சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதும் போட்டி வருகிற 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியிருக்கிறது. வழக்கத்தைவிட கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பயங்கர கெடுபிடிகளுடன் டிக்கெட் விற்பனை நடைபெற்றிருந்தது.

இதற்கு முன்பு இதே சீசனில் 5 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த 5 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை விடவும் இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கொஞ்சம் வித்தியாசமாக நடந்திருந்தது. கடந்த முறை டிக்கெட் விற்பனையின்போது பெண்களுக்கென தனி வரிசை முறைப்படி அமைக்கப்படவில்லை. ஆண்களுக்கு டிக்கெட் வழங்கும் வரிசையிலேயே இன்னொரு புறத்தில் பெண்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. வரிசையே இல்லாமல் ஒரு மாதிரி கும்பலாக நிற்க வைக்கப்பட்டு வழங்கியதால் பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இது சார்ந்து விகடன் தளத்திலுமே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், இன்று வாலாஜா சாலையில் உள்ள பட்டாபிராமன் கேட்டின் இடது புறத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாக தனி கவுன்ட்டர் அமைக்கப்பட்டிருந்தது. வரிசையும் முறைப்படுத்தப்பட்டிருந்தது.
நெரிசலின்றி ஒவ்வொருவராக வரிசையில் சென்று அந்த கவுன்ட்டரில் வழங்கப்பட்ட 2000 ரூபாய் டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கும் கடந்த விற்பனைகளில் தனி வரிசை இல்லவே இல்லை. இந்த முறை அவர்களுக்கு தனியாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் வைத்தே டிக்கெட் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
சென்னையும் மும்பையும் மோதிய கடந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இதனால், கடந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் கூடிவிட்டது. போலீசாரே கூட்டத்தை கட்டுப்படுத்த பெரிதும் சிரமப்பட்டனர். தடியடியெல்லாம் நடத்தப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயக்கமும் அடைந்திருந்தனர். மைதானத்தை சுற்றிய அந்தப் பகுதியே பதற்றத்துடன் காணப்பட்டது.
இதனாலயே இன்றைய போட்டிக்கான டிக்கெட் விற்பனை முன் திட்டமிடலும் பயங்கர கெடுபிடியாக நடந்திருந்தது.
டிக்கெட் விற்பனை நடைபெற்ற விக்டோரியா ஹாஸ்டல் ரோடு மற்றும் வாலாஜா ரோடு இரண்டிலுமே பல செக் பாயின்ட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. கம்புகள் கட்டப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவுன்ட்டர்களில் கம்பி வலையும் அடிக்கப்பட்டிருந்தது. கவுன்ட்டர் சுற்றி சில மீட்டர்கள் பேரிகார்டால் தடுப்புகளை ஏற்படுத்தி வெளியே இருந்து யாரும் வரிசையில் இருப்பவர்களைத் தொடர்புகொள்ள முடியாதபடிக்கும் செய்யப்பட்டிருந்தது. வரிசையில் ஏற்கெனவே இரவு மற்றும் அதிகாலை முதல் நின்ற ரசிகர்களை தவிர காலையில் வந்த வேறெந்த ரசிகர்களும் நிற்க அனுமதிக்கப்படவில்லை.

அந்த வழியாக கடந்து சென்ற ஒவ்வொருவரையுமே தனித்தனியாக 'எங்கு செல்கிறீர்கள்?' என்று விசாரித்தே அனுப்பி வைத்தனர். சேப்பாக்கம் இரயில் நிலையத்தின் வாசலிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 7 மணிக்கு மேல் அங்கிருந்து வெளியே வரும் ஆட்களை டிக்கெட் கவுன்ட்டர் பக்கம் நெருங்கவிடாமல் அப்படியே வழி மாற்றிவிடுவதே அவர்களின் வேலையாக இருந்தது. டிக்கெட் வாங்கிவிட்டு வெளியே வந்தவர்களும் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக்கும் நேரடியாக களத்திற்கே வந்து மைதானத்தை ரோந்து வந்துகொண்டே வந்தார். டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்பே மைதானத்திற்கு வந்தவர், ஒவ்வொரு கவுன்ட்டரிலும் எல்லாம் முறையாக நடக்கிறதா என்பதைத் தொடர்ச்சியாக கண்காணிப்பு செய்து கொண்டே இருந்தார்.

பாதுகாப்பிற்காக நின்ற போலீசார் சிலர் நகர நேரமின்றி பணிக்கு இடையேயே அந்த வரிசைகளை ஒழுங்குப்படுத்திக்கொண்டே உணவருந்தியதையும் பார்க்க முடிந்தது. கடந்த முறையை விட நெரிசலின்றி ரசிகர்கள் வேகமாக பாதுகாப்பாக டிக்கெட்டுகளை வாங்கி சென்றிருந்தனர்.
'இப்படியான முறைப்படுத்தப்பட்ட நடைமுறையை கடந்த போட்டிகளின் போதும் பின்பற்றியிருக்கலாமே..' ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.