Published:Updated:

CSKvMI: `தவறு மேல் தவறு செய்த மும்பை; எளிதில் வென்ற சென்னை!' எப்படியிருந்தது எல் க்ளாசிக்கோ?

CSKvMI

அடுத்தடுத்து ஹோம் கிரவுண்டில் ஆட உள்ள சிஎஸ்கேவிற்கு இந்த வெற்றி நல்ல தொடக்கத்தின் ஆரம்பப்பள்ளி.

Published:Updated:

CSKvMI: `தவறு மேல் தவறு செய்த மும்பை; எளிதில் வென்ற சென்னை!' எப்படியிருந்தது எல் க்ளாசிக்கோ?

அடுத்தடுத்து ஹோம் கிரவுண்டில் ஆட உள்ள சிஎஸ்கேவிற்கு இந்த வெற்றி நல்ல தொடக்கத்தின் ஆரம்பப்பள்ளி.

CSKvMI

எத்தனை தீக்குச்சிகள் ஒருங்கிணைந்து தீயின் நாக்கினை கொழுந்து விட்டு எரிய வைத்தாலும் சூரியனின் ஒளிப்பிரவாகம் அத்தனையையும் விழுங்கிவிடும்.

அத்தகைய கவனத்தை El Clasico யுத்தமென விவரிக்கப்படும் சிஎஸ்கே - மும்பை மோதல்களும் எப்போதும் பெறும். அப்படியொரு நேர்காணலில் சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்த மும்பை தோல்வி முகம் கண்டது.
CSKvMI
CSKvMI

இதே சீசனின் முந்தைய சந்திப்பில் ரஹானேயின் எதிர்பாராத எழுச்சி, ஜடேஜா மற்றும் சாண்ட்னரின் அற்புதமான ஸ்பெல்கள் சிஎஸ்கேவுக்கு வெற்றியைச் சுலபமாக்கின. ஆனால் அதன்பிறகு மும்பை பன்மடங்கு பரிமளித்திருக்கிறது. சிஎஸ்கேவின் பௌலிங்கும் முன்பைவிட மெருகேறியிருந்தது. வெல்லும் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறலாம் என்பதுவும் பற்ற வைக்கப்பட்ட ராக்கெட்டாக இருபக்கத்தினையும் உந்தும் விசையே. இதனால் இம்முறை மோதல் இன்னமும் மூர்க்கமானதாக இருக்குமென எதிர்பார்க்கப்பட சற்றே நமத்துப் போன பட்டாசாகவே மும்பையின் பேட்டிங் ஏமாற்றியது. அவர்களது மொத்த இன்னிங்ஸிலும் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டது என்பது ஒன்றே அக்கூற்றுக்கான விளக்கம்.

மழை குறுக்கிடலாமென்பதால் தோனி டாஸை வென்றதும் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். இருபக்கமுமே இப்போட்டியில் கூட டிவால்ட் ப்ரூவிஸுக்கும் சாண்ட்னருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. சாண்டனராவது தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆடினார், ஆனால் டிவால்டின் திறமை பெஞ்சிலேயே வீணடிக்கப்படுகிறது. திலக் வர்மா இல்லாத தருணத்திலும் எந்த இடத்தில் இறக்குவதென்ற குழப்பமோ என்னவோ இவரை விடுத்து ஸ்டப்ஸிடம் மும்பை இந்தியன்ஸ் நகர்ந்திருந்தனர்.

Rohit Sharma
Rohit Sharma

மும்பையின் ஓப்பனர் இடத்துக்கு வாஸ்து சரியில்லை போலும். அதிரடியாக ஆரம்பிக்க நினைத்து ரோஹித்தை பின்தள்ளி க்ரீனையும், இஷான் கிஷனையும் ஓப்பனிங்கில் இறக்கினர். ஆனால் முதல் மூன்று ஓவர்களுக்குள்ளே ஒன்டவுனில் இறங்கிய ரோஹித்தும் டக் அவுட்டாகிக் கிளம்பினார். முந்தைய சீசன்களில் பிரிக்கவே முடியாதது தீபக் சஹாரும் பவர்பிளே விக்கெட்களும். சிஎஸ்கேவை செங்கோல் ஏந்த வைக்க அதுவே வழிகோலிடும். ஆனால் இந்த சீசனில் விக்கெட் எடுக்காதது மட்டுமின்றி ரன்களைக் கசிய விட்டும் ஏமாற்றினார். இப்போட்டியிலோ ஒரே ஓவரில் ரோஹித் மற்றும் இஷான் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி தீபக் சஹார் அவரிடமிருந்து அணி எதிர்நோக்குவதை இருபங்காகச் செய்திருந்தார்.

