குஜராத்தின் வீறுநடையை நிறுத்திய டெல்லி:
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம், குஜராத் அணியின் வீறுநடைக்கு டெல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் இதுவரை 14 போட்டிகளில் சேஸிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது. முதல் முறையாகக் கடந்த 2022 ஐ.பி.எல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 178 ரன்களை டிபெண்ட் செய்து அசத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதற்கு பிறகு, இந்த போட்டியில் 130 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி டிபெண்ட் செய்து கலக்கியுள்ளது.

என்னா மனுஷன் யா!
இங்கிலாந்து வீரரான டேவிட் வில்லி, இந்த 2023 ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆர்.சி.பி அணியின் தொடக்கப் போட்டிகளில் விளையாடிய இவருக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி, தனது சொந்த நாட்டிற்கு திரும்பினார். இவருக்குப் பதிலாக கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், டேவிட் வில்லியின் மகன் முதல் சிறுவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளதால், அவரை வாழ்த்தி தனது கையொப்பமிட்ட பேட் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார் விராட் கோலி. இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "Future Royal challengers Bangalore player?" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் டேவிட்.
நீருக்குள்ளே மூழ்கினாலும்!
இந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் மஞ்சள் சட்டை பாய்ஸ் சூழ்ந்து வருகின்றனர். அதே அளவு, சி.எஸ்.கே ரசிகர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வியக்க வைக்கின்றது. இவை அனைத்தையும் மிஞ்சும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் ஒருவர் கடலுக்கு அடியில் சி.எஸ்.கே-வின் கொடியுடன் நீந்தும் புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த ரசிகரின் செயலை மகிழ்ச்சியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.

'கேப்டன்' க்ருணால் பாண்டியா:
இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக க்ருணால் பாண்டியா செயல்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்.சி.பி அணிக்கு எதிரான கடந்த போட்டியின் போது கேப்டன் கே.எல்.ராகுலுக்குத் தொடையில் காயம் ஏற்பட்டது. இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை டூ பிளெஸ்ஸி அடித்தார். பந்தைத் தடுக்க முயன்ற போது தசைப் பிடிப்பு காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார் கே.எல். ராகுல். இன்றைய போட்டியில் இவர் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது.

லக்னோவுக்கு அடி மேல் அடி:
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், காயம் காரணமாக இந்த 2023 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்ட போது, இவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இவருக்கு மாற்றாக வேறு வீரரை இன்னும் அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை. வருகிற ஜூன் 7-ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இவர் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.