இங்கிலாந்து திரும்பும் ஸ்டோக்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், DC vs CSK இடையேயான கடைசி லீக் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார். மேலும், ஜூன் 16ஆம் தேதி ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளதால், அதற்கான பயிற்சியிலும் ஈடுபட உள்ளார். இதனால், சி.எஸ்.கே அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றாலும் இவரால் பங்கேற்க இயலாது. இந்த 2023 சீசனில், GT vs CSK இடையேயான முதல் லீக் போட்டியில் இவர் விளையாடினார். இந்தத் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். காயம் காரணமாக, பல போட்டிகளில் இவரால் பங்கேற்க முடியவில்லை. சி.எஸ்.கே அணி, பென் ஸ்டோக்ஸை ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் சியர் கேர்ள்!
பொதுவாகவே ஐ.பி.எல் போட்டிகளில் சியர் கேர்ல்ஸ் (Cheer girls) நடனமாடுவர். சிக்ஸர், பௌண்டரி மற்றும் விக்கெட் இழப்பு ஆகியவற்றின் போதும் ஒவ்வொரு அணியின் சார்பாகவும் இவர்கள் நடனமாடுவது வழக்கம். இந்நிலையில் நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நடனமாடும் பெண் ஒருவர், ஒரு கையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மற்றொரு கையை மட்டும் பயன்படுத்தி நடனமாடினார்.

காயத்துடன் நடனம் ஆடும் இந்த பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மோடி மைதானத்தில் சாதிக்கும் கில்:
நரேந்திர மோடி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடியது, குஜராத் டைட்டன்ஸ் அணி. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அதிரடியாக சதம் விளாசினார். இவரின் முதல் ஐபிஎல் சதம் இதுவாகும். இதே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக, தனது முதல் டி20 சதத்தை அடித்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போதும், இதே மைதானத்தில் 128 ரன்களுடன் சதமடித்து அசத்தினார். சுப்மன் கில், இந்த 2023 ஆண்டில் இதே மைதானத்தில் இந்த மூன்று சதங்களையும் அடித்துள்ளார். நேற்றைய போட்டியின் மூலம், குஜராத் அணிக்காக விளையாடி 1000 ரன்களைக் கடந்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சதமடித்த முதல் வீரரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளே-ஆஃப்ஸ் பரபரப்பு:
ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான இறுதி அத்தியாயத்தில், பல அணிகள் போட்டியிட்டு வருகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம், இந்த தொடரிலிருந்து இரண்டாவது அணியாக வெளியேறியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த தொடரில், முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. கடந்த 2022 சீசனிலும் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது குஜராத். ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற சிஎஸ்கே அணிக்கு 90 சதவிகிதமும் வாய்ப்புள்ளது. மும்பை அணிக்கு 80 சதவிகிதமும், லக்னோ அணிக்கு 61 சதவிகிதமும் வாய்ப்புள்ளது.
இன்ஸ்டாவில் கலக்கும் பதிரானா:
நடப்பு ஐபிஎல் தொடரின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளார் பதிரானா. இவரை தோனி உள்பட பல முன்னணி வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். தற்போது இவர், இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட இலங்கை வீரராக உருவெடுத்துள்ளார் பதிரானா.அந்த அளவிற்கு சி.எஸ்.கே ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார், இந்த 'குட்டி மலிங்கா'. இவரைப் பற்றி ஹர்ஷா போக்லே குறிப்பிடுகையில்,

"இலங்கை ரசிகர்களே! நீங்கள், பதிரானா என்ற ரத்தினத்தை பெறப் போகிறீர்கள். தோனி உங்களுக்காக அவரை தயார் செய்து கொண்டிருக்கிறார்!" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதுதான் நிதர்சனமும் கூட.