கோலியின் அசாத்திய சாதனை:
டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடின. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆர்.சி.பி அணி பேட்டிங் செய்தது. இதில் விராட் கோலி 46 பந்துகளில் 55 ரன்கள் அடித்து அசத்தினார். இது ஐபிஎல் தொடரில் இவர் அடிக்கும் 50வது அரைசதமாகும். ஐபிஎல் போட்டிகளில், 50 முறை அரை சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 7,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும், டெல்லி அணிக்கு எதிராக 1,000 ரன்களைக் கடந்த முதல் வீரரும் இவரே ஆவார். ஒரே ஆட்டத்தின் மூலம் இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், விராட் கோலி.

ரோஹித் பற்றி சுனில் கவாஸ்கர்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். தீபக் சஹர் வீசிய மூன்றாவது ஒவரில், ஸ்கூப்-ஷாட் அடிக்க முயற்சி செய்து ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், "ரோஹித் கேமில் இருப்பது போல் தெரியவில்லை. நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் அவர் ஆடிய ஷாட், கேப்டனின் ஷாட் அல்ல. அணி சிக்கலில் உள்ளது என்பதை உணர்ந்த ஒரு கேப்டன், இன்னிங்ஸை சரிசெய்து கண்ணியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்காக நல்ல ஸ்கோரை எடுப்பார். ரோஹித் ஃபார்மில் இல்லை." என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்த ஆட்டத்தின் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக முறை (16) டக்-அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையையும் படைத்திருக்கிறார்.
தோனியின் படத்தை பகிர்ந்த ஜான் சீனா:
பிரபல மல்யுத்த வீரரான ஜான் சீனா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் தோனி DRS ரிவ்யூ கேட்ட போது, "You can't see me." என்ற புகழ்பெற்ற சைகையை செய்து காட்டினார். இதே போன்று ஒரு சிக்னேச்சர் ஸ்டைலை, ஜான் சீனாவும் மற்ற வீரர்களை வீழ்த்திய பின்னர் செய்து காண்பிப்பார். இவர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குருவுக்கு மரியாதை:
நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடின. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி நடைபெறுவதற்கு முன்பாக விராட் கோலி, தனது சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மாவின் காலைத் தொட்டு வணங்கினார். இவரின் இந்த செயலைக் கண்டு, இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன், ஒரு வீடியோவில் விராட் பற்றி பேசிய போது, "விராட் ஒருமுறை என்னிடம் வந்து, 'நான் இனி ஜூனியர்ஸ் டீமில் விளையாட மாட்டேன். என்னை சீனியர்ஸ் டீமில் சேருங்கள்!' என்றார். அப்படி ஆடும்போது ஒருமுறை, அவருடைய மார்பு பகுதியில் அடிபட்டுவிட்டது. அப்படியிருந்ததும் அவர் தனது தாயிடம் 'நான் பெரியவர்களுடன் மட்டுமே விளையாடுவேன்' என்று சொன்னார். அவர் ரொம்பவே ஸ்பெஷல். அவரது திறமை கடவுளால் பரிசளிக்கப்பட்டது." என விராட் பற்றி நெகிழ்ந்து பேசியிருந்தார்.

முகமது சிராஜ்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லி அணி பேட்டிங் செய்தது. இன்னிங்ஸின் 5வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். முதல் மூன்று பந்துகளை எதிர் கொண்ட ஃபில் சால்ட், இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடித்தார். நான்காவது பந்தை வைட் ஆக வீசினார், சிராஜ். இதனால் இருவரும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இது ஆட்டத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி அசத்தலான வெற்றியைப் பெற்றது. போட்டி முடிவடைந்த பின்னர், ஃபில் சால்ட் மற்றும் சிராஜ் இருவரும் கட்டிப்பிடித்து சமாதானம் அடைந்தனர். இப்போட்டியில் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அசத்திய ஃபில் சால்ட், ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.