கர்நாடக சட்டசபையின் முதல்வர் ரேஸே முடிவுக்கு வந்துவிட்டது. ஆனா ஐ.பி.எல் ப்ளே ஆஃப்பிற்குத் தகுதிபெறும் அணிகளின் ரேஸ் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக இறுதி வாரம் வரை நான்கில் மூன்று அணிகள் தகுதி பெறாமல் தொடர் தொங்கலில் இருந்தன. 'நாம ஜெயிச்சா போதும், நாம இவ்வளவு ரன்ரேட்ல ஜெயிச்சா போதும், நமக்கு அந்த டீம் தோத்து நாம ஜெயிச்சாப் போதும்' என கெளதம் மேனனின் ஆரம்பக்கால படங்களைப் போல ஏகப்பட்ட க்ளைமாக்ஸ்களை யோசித்து வைத்திருக்கின்றன அணி நிர்வாகங்கள். ஆர்.சி.பி ரசிகர்களுக்கு பிரச்னை இல்லை. தொன்றுதொட்டே அவர்கள் இப்படியான கணக்குகள் வாழ்பவர்கள்தான். மற்றவர்களுக்குத்தான் இவையெல்லாம் புதிது.
அப்பேர்ப்பட்ட முக்கியமான மேட்ச்சில் நேற்று களம் கண்டது சென்னை சூப்பர்கிங்ஸ். ஜெயித்தால் ப்ளே ஆஃப் உறுதி. பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றால் இரண்டாம் இடமே உறுதி. கணக்கு இவ்வளவுதான். எதிரே நின்றது அதே கர்நாடகாவில் பெரிய பில்டப்போடு களமிறங்கி அடிவாங்கி அமர்ந்திருக்கும் பா.ஜ.கவைப் போன்ற டெல்லி கேப்பிடல்ஸ்.

டாஸ் வென்ற தோனி கணித்தபடியே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ப்ளேயிங் லெவனிலும் எந்த மாற்றமுமில்லை. டெல்லி அணியில் ஓரளவு பௌலிங்கைக் கட்டிக் காப்பாற்றிய இஷாந்த் சர்மா காயம் காரணமாக வெளியேற அவருக்குப் பதில் சக்காரியா. ஸ்லோ ட்ராக் என்பதால் முகேஷுக்குப் பதில் லலித் யாதவ்.
கலீல் வீசிய முதல் ஓவரில் வெறும் ஆறே ரன்கள். பந்து தயங்கித் தயங்கி பேட்ஸ்மேனின் பேட்டைத் தொட்டதால் இரண்டாவது ஓவரே ஸ்பின்னைக் கொண்டுவந்தார் வார்னர். பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து வரவேற்றார்கள் சென்னை ஓப்பனர்கள். கலீலின் அடுத்த ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் கான்வேயின் பேட்டிலிருந்து! 'இது சரிப்படாது' என அக்ஷரை அழைத்துவந்தார் வார்னர். அக்ஷரின் எகானமி இந்த மேட்ச்சுக்கு முன் வரை 6.9தான். அந்த நம்பிக்கையில் அவரிடம் வார்னர் பந்தைக் கொடுக்க, 'அதான் ஸ்பின் போட்டா அடிக்கிறோம்னு தெரியுதுல' என அவரையும் வெளுத்தார்கள் சென்னை பேட்ஸ்மேன்கள். 11 ரன்கள்.
'சரி அப்போ பாஸ்ட் பௌலிங் கூப்பிட்டு வர்றேன்' என நார்க்கியாவை இழுத்துவந்தார். அந்த ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள். 'அவங்க எப்படிப் போட்டாலும் அடிக்கிறாய்ங்கய்யா' என நொடியில் சென்னை 28 நிதின் சத்யா ஆனார் நார்க்கியா. பவர்ப்ளேயின் இறுதி ஓவருக்கு சக்காரியா. அவர் மட்டும்தான் இரண்டு ரன்கள் கொடுத்து வார்னருக்கு நிம்மதியைக் காட்டினார். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 52/0. ஆறு ஓவர்களில் ஐந்து பௌலர்களைப் பயன்படுத்தியிருந்தது டெல்லி. அவர்கள் யாருக்கும் வெற்றி இல்லை என்பதிலிருந்தே மேட்ச் எந்தத் திசையை நோக்கி பயணிக்கிறது என்பது தெளிவானது.

