ஒரு டாட் பாலுக்கு 500 மரங்கள்:
இந்த நடப்பு 2023 ஐபிஎல் சீசனில், பிளே ஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கியது. மக்களிடையே பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்திற்கும், பி.சி.சி.ஐ சார்பில் 500 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டாட் பந்துகள், கிரீன் பால்களாக கணக்கிடப்படுகின்றன. நேற்று நடைபெற்ற CSK vs GT இடையேயான போட்டியில், சிஎஸ்கே அணி விளையாடிய முதல் இன்னிங்ஸில் 34 டாட் பால்கள் வீசப்பட்டன. குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸில், 50 டாட் பால்கள் வீசப்பட்டன. நேற்றைய முதல் குவாலிஃபயர் போட்டியில், மொத்தமாக 84 பால்கள் வீசப்பட்டதன் மூலம் 42,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

சுப்மன் கில்லின் அதிரடி!
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரரான சுப்மன் கில், இந்த சீசன் முழுக்கவே வியக்க வைக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். நேற்றைய போட்டியிலும் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 722 ரன்களை அடித்து அசத்தியுள்ளார். இதில் இரண்டு சதங்களும், நான்கு அரை சதங்களும் அடங்கும்.

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே விராட் கோலிக்கு பிறகு ஒரே சீசனில் 700 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார், கில். மேலும், ஒரே சீசனில் 700 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெற்றுள்ளார்.
ஜடேஜாவின் சாதனை:
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிபையர் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியான வெற்றியை பதிவு செய்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதில், ரவீந்திர ஜடேஜா நான்கு ஓவர்கள் வீசியதில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில் இவரின் எக்கானமி 4.50 ரன்கள் மட்டும் தான். இந்த போட்டியின் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் ட்வீட்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியைத் தொடர்ந்து, ஹர்பஜன் சிங் தன்னுடைய ஸ்டைலில் வாழ்த்து ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். இதில், "மதியால் விதியை வெல்ல முடியுமோ! முடியாதோ! ஆனால், மஹியால் முடியும். முயற்சியும் இருக்கணும். அது பலனளிக்க நல்ல விதியும் இருக்கணும்-னு சொல்வாங்க. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அது பொருந்தும். மத்தவங்க தோள் மேல ஏறி தன்னை உயர்த்தி காட்டுற உலகத்துல. தனிச்சு சாதிக்குற எம்.எஸ். தோனி நீ சிங்கம் தான்." என வாழ்த்து பகிர்ந்துள்ளார்.
அன்பின் குகையில் அனல் பறந்த ஆட்டம்!
இந்த ஐபிஎல் 2023 தொடரின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சி.எஸ்.கே அணியும் மோதின. இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணி கடைசி இரண்டு ஓவர்கள் பேட்டிங் செய்த போது, ஜியோ சினிமா ஆப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக உயர்ந்தது. இந்தத் தொடரில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட போட்டி இதுவேயாகும். இதற்கு முன்னதாக CSK vs RCB இடையேயான போட்டியை, ஜியோ சினிமா ஆப்-ல் 2.4 கோடி பேர் பார்த்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற்றது, குறிப்பிடத்தக்கது.
என்னை தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே, அட அவனும் இங்க நான்தானே!