பட்டையைக் கிளப்பும் புவி:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொண்டது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதல் இன்னிங்ஸில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீசியது. இதில் முதல் ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார், மூன்றாவது பந்தில் ஃபில் சால்ட்-டை டக் அவுட் ஆக்கினார்.
இதன் மூலம், ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களை அதிக முறை டக் அவுட் செய்த பௌலர்களில் இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை 25 பேட்ஸ்மேன்களை டக் அவுட் செய்துள்ளார். முதலிடத்தில் உள்ள லசித் மலிங்கா, 36 முறை டக் அவுட் செய்துள்ளார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டுகளை (23) வீழ்த்தியவர், புவனேஷ்வர் குமார் ஆவார்.

இது கோலியின் காலம்:
2023 ஐபிஎல் சீசன் தொடங்கி கோலாகலமாக நடை பெற்று வருகின்றது. இந்த சீசனில் ஆர்.சி.பி அணியின் விராட் கோலி, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் தூள்கிளப்பி வருகின்றார். இந்நிலையில் ஆர்மேக்ஸ் மீடியா என்ற தனியார் நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் என்ற பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இடம் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார்.
அந்த நாள் ஞாபகம்:
இன்றைய தினம், ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற நாளாகும். 2010 ஆம் ஆண்டு, இதே ஏப்ரல் 25ஆம் தேதியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சி.எஸ்.கே அணி, கோப்பையைத் தட்டித் தூக்கியது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.
இந்த ஆட்டத்தில் அசத்தலாக விளையாடிய சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இந்த 2010 ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி, தொடர் நாயகன் விருதை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.