தோனியும் சி.எஸ்.கே-வும்!
நடப்பு 2023 ஐபிஎல் சீசன், கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது குவாலிபையர் போட்டி மற்றும் இறுதிப்போட்டி மட்டுமே மீதமுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஆர்மேக்ஸ் மீடியா என்ற தனியார் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் பிரபலமான ஐபிஎல் அணிகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் தொடர்ந்து ஏழாவது வாரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே முதலிடத்தில் உள்ளது. இதே போல, இந்த 2023 ஐபிஎல் தொடரில் பிரபலமான வீரர்கள் பட்டியலில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி, தொடர்ந்து ஏழாவது வாரமாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆக, இதான் நாங்க!
கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு, இந்த 2023 ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இதனாலேயே என்னவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு போட்டிக்கும் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத் மோடி மைதானத்தில் விளையாடவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அணியின் கேப்டன் தோனி சேப்பாக்கம் மைதான ஊழியர்களை அழைத்துப் பரிசுகளை வழங்கியுள்ளார்.
மைதான ஊழியர்களுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது.
ரோஹித் இதை தான் பண்ணுவார்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேனான இஷான் கிஷன், ஜியோ சினிமாவில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதில் பேசிய அவர், "ரோஹித் பாய், இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதை பார்த்திருக்கிறேன். அவர்களிடமிருந்து சிறந்த திறனை வெளிக்கொண்டு வருவார். அவர் எப்போதுமே 'நான் உன்னை நம்புறேன்' என்று சொல்வார். பௌலர்கள் இக்கட்டான சூழலில் பந்து வீசும்போது, 'எந்த பிரஷரையும் எடுத்துக்க வேண்டாம்.

நீங்க பந்து வீசினால் போதும், என்ஜாய் பண்ணி விளையாடுங்க. நாங்க உங்களுக்காக ஸ்கோர் எடுப்போம்,' என்று சொல்லிக் கொண்டே இருப்பார்." என இஷான் கிஷன் தெரிவித்தார்.
மும்பையின் சாதனை:
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது குவாலிபையர் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஐபிஎல் வரலாற்றில், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 8 வெவ்வேறு சீசன்களில் 100+ சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளது.
அதிக சீசன்களில் 100+ சிக்ஸர்களை விளாசிய ஒரே அணி, மும்பை இந்தியன்ஸ் தான். மேலும், ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியே முதலிடத்தில் உள்ளது. இதுவரை 246 போட்டிகளில் விளையாடி, 1541 சிக்ஸர்களை அடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 241 போட்டிகளில் விளையாடி 1478 சிக்ஸர்களை அடித்துள்ளது.

வரலாற்றில் இன்று:
இதே நாளில் கடந்த 2013 ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 148 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஐபிஎல் வரலாற்றில், முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவுக்கு அப்போது வயது 26 மட்டுமே. ஐபிஎல் கோப்பையை இளம் வயதிலேயே வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்தார், ஹிட் மேன் ரோஹித். இன்றைய இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த வரலாற்று வெற்றியைப் பெற்ற நாளில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்பதை இன்றிரவு காண்போம்.