விழுந்தான் இடியாய், எழுந்தான் மலையாய்!
கடந்த போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் பெர்பார்மன்ஸ் சுமாராகவே இருந்தது. சில போட்டிகளில் டக்-அவுட் ஆகியதால், பல விமர்சனங்களுக்கும் உள்ளானார். ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது, மும்பை அணி. இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, 37 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம், டி20 போட்டிகளில் 11,000 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையை படைக்கும் 7வது வீரர், ரோஹித் சர்மா ஆவார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி, இந்த சாதனையைப் படைத்த முதல் வீரரும் இவர் தான்.

தோற்றாலும் சாதித்த விராட் கோலி:
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் வழக்கம் போல, ஃபாப் டூப்ளேசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்த போட்டியின் மூலமாக ஐபிஎல் வரலாற்றில், ஒரே சீசனில் அதிக முறை (8) 50+ ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து, இந்த 2023 தொடரில் பார்ட்னர்ஷிப்பின் மூலமாக 939 ரன்களை எடுத்துள்ளனர். கடந்த 2016 ஐபிஎல் சீசனில், டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி இருவரும் பார்ட்னர்ஷிப்பின் மூலமாக 939 ரன்களை எடுத்திருந்தனர். ஐபிஎல் தொடரில், ஒரே சீசனில் ஜோடியாக அதிக ரன்கள் (939) எடுத்த வீரர்கள், இவர்கள் தான்.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி, 61 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது இவரின் 7வது ஐபிஎல் சதமாகும். கிறிஸ் கெயிலை முறியடித்து, ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் விராட் கோலி.
தங்கதுரை, எல்லாம் ஒரு அளவுக்கு தான்!
இந்த 2023 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது, ஆர்.சி.பி அணி. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி, 197 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம், 2023 ஐபிஎல் தொடரிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியேறியுள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு லக்னோ அணியின் வீரரான நவீன்-உல்-ஹக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பகிர்ந்தார். அதில், கானா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் 'அக்ரோபெட்டோ' சிரிக்கும் வீடியோவை வைத்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர், நவீனை விமர்சித்து வருகின்றனர். சில போட்டிகளுக்கு முன்னர், விராட் கோலி அவுட் ஆகிய போது, மாம்பழங்களை ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.
கில்லை பாராட்டிய சச்சின்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதமடித்தார். இதில் 52 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நடப்பு தொடரில் இவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 680 ரன்களை அடித்துள்ளார்.
அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுப்மன் கில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது." என தெரிவித்தார்.
ரஷித் கானுக்கு பரிசளித்த விராட்!
நேற்றைய போட்டிக்கு பின்னர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளரான ரஷித் கானுக்கு, விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை பரிசாக வழங்கினார். இருவரும் கட்டிப்பிடித்து அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.

விராட் கோலி பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷித் கான், "ஒரே போட்டியில் இரண்டு அற்புதமான சதங்களைக் காணும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. விராட் பாய் மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்." என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் .