Published:Updated:

CSK: ரஹானே 2.0, துபேவின் ஸ்பெஷாலிட்டி, கான்வேயின் ஆர்வம் - பேட்டர்கள் பற்றி ஹஸ்ஸி சொல்வது என்ன?

Mike Hussey, M.S.Dhoni

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை அணியின் முக்கியமான பேட்டர்கள் அத்தனை பேர் பற்றியும் மைக் ஹஸ்ஸி பேசியவை இங்கே...

Published:Updated:

CSK: ரஹானே 2.0, துபேவின் ஸ்பெஷாலிட்டி, கான்வேயின் ஆர்வம் - பேட்டர்கள் பற்றி ஹஸ்ஸி சொல்வது என்ன?

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை அணியின் முக்கியமான பேட்டர்கள் அத்தனை பேர் பற்றியும் மைக் ஹஸ்ஸி பேசியவை இங்கே...

Mike Hussey, M.S.Dhoni

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் டெல்லியும் மோதும் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இரு அணிகளின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்திருந்தது.

வழக்கமாக போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு பந்து வீச்சு ஆலோசகர் எரிக் சிமோன்ஸை அனுப்பும் சென்னை அணி, இந்த முறை பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியை அனுப்பியிருந்தது.
Mike Hussey
Mike Hussey
Sathish Kumar

மைக் ஹஸ்ஸி கிரிக்கெட் ஆடிய காலத்தில் அவரை 'மிஸ்டர் கிரிக்கெட்' என்று செல்லப்பெயரிட்டு அழைப்பார்கள். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று இப்போது பயிற்சியாளராகிவிட்டார். ஆனால், இப்போதும் கூட அவரை 'மிஸ்டர் கிரிக்கெட்' என அழைக்கலாம் போல. பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்படுகிற கேள்விகள் அத்தனையையும் முழுமையாக உள்வாங்கி ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் பதிலளிக்க முடியுமோ அப்படி அளித்தார். சென்னை அணியின் முக்கியமான பேட்டர்கள் அத்தனை பேர் பற்றியும் ஹஸ்ஸி பேசியவை இங்கே...

டெல்லிக்கு எதிரான போட்டியைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு, "டெல்லி அணி புள்ளிப்படியில் கீழே இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஒரு 2 வெற்றிகளைப் பெற்றால் அவர்கள் மேலே ஏறிவிடும் சூழல்தான் இருக்கிறது. அந்தளவுக்கு போட்டி நெருக்கமாக இருக்கிறது. டெல்லியும் கடைசியாக ஆடியிருக்கும் 5 போட்டிகளில் நான்கில் வென்றிருக்கிறார்கள். அதனால் எப்போதை போலவும் எங்களின் சிறப்பான ஆட்டத்தையே டெல்லிக்கு எதிராகவுகவும் ஆட முற்படுவோம்!" என்றார்.

Shivam Dube
Shivam Dube

அணியில் சிவம் துபேவின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டதற்கு, "சிவம் துபேவின் பவுண்டரியை க்ளியர் செய்யும் திறன் அபாரமானது. அணியில் அவரின் ரோல் என்னவென்பதில் கடந்த சீசனில் அத்தனை தெளிவில்லை. ஆனால், இந்த சீசனில் தோனியும் ஃப்ளெம்மிங்கும் அவருக்கென பிரத்யேகமான ஒரு ரோலைக் கொடுத்திருக்கிறார்கள்.

சூழலைப் பொறுத்து எந்த ஒரு ஆர்டரிலும் அவர் இறங்க வேண்டும் என்பதே அணியின் திட்டம். அவருமே அதைச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த போட்டியில் கேட்ச் பிடிக்க முயல்கையில் விரலில் காயம் ஏற்பட்ட போதும் பேட்டிங் செய்ய உறுதியாக வந்திருந்தார்" என்றார்.

அயல்நாடுகளிலேயே அதிக கிரிக்கெட் ஆடியிருக்கும் டெவான் கான்வே சேப்பாக்கம் மைதானத்தில் ஆடத் தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டார் என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கான பதிலில் கான்வேக்கு ஒரு பாராட்டு பத்திரமே வாசித்திருந்தார் மைக் ஹஸ்ஸி.

