சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸூம் டெல்லி கேப்பிட்டல்ஸூம் மோதும் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக டெல்லி அணியின் துணை பயிற்சியாளரும் சென்னை அணியின் முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் சென்னை அணி குறித்தும் தோனி குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

தோனியின் கேப்டன்ஸி மற்றும் அவரின் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்வி ஒன்றிற்கு வாட்சன், 'தோனி உள்ளுணர்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பவர். ஒரு வீரராக ஒரு கேப்டனாக நீண்ட நெடிய அனுபவத்தை கொண்டிருக்கிறார். அந்த அனுபவத்தின் வழி குறிப்பிட்ட அந்தத் தருணத்தில் என்ன முடிவை எடுத்தால் சரியாக இருக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். மேலும், பௌலர்களின் மீது அவர் எப்போதுமே பெரிய நம்பிக்கை வைத்திருப்பார். ஒரு கேப்டனாக இவைதான் தோனியின் மிகப்பெரிய பலம்.' என்றார்.
சென்னை அணி சீனியர் வீரர்களை என்ன மாதிரி கையாள்கிறது? என்கிற கேள்விக்கு,

'சென்னை அணி சீனியர் வீரர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. எல்லா சமயங்களிலும் அவர்களுக்கு உறுதுணையாக நின்று நல்வாய்ப்புகளை வழங்குகிறது. அவர்களை தன்னம்பிக்கையுடையவர்களாக உணரச் செய்யும் சூழல் இங்கிருக்கிறது. வெறுமனே வார்த்தைகளில் மட்டுமில்லை, செயல்களிலுமே இதை உணர முடியும்.
ஒரு சீசனில் 6-7 போட்டிகளாக நான் பெர்ஃபார்ம் செய்யவே இல்லை. ஆனாலும், எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்கள். நான் எப்படியும் பெர்ஃபார்ம் செய்துவிடுவேன் என நம்பினார்கள். நானும் செய்தேன். சீனியர் வீரர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைதான் வீரர்களை பெர்ஃபார்ம் செய்ய வைக்கிறது.' என்றார் வாட்சன்.

சிஎஸ்கே ரசிகர்களின் பிடித்தமான வீரர்களின் பட்டியலில் ஷேன் வாட்சனுக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.