'சிஎஸ்கே...சிஎஸ்கே...' 'தோனி...தோனி..' எனும் விண்ணதிர் முழக்கங்கள் தெறித்துக் கொண்டிருக்கிறது. சேப்பாக்கமே ரசிகர்களின் வெற்றி கரகோஷத்தாலும் ஆர்ப்பரிப்பாலும் அதிர்கிறது.
ஆம், சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல் பிளே ஆப்ஸின் முதல் தகுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக முதல் அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றிருக்கிறது.

கடந்த சீசனில்தான் குஜராத் அணி ஐ.பி.எல் க்கு அறிமுகமாகியிருந்தது. இதுவரை சென்னை அணி குஜராத்தை 3 முறை சந்தித்து 3 முறையும் வீழ்ந்துதான் போயிருந்தது. மேலும் இந்த சீசனின் டேபிள் டாப்பர்களும் அவர்கள்தான். இதனாலயே அந்த அணியின் மீது ஒரு பிரமிப்பு இருந்தது. போதாக்குறைக்கு தோனி டாஸை தோற்றுவிட்டு 'குஜராத் அணி சேஸிங்கில் கில்லி. அதனால் நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பினோம்' என்றார். அதெல்லாம் சேர்ந்து சிஎஸ்கே ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. ஆனால், பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. சிஎஸ்கே ரொம்பவே சௌகரியமாக போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிட்டது.
சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்த போது ஓப்பனர்களான ருத்துராஜ் கெய்க்வாட் டெவான் கான்வே இருவருமே சிறப்பாக ஆடியிருந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 87 ரன்களை சேர்த்து கொடுத்தனர். ருத்துராஜ் 60 ரன்களையும் கான்வே 40 ரன்களையும் எடுத்திருந்தனர். இதற்கடுத்து வந்த பேட்டர்கள் அத்தனை பேரும் பெரிதாக சோபிக்க தவறினாலும் சென்னை அணி 172 ரன்களை சேர்த்தது.

குஜராத் அணிக்கு 173 ரன்கள் டார்கெட். குஜராத் அணி வலுவான பேட்டிங் ஆர்டரை வைத்திருப்பதால் போட்டியை நெருக்கமாக கொண்டு செல்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், சிஎஸ்கேவின் அபாரமான பந்துவீச்சால் குஜராத் அணி ரொம்பவே சுலபமாக வீழ்ந்துபோனது. தொடக்கத்தில் கில் கொஞ்ச நேரம் களத்தில் நின்று பயமுறுத்த பின் கடைசியில் ரஷீத்கான் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஆனால், இது எதுவுமே அவர்கள் வெற்றி பெற உதவவில்லை. சென்னை அணியின் சார்பில் தீபக் சஹார், தீக்சனா, ஜடேஜா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
சேப்பாக்கத்தில் குஜராத் அணி ஆடும் முதல் போட்டி இதுதான். மற்ற மைதானங்களில் வேண்டுமானா நீங்கள் ஆதிக்கம் செலுத்தலாம். இது சேப்பாக்கம். இது எங்களின் கோட்டை என குஜராத்துக்கு சென்னை பாடமெடுத்ததை போலவே இருந்தது. இந்த வெற்றி மூலம் 10 வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது சிஎஸ்கே.