இதான் ஃபர்ஸ்ட் டைம்:

இந்த ஐபிஎல் 2023 சீசனில் முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்து, இரண்டாவது பாதி ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த 2023 சீசன், அதிக 200+ ஸ்கோர் அடிக்கப்பட்ட சீசனாக மாறியுள்ளது. இந்த சீசனின் முதல் 38 போட்டிகளில், 20 முறை 200+ ரன்களை அணிகள் எடுத்துள்ளன. இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணி 4 முறையும், சி.எஸ்.கே. மற்றும் லக்னோ அணிகள் தலா 3 முறையும் 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கின்றன. அதிகபட்சமாக கடந்த 2022 சீசனில், 18 முறை 200+ ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டிருந்தது.
ரஷித்கானை ரவுண்டு கட்டிய கொல்கத்தா:

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. இந்த இன்னிங்ஸின் 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்களை எடுத்தது, கொல்கத்தா அணி. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரரான ரஷித் கான், 4 ஓவர்கள் வீசியதில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 54 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஐ.பி.எல் தொடரில், இவர் வீசிய இரண்டாவது மோசமான ஸ்பெல் இதுவாகும். இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்திருந்தார். இது ரஷித் கானுக்கு 100வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கோலி vs கில்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சுப்மன் கில், 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அசத்தினார். இவர், இந்த தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடி 333 ரன்கள் எடுத்துள்ளார். இதே போல், ஆர்.சி.பி அணியின் விராட் கோலியும் 8 ஆட்டங்களில் 333 ரன்கள் எடுத்துள்ளார். இவர்கள் இருவருமே 234 பந்துகளில் இந்த ரன்களை அடித்துள்ளனர். ஆனால், அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திலும், சுப்மன் கில் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
`ஃபேன் பாய்ஸ்'-ன் தரமான சம்பவம்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவுக்கு, இன்று பிறந்தநாள். இவரின் 36 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சிலர் 60 அடி உயரத்திற்கு கட்- அவுட் ஒன்றை வைத்துள்ளனர். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவுள்ளார், ரோஹித் சர்மா.
ஐபிஎல்-ன் 1000வது போட்டி:
இன்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இதுவே ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியாகும். இப்போட்டியை ஒரு சிறிய கொண்டாட்டத்துடன் தொடங்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. இதில், சில முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடர் பற்றி பேசும் வீடியோ வெளியிடப்படும். பின்னர், பிசிசிஐ நிர்வாகிகள் அணியின் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் நினைவுப் பரிசினை வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடரின் 1000வது போட்டி, மே 6 ஆம் தேதியில் நடைபெறவுள்ள CSK vs MI ஆட்டம் தான் என வதந்திகள் பரவின. ஆனால், அது உண்மையில்லை. அதே சமயம், மே 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள CSK vs MI ஆட்டம் உறுதியானது தான்.