நேபாளத்து ஆர்சிபி ரசிகர்கள்!
நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. ஆர்சிபி அணியின் ஆட்டத்தைக் காண்பதற்காக சில ரசிகர்கள், நேபாள் நாட்டிலிருந்து 2,376 கி.மீ பயணித்து வந்துள்ளனர். இவர்கள் "மிஸ் யூ ஏபிடி..!", "ஈ சாலா கப் நமதே..!" என்ற வாசகம் பொறித்த பதாகையுடன் மைதானத்தில் நிற்கும் புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகின்றது.
1.4 கோடி பேர் பார்த்த திலக் வர்மாவின் பேட்டிங்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் திலக் வர்மா பேட்டிங் செய்தபோது ஜியோ சினிமா ஆப்பில் 1.4 கோடி பேர் பார்த்துள்ளனர். அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் செய்தபோது 1.3 கோடி பார்வையாளர்கள் பார்த்தனர். இந்த 2023 ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக, சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேட்டிங் செய்த போது 1.6 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
சஹாலின் புதிய சாதனை!
நேற்று ஹைதராபாத்தில் உள்ள மைதானத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியினரால் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஹால், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அனைத்து டி20 போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.

விராட் கோலியின் புதிய மைல்கல்!
நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு முக்கியக் காரணம், விராட் கோலி மற்றும் டூ ப்ளஸ்சிஸ் ஜோடியின் அதிரடியான பேட்டிங். இருவரும் மாறி மாறி மாயாஜாலங்கள் நிகழ்த்த, பந்துகள் பவுண்டரி எல்லையை நோக்கிப் பறந்தன. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அணியின் கேப்டனான விராட் கோலி 49 பந்துகளில் 82 ரன்களை எடுத்தார். இது ஐபிஎல் தொடரில் அவர் அடித்த 50வது (50 ரன்களுக்கும்) மேற்பட்ட ஸ்கோராகும். மேலும் இந்த சாதனையை நிகழ்த்திய "முதல் இந்திய கிரிக்கெட் வீரர்" என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். கோலி இதுவரை 45 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் அடித்துள்ளார்.
அறிமுக ஆட்டத்திலேயே 100 மீட்டர் சிக்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன் அணியின் அறிமுக வீரராய் களமிறங்கினார், நேஹால் வதேரா. கரண் ஷர்மா வீசிய 14 வது ஓவரில் 101 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து அசத்தினார். அதே ஓவரிலேயே நேஹால் வதேரா, 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நடப்பு 2023 ஐபிஎல் தொடரில், 100 மீட்டர் சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு ஐபிஎல் தொடரில் இதுவே முதல் ஆட்டமாகும்.