தொடர்ந்து நான்காவது போட்டியாக ரோஹித் நான்கு ரன்களுக்கும் குறைவாக வெளியேறியிருந்தார். இடம் மாறி இறங்கியும் பேக் டு பேக் டக் அவுட்களையே அவரது பேட் பார்த்துள்ளது.

தோனி ஸ்டம்புக்கு அருகே வருவதைக் கண்டு அதற்கு எதிர் நடவடிக்கையாக நினைத்து ஸ்கூப் ஆட முயற்சித்து பேக்வர்ட் பாயிண்டிலிருந்த ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியிருந்தார்.
Rohit & Mumbai Indians
Rohit & Mumbai Indians

ஐபிஎல் இல் அதிகமான முறை டக் அவுட்டான வீரர் (16) என்ற மோசமான ரெக்கார்டையும் இதன் மூலம் ரோஹித் படைத்துள்ளார். க்ரீன் மற்றும் இஷான் இருவருமே மோசமான ஷாட்டில் வெளியேறியிருந்தனர். பவர்பிளே மொத்தத்தையும் தீபக் மற்றும் துஷார் ஆகிய இருவரை வைத்தே தோனி முடித்திருந்தார். 34/3 என மோசமாகத் தொடங்கியது மும்பை.

மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களைக் கொண்டு வலைவிரிப்பதும் ஸ்கோர் போர்டில் இலக்கங்களின் ஓட்டத்திற்கு வேகத்தடையிடுவதும் சேப்பாக்கத்தில் பலமுறை தோனிக்கு கைகொடுத்திருக்கிறது. இப்போட்டியிலும் அது சரியாகவே நகர்ந்தது. 7 - 15 ஓவர்களில் மொத்தமே 59 ரன்களை மட்டுமே சிஎஸ்கே விட்டுக் கொடுத்திருந்ததோடு தனது கொதிநிலையின் உச்சத்தில் பேராபத்தாக உருவெடுக்கும் சூர்யாவினையும் வெளியேற்றியிருந்தனர். எந்தவகை பௌலிங்கையும் அடித்து நொறுக்கும் சூர்யாவின் ஒரே பலவீனம் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர்கள். எனவே ஜடேஜாவினை வைத்து விடுத்த அம்பு சரியாக சூர்யாவினை சரித்தது. ஸ்கொயர் கட் ஆட முயற்சித்தவரினை சற்றே வேகமாக வந்த பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்து வெளியேற்றியது. கொஞ்சமாக நிதானம் காத்திருந்தால் ஜடேஜாவின் ஓவர்களுக்குப் பிறகு பெரிய தாக்கத்தை சூர்யாவால் ஏற்படுத்த முடிந்திருக்கும். அதைச் செய்யத்தவறி வடேராவுடனான 55 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்து வெளியேறி இருந்தார்.

Wadhera
Wadhera

இந்த மத்திய ஓவர்களில் உள்ளே சொருகப்பட்ட பதிரானாவின் இரு ஓவர்களுமே பேட்ஸ்மேனை நிரம்பவே சோதித்தன. 15 ஓவர்களை எட்டியிருந்த போது மும்பையின் நிலை ஒருபக்க ஆதரவோடு தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல் போலவே இருந்தது. தாங்கிப் பிடித்த ஒருபக்கமாக வடேரா மட்டுமே இருந்தார். 51 பந்துகளில் அவர் சேர்த்திருந்த 64 ரன்கள் அணியின் மொத்த ஸ்கோரில் கிட்டத்தட்ட சரிபாதி. இறுதிச் சுற்று ஓட்டத்தில் வேகமெடுக்க விரும்பி தீக்ஷனா மற்றும் ஜடேஜா வீசிய 16 மற்றும் 17-வது ஓவர்களை வடேரா குறிவைத்து ரன்கள் குவித்தார். 29 ரன்களை அந்த இரு ஓவர்கள் மட்டுமே துரிதக்கதியில் சேர்ந்தது. ஆனால் பதிரானாவின் ஸ்பெல்லில் மீதமிருந்த இரு ஓவர்கள்தான் மும்பைக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தது.

