ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும் சி.எஸ்.கே-வின் ஆதிக்கம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி என்றாலே தனி ஆரவாரமும், அலப்பறையான கொண்டாட்டமும் ரசிகர்களிடையே இருந்து வருகின்றது. ஐபிஎல் 2023 தொடர் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அதிகம் பார்க்கப்பட்ட நான்கு போட்டிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டங்களாகும்.

அதிகபட்சமாக, GT vs CSK இடையேயான ஆட்டத்தை 5.6 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அடுத்து, CSK vs RCB போட்டியை 5.2 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும், CSK vs KKR இடையேயான போட்டியை 5.1 கோடி பார்வையாளர்களும், CSK vs LSG இடையேயான போட்டியை 5.0 கோடி பார்வையாளர்களும் பார்த்துள்ளனர். இவைகளுக்கு அடுத்து, RCB vs MI அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை 4.6 கோடி பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.
ஆர்.சி.பி vs மும்பை இந்தியன்ஸ்:
இன்று வான்கடே மைதானத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த 2012 ஆம் ஆண்டு இதே நாளில், வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது. RCB vs MI இடையே நடைபெற்ற கடைசி 5 ஐபிஎல் போட்டிகளில், 4 போட்டிகளில் ஆர்.சி.பி அணியே வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், MI vs RCB இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி 6 போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் பிளே-ஆஃப் செல்லும் முனைப்பில் உள்ளதால், இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
கம்பீரின் ஸ்வீட்டான சந்திப்பு:

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர், லக்னோ மைதானத்தில் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி வீரர்களைச் சந்தித்தார். கேப்டன் சோம்ஜீத் சிங் உள்ளிட்ட பல வீரர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியின்போது, வீல் சேர் கிரிக்கெட் வீரர்களை சந்தித்ததுடன் பயிற்சி குறித்த பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் கம்பீர். இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி, தற்போது வங்கதேச அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
மார்க் வுட்-க்கு பிரியாவிடை கொடுத்த லக்னோ:
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு திரும்பியுள்ளார். இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள காரணத்தினால், ஐ.பி.எல் தொடரிலிருந்து தற்போது விலகியுள்ளார். லக்னோ அணி தனது ட்விட்டர் பக்கத்தில், மார்க் வுட் பேசிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.

இதில் பேசிய அவர், "என் மகள் பிறந்துள்ள காரணத்தினால், என் வீட்டிற்குச் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் என்னை மீண்டும் பார்க்க முடியும் என நம்புகிறேன். நான் விளையாடிய 4 போட்டிகளில், சில விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. என்னால் மீண்டும் அணியில் விளையாட முடியும் என்று நம்புகிறேன். லக்னோ அணியை மிகவும் நேசிக்கிறேன். இந்த அணியில் சிறந்த ஒற்றுமை உள்ளது." என தெரிவித்தார். 4 போட்டிகளில் விளையாடிய இவர், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். லக்னோ அணி வீரர்கள், இவருக்கு தாங்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை பரிசாக வழங்கினர்.
தவானின் 50வது அரைசதம்:

நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான், வழக்கம் போல தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் 47 பந்துகளில் 57 ரன்கள் அடித்து, அரைசதத்துடன் ஆட்டமிழந்தார். இது, ஐபிஎல் தொடரில் இவர் அடித்த 50வது அரைசதமாகும். மேலும், ஐபிஎல் தொடரில் 50 அரைசதங்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னர், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி இச்சாதனையை படைத்துள்ளனர்.