'சம்பவக்காரன்' ஹர்திக்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐந்தாவது வெற்றியாகும். அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வீரராக இருக்கிறார். இந்தத் திறமையால் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ஹர்திக். 21 போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ள இவர்,15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் வின்னிங் ரேட் 75.00 சதவிகிதமாக உள்ளது. இவருக்கு அடுத்து சி.எஸ்.கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, 58.99 சதவிகிதமாக வின்னிங் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ரெட்டைக் கதிர்கள்:
குஜராத் டைட்டன்ஸ் அணியின் நேற்றைய வெற்றிக்கு, அணியின் பந்துவீச்சாளர்கள் ரஷித் கானும் நூர் அஹமதும் மிக முக்கியக் காரணம். ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களான இவர்கள் இருவரும் 5 விக்கெட்டுகளை எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் லைன் அப்பை ஒட்டுமொத்தமாக சிதைத்தனர். நூர் அஹமத், 4 ஓவர்கள் வீசியதன் மூலம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் விளையாடும் முதல் ஐபிஎல் தொடர் இதுவே ஆகும். இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி, ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் ரஷித் கான், 2 விக்கெட்களை வீழ்த்தியதுடன் ஊதா தொப்பியையும் கைப்பற்றியுள்ளார்.

கர்ஜிக்கும் குஜராத் டைட்டன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் குஜராத் டைட்டன்ஸ் அணி 207 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். மேலும், ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக 200+ ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இதற்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும். இந்த ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, அதிக ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்துள்ளது.

சாதிக்கும் பியூஸ் சாவ்லா:
மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, ஐபிஎல் தொடரில் இதுவரை 168 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம், இவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவ்வரிசையில், யுஸ்வேந்திர சாஹல் 178 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அமித் மிஸ்ரா 170 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு தொடர்ந்து விமர்சிக்கப்படும் நிலையில், இவரின் செயல்பாடு அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக மாறியுள்ளார், பியூஷ் சாவ்லா.
டிம் டேவிட்-ன் 100:
மும்பை இந்தியன்ஸ் வீரரான டிம் டேவிட், நேற்றைய ஆட்டத்தின் மூலம் டி20 போட்டிகளில் தனது 100வது கேட்ச்சைப் பிடித்தார். பியூஸ் சாவ்லா வீசிய 13வது ஓவரில், விஜய் ஷங்கர் அடித்த கேட்ச்சைப் பிடித்ததன் மூலம் இப்பெருமையை பெற்றுள்ளார்.

மேலும் இப்போட்டியின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்களான முகமது ஷமியின் 100வது ஐபிஎல் போட்டியும், வ்ரித்திமான் சஹாவின் 150வது ஐபிஎல் போட்டியும் இதுவே ஆகும்.