18-வது ஓவரில் லெக் சைடில் ரன்குவிக்க பேட்டை ஸ்விங் செய்த வடேராவின் ஸ்டம்பினை பதிரானாவின் யார்க்கர் விலையாய்க் கேட்டது. மலிங்காவை பௌலிங் ஆக்ஷனில் மட்டுமல்ல இப்படியான கில்லர் யார்க்கர்களிலும் பதிரானா நினைவூட்டுகிறார். முந்தைய போட்டியில் ரசாவுக்கு எதிராக கடைசிப் பந்தில் வீசத்தவறியிருந்த அந்த யார்க்கர் இப்போட்டியில் துல்லியத்தோடு வீசப்பட்டிருந்தது. மாய ஜால ஸ்பெல் அதோடு முடியவில்லை. இறுதி ஓவரிலும் தொடர்ந்தது. கடைசி ஓவரில் அர்ஷத் கான், ஸ்டப்ஸ் இருவரது விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமல்ல மொத்தமே 5 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். பதிரானா மீது தோனி நம்பிக்கட்டிய பந்தயம் பலமடங்கான பயனை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இறுதி ஐந்து ஓவர்களில் மற்ற மூவரின் ஓவர்களில் 39 ரன்கள் வந்திருக்க பதிரானாவின் 12 பந்துகளோ ஏழு ரன்களை மட்டுமே விட்டுத் தந்து ரன்ரேட்டினை மட்டுப்படுத்தியது. 15/3 என்கின்ற அவரது ஸ்பெல்தான் மும்பையை இறுதியில் முடக்கிப் போட்டது. 140 ரன்களை இலக்காக வைத்து முடித்தது மும்பை.

180 ரன்கள் என்பதே பொதுவாக சேப்பாக்கத்தில் முதல் பாதி இன்னிங்க்ஸின் சராசரி. அந்தளவு சேர்க்கும்படி களம் பேட்ஸ்மேன்களுக்குக் கைகொடுப்பதாக இல்லை அதேநேரம் ஆடவே முடியாதவாறும் இல்லை. சிஎஸ்கேவின் அற்புதமான பௌலிங்கும் அதனுடன் போட்டி போடுமளவு மும்பையின் மோசமான பேட்டிங்கும் என இவை இரண்டுமே ஒருங்கிணைந்தே 139 என தடுமாற்றமாக மும்பையை முடிக்க வைத்திருந்தது. கூடவே சில அற்புதமான கேட்சுகளும் ஃபீல்டிங்கும் பேட்ஸ்மேன்களுக்குக் கைகொடுத்தன.

மும்பை தவறி விழுந்த தருணங்களில் எல்லாம் சிஎஸ்கே இரண்டாவது பாதியில் எழுந்து நின்றது.
Conway
Conway

மும்பையைப் போல் பவர்பிளேவில் தடுமாறவில்லை. விக்கெட்டை போட்டி போட்டு பரிசளிக்கவில்லை. மாறாக தொடக்கத்திலேயே ஓப்பனர்கள் ஆளுமை செலுத்தினர். குறைந்த இலக்குதானே என மெதுவாய்த் தொடங்காமல் பவர்பிளேவிலேயை போட்டியை பொட்டலம் கட்டி தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் அவசரம் ருத்ராஜ் - கான்வேயிடம் நிரம்பவே இருந்தது. க்ரீன் வீசிய முதல் ஓவரிலேயே பத்து ரன்களோடு தொடங்கியவர்கள் தொடர்ந்து தாக்குதலை நிறுத்தவே இல்லை.

