டெல்லியும் வானவில் நிற ஜெர்ஸியும்:
இன்று நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வானவில் நிற ஜெர்ஸியுடன் விளையாடவுள்ளது. இந்த போட்டியே, நடப்பு தொடரில் இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டி. கடந்த 2020 சீசனில் இதே வானவில் ஜெர்ஸியை அணிந்து விளையாடிய போது, ஆர்.சி.பி அணியை தோற்கடித்தது.

அதே போல், 2021 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியையும், 2022 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் தோற்கடித்தது. இந்த 2023 சீசனில் CSK அணிக்கு எதிராக வானவில் நிற ஜெர்ஸியுடன் களமிறங்குகிறது, டெல்லி அணி. இந்த ராசி இந்த போட்டியிலும் டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடித் தருமா? என்பதைப் பார்ப்போம். இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
CSK-வை முறியடித்த RCB:
இந்த 2023 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. தற்போது, பிளே ஆஃப் சுற்றும் நெருங்கிவிட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராமில் உலகளவில் அதிக இன்ட்ராக்சன்ஸ் கொண்ட விளையாட்டு அணிகளின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்தை (285 மில்லியன்) பிடித்து அசத்தியுள்ளது.

இரண்டாவது இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (276 மில்லியன்) பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில், ரியல் மாட்ரிட் கால்பந்து அணி (259 மில்லியன்) பிடித்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவதாக (196 மில்லியன்) இடம்பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்தில், FC பார்சிலோனா கால்பந்து அணி (162 மில்லியன்) உள்ளது. டாப் 5 வரிசையில், மூன்று இடங்களை ஐபிஎல் அணிகளே ஆக்கிரமித்துள்ளன.
ஜெய்ஸ்வால் எனும் துருவ நட்சத்திரம்!
இந்த ஐபிஎல் சீசனில் பல இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் குறிப்பாக, தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் பல சாதனைகளைப் படைத்து வருகின்றார் ஜெய்ஸ்வால். நேற்றைய போட்டியிலும், அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 625 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்த 'Uncapped' வீரர் (சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்) என்ற சாதனையைப் படைத்துள்ளார், யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இவருக்கு முன்னதாக 2008 சீசனில் ஆஸ்திரேலிய வீரரான ஷான் மார்ஸ், 616 ரன்கள் அடித்து இதே சாதனையைப் படைத்திருந்தார். தற்போது, 15 ஆண்டுகளுக்கு பிறகு இச்சாதனையை இந்திய வீரரான ஜெஸ்வால் முறியடித்துள்ளார்.
பட்லரின் மோசமான சாதனை:
நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இதில் முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து 187 ரன்கள் எடுத்தது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கி விளையாடியது. ரபாடா வீசிய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில், தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக்-அவுட் ஆனார்.

இந்த தொடரில் மட்டும் 5வது முறையாக டக்-அவுட் ஆகியுள்ளார், பட்லர். இதன் மூலம், ஒரே ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் 85 இன்னிங்ஸ்களில், ஒரு முறை மட்டுமே டக் அவுட் ஆகியிருந்தார் ஜோஸ் பட்லர். ஆனால், இவரின் கடைசி 10 இன்னிங்ஸ்களில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
பஞ்சாப்பைத் தொடரும் சோகம்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது, பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த தோல்வியின் மூலம், தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது பஞ்சாப் அணி. இதுவரை நடைபெற்றுள்ள 16 ஐபிஎல் சீசன்களில், பஞ்சாப் அணி 2 முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில், முதல் முறையாக இறுதிப்போட்டியில் விளையாடியது. இதில் பஞ்சாப் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.