மனங்களை வென்ற ரஷீத் கான்:
குஜராத் டைட்டன்ஸ் அணி, ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இன்னிங்ஸின் 16வது ஓவரை குஜராத் வீரரான நூர் அஹமத் வீசினார். ஓவரின் மூன்றாவது பந்தில் ராஜஸ்தான் வீரர் ட்ரென்ட் போல்ட், சிக்ஸர் ஒன்றை அடித்தார். அந்த பந்து மைதானத்திற்கு வெளியே இருந்த டெலிவிஷன் கேமராமேன் தலையின் மேல் பட்டது. உடனே பதறிய ரஷீத் கான், விளம்பர பதாகைகளைத் தாண்டி சென்று அந்த கேமராமேனிடம் நலம் விசாரித்தார். இந்தச் செயல், மைதானத்தில் இருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது. ரஷீத் கானின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆப்கனில் 1000 லெக்-ஸ்பின்னர்கள்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான வெற்றியைப் பெற்றது. இதில் சிறப்பாகப் பந்து வீசிய ரஷீத் கான், 4 ஓவர்களில் 14 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த ஆட்டத்தில் மற்றொறு ஆப்கன் வீரரான நூர் அஹமத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டிக்குப் பிறகு பேசிய ரஷீத் கான், "உண்மையில் ஆப்கானிஸ்தானில் இப்போது 1000 க்கும் மேற்பட்ட லெக் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். என்னுடைய ஐபிஎல் அறிமுகத்தின் போது 250 லெக்-ஸ்பின்னர்கள் இருந்தனர். நான் 6-7 வருடங்களாக ஐபிஎல் விளையாடி வருகிறேன். இப்போது, ஆப்கானிஸ்தானில் பலர் என்னை போன்றே பந்து வீச முயல்கின்றனர். நூர் அஹமத், இங்கு சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
தொடரும் சி.எஸ்.கே-வின் ஆதிக்கம்:
நடப்பு 2023 ஐபிஎல் சீசன், ஐந்தாவது வாரமாக கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்த 2023 ஐபிஎல் தொடரில், மிகவும் பிரபலமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே, முதல் நான்கு வாரங்களில் இருந்தது. தற்போது ஐந்தாவது வாரத்திலும் சி.எஸ்.கே அணியே மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான வீரர்கள் பட்டியலில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி, தொடர்ந்து ஐந்தாவது வாரமாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மும்பை vs சேப்பாக்கம்:
போக்கிரி படத்தில் விஜய், வில்லன் இடத்திற்கே சென்று வில்லனின் ஆட்களில் ஒருவரை அடித்து விட்டு, "உன் ஆளுங்க, உன் இடம். நான் எதுக்கும் பயப்பட மாட்டேன். அதுக்கு இதான் சேம்பிள்!" என்ற வசனத்தை வில்லனிடம் சொல்வார். கிட்டத்தட்ட அதே சீன், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பொருந்தும். இன்று சி.எஸ்.கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளன.

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை CSK vs MI இடையே நடைபெற்ற 7 போட்டிகளில், கடைசி 5 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டிக்கு எதிர்பார்ப்புகள் அதிகமுள்ள நிலையில், மும்பை அணியின் வெற்றிநடை இன்றும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.