அவர் பேசியதாவது, "டெவான் கான்வே பெரும் ஆற்றலோடு இங்கே வந்திருக்கிறார். இங்கே இந்தியாவில், குறிப்பாக சேப்பாக்கத்தில் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பேரார்வமும் ஊக்கமும் அவரிடம் இருக்கிறது. ருத்துராஜூடன் இணைந்து சீராக அவர் எடுக்கும் ரன்கள் அணிக்குப் பெரிய உதவியாக இருக்கிறது" என்றார்.

Devon Conway
Devon Conway

ப்ளேஆப்ஸ் பற்றி ட்ரெஸ்ஸிங் ரூமில் ஏதேனும் பேசப்படுகிறதா என கேட்கப்பட்டதற்கு, "புள்ளிப்பட்டியலில் கீழே இருக்கும் டெல்லியால் கூட ப்ளேஆஃப்ஸ்க்குத் தகுதிபெற முடியும் என்கிற சூழல் நிலவுகிறது. இப்படி ஒரு நெருக்கமான புள்ளிப்பட்டியலை கொண்ட தொடரை நான் பார்த்ததில்லை. ஆனால், நாங்கள் இதைப்பற்றியெல்லாம் பேசிக்கொள்வதே இல்லை. டெல்லிக்கு எதிரான போட்டியின் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் எங்களின் இலக்காக இருக்கிறது" என்றார்.

ருத்துராஜ் இந்த சீசனில் ஒன்றிரண்டு போட்டிகளைத் தவிர மற்றவற்றில் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லையே எனும் விமர்சன நெடி வீசிய கேள்விக்கு, ருத்துராஜூக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசிய ஹஸ்ஸி,

"தான் என்ன செய்ய வேண்டும். எப்படி ஆட வேண்டும் என்கிற தெளிவு ருத்துராஜூக்கு அதிகமாகவே இருக்கிறது. அவர் அவுட் ஆகும் விதத்தில் எந்த ஒற்றுமையையும் பார்க்கவில்லை. சிறப்பாகவே ஆடிவருகிறார். விரைவிலேயே பெரிய இன்னிங்ஸ்களை ஆடுவார்" என்றார்.
Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad

நீண்ட நாள்கள் ஆடாமல் இருக்கும் ஸ்டோக்ஸ் மற்றும் சாண்ட்னர் பற்றிய அப்டேட்களையும் கொடுத்தார். "ஸ்டோக்ஸூம் சாண்ட்னரும் முழு உடற்தகுதியோடு ஆடுவதற்குத் தயாராகத்தான் இருக்கின்றனர். பயிற்சியிலும் நன்றாக ஆடுகிறார்கள். அணி சேர்க்கைதான் இப்போது பிரச்சனையாக இருக்கிறது. ஸ்பின்னுக்குச் சாதகமான பிட்ச்களில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸை ஆட வைக்க முடியவில்லை. சாண்ட்னரின் ரோலை ஜடேஜா அப்படியே செய்வதால் அவரையும் அணிக்குள் கொண்டு வருவது கடினமாக இருக்கிறது" என்றார்.

இறுதியாக ரஹானே பற்றிய ஒரு கேள்விக்கு, "ரஹானேவின் பேட்டிங் திறனுக்கு A+ க்ரேட் கொடுக்கலாம். ரஹானே முன்னதாக ஆடியிருக்கும் பல அணிகளிலும் ஆங்கர் ரோலில்தான் ஆடியிருக்கிறார்.

ரஹானே மீதான `ஆங்கர்' இன்னிங்ஸ் ஆடுபவர் என்கிற முத்திரையை நாங்கள் விலக்க விரும்பினோம். களத்திற்குள் சென்று விரும்பியபடி அடித்து ஆடுவதற்கான சுதந்திரம் அவருக்குக் கொடுக்கப்பட்டது.
Ajinkya Rahane
Ajinkya Rahane

இதனால் ரஹானேவால் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை அனுபவித்து மகிழ்ச்சியாக ஆட முடிகிறது. கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்கிற விருப்பம் அவருக்கு இருக்கிறது. ஆனால், அவர் ஏற்கனவே ஒரு மேட்ச் வின்னர்தான்!' என்றார்.

சென்னை அணியின் பேட்டிங் ஆர்டரை பற்றிய விரிவுரை போல அமைந்த சந்திப்பை முடித்துவிட்டு பயிற்சியில் வீரர்களுக்கு பந்தை த்ரோ செய்ய கூலாக சென்றார் மிஸ்டர் கிரிக்கெட்!