`டிக்கெட் எதுவும் கிடைக்குமா!?' இந்த சென்னை மாநகர வாசிகள் கடந்த இரண்டு நாள்களில் இந்த கேள்வியை எதிர்கொள்ளாமல் இருந்திருக்கவே முடியாது. காரணம், சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணியை சென்னை அணி இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்களுக்குத்தான் அத்தனை டிமாண்ட். பல ரசிகர்களும் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் இருக்கின்றனர்.

ரசிகர்களைக் கடந்து சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்களே ஐ.பி.எல் டிக்கெட் வேண்டி குமுறியிருக்கின்றனர். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'எங்களுக்கே டிக்கெட் இல்ல. ஜெய்ஷாவிடம் கேளுங்கள்' என எதிர்க்கட்சியினரை ஜாலியாக கலாய்த்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் இதே டிக்கெட் சார்ந்த கேள்வியாகத்தான் இருக்கிறது. யாருக்குமே டிக்கெட் கிடைக்கவில்லையெனில், சேப்பாக்கம் மைதானத்திலுள்ள அந்த 33,500 இருக்கைகளுக்கான டிக்கெட்களும் எங்கேதான் செல்கின்றன?

சேப்பாக்கம் மைதானத்தில் இந்த முறை 7 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஒரு போட்டி நடந்து முடிந்துவிட்டது. இன்று ஒரு போட்டி நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கும் இரண்டு மூன்று நாள்களுக்கு முன்புதான் டிக்கெட்டே ஓப்பன் செய்கிறார்கள். கவுன்ட்டர் மற்றும் ஆன்லைன் என இரண்டிலுமே ஒரே நேரத்தில்தான் டிக்கெட்டை ஓப்பன் செய்கிறார்கள். ஆன்லைனிலுமே ஒரு சில கேலரிகளை மட்டுமே ஓப்பன் செய்கிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அந்த டிக்கெட்களுமே விற்பனையாகிவிடுகின்றன. கவுண்டரிலுமே வெகு குறைவான எண்ணிக்கையில்தான் டிக்கெட் கொடுக்கிறார்கள். அதிலுமே ப்ளாக்கில் விற்பதற்காக பல புரோக்கர்களும் களத்தில் குதித்துவிடுவதாகக் கூறப்படுகிறது.
சேப்பாக்கம் டிக்கெட் விற்பனையில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய உள்விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம்.
"சேப்பாக்கம் மட்டும் இல்லங்க. ஐ.பி.எல் நடக்குற எல்லா ஊர்லயும் இப்டித்தான். அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் டிக்கெட் விற்பனைக்குமே தொடர்பு கிடையாது. அந்தந்த அணி நிர்வாகங்கள்தான் டிக்கெட் விற்பனையைப் பார்த்துக் கொள்கின்றனர். மைதானத்தை சங்கங்கள் அந்தந்த அணிகளுக்கு வாடகைக்குதான் விடுகின்றனர். அணிகள்தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கும்.

