் 2,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

Rana
Rana

ஹர்பஜன் சிங்கின் கணிப்பு:

இந்த ஐபிஎல் 2023 சீசன் தொடங்கி, விறுவிறுப்பாக லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. வருகின்ற மே 23-ம் தேதி பிளே ஆஃப் போட்டிகள் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் வீரரான ஹர்பஜன் சிங், ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகளை கணித்துள்ளார். இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய நான்கு அணிகளும் இந்த 2023 ஐபிஎல் சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் என தெரிவித்துள்ளார். இவரின் கணிப்பு சரியாக இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஸலின் 6×600:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான ஆண்ட்ரே ரஸல் டி20 தொடரில் 600 சிக்ஸர்களை அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கிய ரஸல், 15 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடர் முழுக்க ரஸல் மந்தமாகவே ஆடிவந்தாலும், இந்த ஆட்டத்தில் தனது சிக்னேச்சர் ஸ்டைலில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டார். இதன் மூலம், அனைத்து வகையான டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்திலும், பொல்லார்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Andre Russell
Andre Russell

மழையிலும் குறையாத மவுசு!

நேற்று முன்தினம், லக்னோ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ அணியுடன் மோதியது. மழையின் காரணமாக போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் பிறகு, மைதானத்தை விட்டு சி.எஸ்.கே அணியின் வீரர்கள் வெளியேறும் போது, ரசிகர்கள் படை மைதானத்திற்கு வெளியே சூழ்ந்திருந்தன.

இவர்கள் "சி.எஸ்கே...! சி.எஸ்கே...!" என கத்திய படியே, கொட்டும் மழையிலும் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த தொடரில், சி.எஸ்.கே அணி செல்லும் இடமெல்லாம் மஞ்சள் பூசியது போலவே காட்சியளிக்கின்றது. இதெல்லாம் தோனி என்ற ஒற்றை வீரனுக்கு மட்டுமே நடக்கும்!