குறிப்பாக கெய்க்வாட்டின் அதிரடி தொடர்ந்தது. நான்கு ஓவர்களில் இவர்கள் சேர்த்த 46 ரன்கள்தான் சிஎஸ்கே தேரின் வடம் பிடித்து இறுதிவரை தேக்கமின்றி நகர்வதற்கான உந்துதலைத் தந்தது. Emerging Player என விளையாட்டாக மும்பை ட்விட்டரில் கேலிசெய்திருந்த ப்யூஸ் சாவ்லாதான் இந்த சீசனில் அவர்களது உண்மையான இம்பேக்ட் பிளேயர். இப்போட்டியிலும் அவரது பந்துதான் முதலில் விக்கெட் வாடை பார்த்தது. கெய்க்வாட்டினை 30 ரன்களோடு வெளியேற்றியதோடு ரஹானேவினையும் சாவ்லாவின் கூக்ளி அனுப்பியது.

Ruturaj
Ruturaj

பவர்பிளேவிலேயே 55 ரன்களை எட்டிவிட்ட சிஎஸ்கேவிற்கு அதன்பிறகு எல்லாமே இலகுவானது. ஒருமுனையை கான்வே காவல் காத்து 44 ரன்களை அடித்ததனால் மறுமுனையில் ராயுடு, துபே என மற்றவர்கள் இலக்கின் அருகே அணியை சுலபமாக எடுத்துச் சென்று விட்டனர். வின்னிங் ஷாட்டினை தோனி அடித்தால்தானே வெற்றிகூட முழுவதுமாக ரசிகர்களுக்கு இனிக்கும்? அந்த வழமை மாறாமல் அர்ஷித் கானின் பந்தில் சிங்கிள் தட்டி, 14 பந்துகள் இருந்த நிலையிலேயே அணியை வெற்றிக் கோட்டைத் தொட வைத்தார் தோனி. அணியும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பினை நெருங்குவதற்கு தன்னை சற்றே தகுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

Dhoni & Rohit
Dhoni & Rohit

மும்பையின் பௌலிங்கில் ப்யூஸ் சாவ்லா மற்றும் ஆர்ச்சரின் ஸ்பெல்கள் சிறப்பாகவே இருந்தன. இருப்பினும் டிஃபெண்ட் செய்யுமளவிலான இலக்கை அவர்களது பேட்ஸ்மேன்களும் நிர்ணயிக்கவில்லை அவர்கள் செய்த தவறினை சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் நிகழ விடவில்லை.உண்மையில் வெற்றி யாருக்கு என்பதனை முதல் பாதியில் மும்பையின் மோசமான பவர்பிளே ஓவர்களே முடிவு செய்து விட்டன.

2014-க்குப் பிறகு மும்பையை ஒரே சீசனில் இரு முறை தோற்கடித்திருப்பது இதுவே முதல் முறை. அதேபோல் சேப்பாக்கத்தில் தங்களுக்கு எதிராக அதிக வின்னிங் ரெக்கார்டை வைத்திருந்த மும்பையை இம்முறை வீழ்த்தியிருப்பதும் சிஎஸ்கேவிற்கு மகிழ்ச்சியான விஷயம்தான்.
Dhoni
Dhoni

மழையும் குறுக்கிட்டு இரு புள்ளிகளை பங்கிடும் நிலையை உருவாக்கவில்லை என்பதும் ஆறுதல் தருவதே. இருப்பினும் வழக்கமான ஆக்ஷன் காட்சிகளையும், விறுவிறுப்பான திருப்பங்களையும், இறுதி ஓவர் களேபரங்களையும் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சற்றே இது ஏமாற்றமானதாகவே இருந்திருக்கும். ஆனால் சிஎஸ்கேவைப் பொறுத்தவரை இரு போட்டிகளில் தோல்வி ஒரு போட்டியில் புள்ளிகள் பங்கீடு என சற்றே இறங்குமுகம் கண்ட சிஎஸ்கேவிற்கு இந்த வெற்றி மிக அவசியமான ஒன்றே.

அடுத்தடுத்து ஹோம் கிரவுண்டில் ஆட உள்ள சிஎஸ்கேவிற்கு இந்த வெற்றி நல்ல தொடக்கத்தின் ஆரம்பப்புள்ளி.