ரசிகர்களின் தாக்குதல்:
ஹைதராபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன் அணியும் விளையாடின. இதில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. இன்னிங்ஸின் 19வது ஓவரை லக்னோ அணியின் ஆவேஷ் கான் பந்து வீசினார். அப்துல் சமத் எதிர்கொண்ட ஓவரின் 3வது பந்து, ஃபுல் டாஸ்ஸாக வீசப்பட்டது. இந்த பந்திற்கு நோ-பால் ரிவ்யூ கேட்டது, சன்ரைசர்ஸ் அணி. இந்த ரிவ்யூ இடைவேளையின் போது, லக்னோ அணி வீரர்கள் அமரும் இடத்தை நோக்கி, ரசிகர்கள் சிலர் இரும்பு நட் மற்றும் போல்ட்களை வீசியுள்ளனர். இதனால், லக்னோ அணியின் வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்தனர். இந்த சம்பவம், ஆட்டத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ், "டக்-அவுட்டில் அல்ல, வீரர்களை நோக்கி வீசியுள்ளனர். லாங் ஆனில் ஃபீல்டிங் செய்த போது, ரசிகர்கள் ப்ரேரக் மான்கட்டின் தலையில் தாக்கியுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.

கிளாஸனுக்கு அபராதம்:
லக்னோ அணி வீரரான ஆவேஷ் கான், இன்னிங்ஸின் 19வது ஓவரை வீசினார். ஃபுல் டாஸ்ஸாக வீசப்பட்ட ஓவரின் மூன்றாவது பந்திற்கு, நோ-பால் ரிவ்யூ கேட்டது ஹைதராபாத் அணி. ஸ்டம்பிற்கு மேல் சென்ற பந்திற்கு, மூன்றாம் நடுவர் நோ-பால் வழங்கவில்லை. போட்டிக்கு பிறகு பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான ஹென்றிச் கிளாஸன், "ரசிகர்கள் செய்த செயல் ஏமாற்றத்தை அளித்தது. நடுவரின் முடிவும் அப்படித்தான். இது சிறந்த தீர்ப்பாக இல்லை." எனக் கூறியிருந்தார்.

நடுவரின் தீர்ப்பை விமர்சித்ததற்காக, போட்டிக் கட்டணத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதே போட்டியில் லக்னோ அணி வீரரான அமித் மிஸ்ரா, பந்தை சேதப்படுத்தியதற்காக ஐபிஎல் நிர்வாகம் அவரைக் கண்டித்துள்ளது.
இதே நாளில்!
கடந்த 2016 ஐபிஎல் சீசனில் இதே நாளில், குஜராத் லயன்ஸ் அணியும் ஆர்.சி.பி அணியும் மோதின. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி, 248 ரன்களை எடுத்து அசத்தியது. ஐ.பி.எல் தொடரில், ஒரு அணி எடுத்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் (248) இதுவாகும். இதில் டிவில்லியர்ஸ் 129* ரன்களும், விராட் கோலி 109 ரன்களும் அடித்து அசத்தினர். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை (229) அடித்த பார்ட்னர்ஷிப்பும் இது தான். இதனால், ஆர்.சி.பி அணிக்கு இன்றைய தினம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளது.

மீண்டும் மீண்டுமா?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது, லக்னோ அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீரை நோக்கி ரசிகர்கள் பலர் "கோலி..! கோலி..!" என கத்தியுள்ளனர். கிட்டத்தட்ட மைதானம் முழுக்க இந்த கோஷம் பல முறை எழுப்பப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த LSG அணியின் போட்டிகளின் போதும் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. இது போன்ற சில செயல்களால் கிரிக்கெட்டின் ஆரோக்கியம் கெடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முதலும் கடைசியும்:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகின்றது. இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற்றால், முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்த தொடரின் கடைசி லீக் போட்டி இதுவே ஆகும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியுற்றது.
இதனால் நடப்பு 2023 சீசனிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது, டெல்லி கேப்பிட்டல்ஸ். ஐபிஎல் வரலாற்றில், மூன்றாவது முறையாக (2014, 2018, 2023) தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது, டெல்லி அணி.