20% டிக்கெட்களை மட்டும் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐக்கும் பிரித்துக் கொடுப்பார்கள். அந்த 20% டிக்கெட்களையுமே சங்கங்கள் அவர்களின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கே பெரும்பாலும் கொடுத்துவிடுவார்கள். மீதமிருக்கும் 80% டிக்கெட்கள் அணி நிர்வாகத்தின் கையில்தான் இருக்கும். அவர்கள்தான் டிக்கெட்களை விற்பனை செய்கிறார்கள். அவர்களுமே அத்தனை டிக்கெட்டையுமே ரசிகர்களுக்கென விற்பனை செய்துவிடுவதில்லை. ஸ்பான்சர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும்தான் பெரும்பாலான டிக்கெட்களைக் கொடுப்பார்கள்.
ஒரு அணியின் ஜெர்சியில் இருக்கும் விளம்பர நிறுவனங்கள் அத்தனைக்குமே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிக்கெட்களைக் கொடுப்போம் என ஒப்பந்தம் செய்திருப்பார்கள். அதுபோக அரசியல்வாதிகள், செலிபிரிட்டிகள் எனப் பலருக்கும் டிக்கெட்டைக் கொடுத்த பிறகு எஞ்சியுள்ள டிக்கெட்கள்தான் ரசிகர்களுக்கு விற்பனைக்கு வரும். கையிலுள்ள 80% டிக்கெட்டில் ஒரு 15-20% மட்டுமே விற்பனைக்கு வருமென புரிந்துக்கொள்ளலாம்" என்கிறார்கள் சாதாரணமாக!
பிசிசிஐயின் இணையதள தரவுப்படி சேப்பாக்கம் மைதானத்தில் 33,500 இருக்கைகள் உள்ளன. மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் பிசிசிஐக்கும் சேர்த்து 20% டிக்கெட்கள் எனில் 6700 டிக்கெட்கள் அவர்களுக்குச் சென்றுவிடும். 26,800 டிக்கெட்கள் மீதமிருக்கும். இதில்தான் 20% டிக்கெட்கள் ரசிகர்களுக்கு விற்பனைக்கு வரும்.

ஆக, 5360 டிக்கெட்கள் மட்டுமே நேரடியாக விற்பனைக்கு வரும். அதனால்தான் டிக்கெட்க்கு இத்தனை டிமாண்ட். இந்தக் கணக்கெல்லாம் இல்லை. குறைந்தபட்சமாக 15,000 டிக்கெட்களாவது கவுன்ட்டர் மற்றும் ஆன்லைனுக்கு விற்பனைக்கு வரும் என்கிறது இன்னொரு தரப்பு.
டிக்கெட்க்குக் கடும் கிராக்கி இருப்பதால் கள்ளச்சந்தையிலும் டிக்கெட் விற்பனை ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள், ஊழியர்கள், ஸ்பான்சர்கள் என சிலரின் மூலம் கிடைக்கும் டிக்கெட்களை ரூ.3000 முதல் 10000 வரை விற்கிறார்கள். ஆனால், அந்த டிக்கெட்களில் வெறும் 750 ரூபாய்தான் கட்டணம் என அச்சிடப்பட்டிருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிய வாலாஜா ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு ஆகியவற்றில் சுற்றித் திரிந்தால் நிச்சயம் ப்ளாக்கில் டிக்கெட்களை வாங்கிவிட முடியும். கவுன்ட்டர் புக்கிங்கில் சேப்பாக்க ஏரியா ஆட்கள் முந்தைய நாளே சென்று காத்திருந்து 1500 ரூபாய் டிக்கெட்களை வாங்கி 5000 ரூபாய் வரைக்கும் விற்பதையும் பார்க்க முடிந்தது.

கோடிக்கணக்கான சாமானிய ரசிகர்கள் ஆவலோடு போட்டிகளைக் கண்டுகளிப்பதால்தான் இந்த ஐ.பி.எல்-க்கான அத்தனை விதமான ஒளிபரப்பு உரிமைகளும் பல ஆயிரம் கோடிக்கு விற்பனையாகின்றன. அதிலிருந்துதான் கிரிக்கெட் சங்கங்களுக்கும் அணிகளுக்கும் பெரிய வருமானமே வருகிறது. ரசிகர்களை முதலீடாக வைத்து லாபம் பார்க்கும் இடத்தில் அந்த ரசிகர்களுக்கே இடமில்லையா எனும் கேள்விதான் எழுகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகட்டும், சென்னை அணி நிர்வாகம் ஆகட்டும் இருதரப்பிலுமே இந்த டிக்கெட் விற்பனை பற்றி அதிகாரபூர்வமாக தெளிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. அவர்கள் தரப்பில் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் அதையும் பரிசீலித்து வெளியிடுவோம்.