மிடில் ஓவர்களில் எதிர்பார்த்தபடியே ஸ்பின் அட்டாக். குல்தீப்பும் அக்ஷரும் அடுத்தடுத்து வீசிய மூன்று ஓவர்களில் வெறும் 20 ரன்கள். ரன்ரேட் கொஞ்சமாய் மட்டுப்பட, கொதித்தெழுந்தார் கெய்க்வாட். அக்ஷர் வீசிய பத்தாவது ஓவரில் தொடர்ந்து இரண்டு இமாலய சிக்ஸ்கள். அதன்வழியே தன் அரைசதத்தையும் அடைந்தார். சி.எஸ்.கேவுக்காக ஐம்பதாவது ஆட்டத்தில் ஆடும் கெய்க்வாட்டிற்கு இது 13வது அரைசதம். இந்த சீசனில் மூன்றாவது. 'அப்ப நான் என்ன தக்காளித்தொக்கா' என அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கான்வே. 'என்கிட்ட மோதாத பங்காளி' என குல்தீப் வீசிய 12வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார் கெய்க்வாட். இவர்கள் இருவரின் செல்லச் சண்டையில் சிக்கி சின்னாபின்னமானார்கள் டெல்லி பௌலர்கள். ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவில் 117/0.

ருத்துராஜ் - கெய்க்வாட் இணை ஓப்பனிங் ஆடிய இருபது இன்னிங்ஸ்களில் இது நான்காவது நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப். ஓப்பனிங் இணையாக சென்னைக்காக ஆயிரம் ரன்களையும் கடந்துவிட்டார்கள். இந்த நம்பர்களை எல்லாம் ஒருபக்கம் கம்ப்யூட்டர் கணக்கு பண்ணிக்கொண்டிருக்க அந்தப் பக்கம் பந்தை நாலாபக்கமும் சிதறவிட்டுக்கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரும். கான்வேயும் சிக்ஸ் அடித்து அரைசதம் தாண்டினார். 15வது ஓவரில்தான் புயலடித்து ஓய்ந்த கதையாக அவுட்டானார் ருத்து. 50 பந்துகளில் 79 ரன்கள். மூன்றே பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள். ஆனாலும் அந்தப்பக்கம் கான்வே விட்டபாடில்லை. இழுத்து இழுத்துச் சாத்திக்கொண்டிருந்தார்.
போதாக்குறைக்கு களத்தில் சிக்ஸர் சிங்காரம் தூபே வேறு. லாங்கில் மட்டும்தான் அடிப்பார் என்பதால் மொத்த பீல்டர்களையும் லாங்கில் நிறுத்தியிருந்தார் வார்னர். 'பந்து தரையோடு தரையா தவழ்ந்து வர நான் என்ன சின்னம்மாவா? சிக்ஸர் அடிக்கிற தூபேய்யா' எனத் தன் பங்கிற்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார், சென்னைக்காக ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த லிஸ்ட்டில் முதலிடம் வாட்சனுக்கு. 35 சிக்ஸர்கள். தூபே இந்த சீசனில் அடித்திருப்பது 33 சிக்ஸர்கள். இன்னும் குறைந்தது இரண்டு போட்டிகள் சென்னைக்கு இருக்கிற நிலையில் கண்டிப்பாய் அந்த சாதனையை முறியடிப்பார் என நம்பலாம்.

மூன்றாவது சிக்ஸ் அடித்த கையோடு தூபே கிளம்ப, இன்னும் இரண்டு ஓவர்களே மிச்சம். அப்புறமென்ன, மைதானம் அதிர உள்ளே வந்தார் தோனி. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் கான்வேயும் காலி. 52 பந்துகளில் 87 ரன்கள். த்ரீ டவுனில் இறங்கினார் ஜடேஜா. போன மேட்ச் கட்டை வைத்த பாவத்திற்கு சேர்த்துவைத்து சிக்ஸரும் பவுண்டரிகளும் பறக்கவிட்டார். ஆனாலும் தோனி சிக்ஸ் அடிப்பார் எனக் காத்திருந்த கூட்டத்திற்கு ஏமாற்றமே. 20 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 223/3. இந்த சீசனில் சென்னை தொட்டிருக்கும் ஐந்தாவது 200+ ஸ்கோர் இது.

இம்பேக்ட் பிளேயராய் உள்ளே வந்தார் ப்ரித்வி ஷா. முதல் ஓவரில் ஐந்தே ரன்கள். வந்தார் சென்னை அணிக்காக அதிக விக்கெட்கள் இந்த சீசனில் வீழ்த்தியிருக்கும் துஷார். ரொம்ப யோசித்து பேட்டிற்கு வந்த பந்தை ஷா மிட் ஆப் பக்கம் தூக்கியடிக்க குறுக்கே பறந்து கேட்ச் பிடித்தார் ராயுடு. மறுபடியும் பாரம் மொத்தமும் வார்னர் தலையில்! பிரஷரில் பந்தைக் கணிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டே இருந்தார். ஒருவழியாய் ஐந்தாவது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க, அதே ஓவரில் ஸ்லோ பால் போட்டு சால்ட்டைக் காலி செய்தார் தீபக் சஹார். முரட்டு பார்மில் வந்து நின்ற ரூஸோவும் அதற்கடுத்த பந்திலேயே இன்சைட் எட்ஜில் ஸ்டம்ப்பைக் காவு கொடுத்தார். 'ரீப்பிட்டு' மோடுக்குச் சென்றார்கள் டெல்லி ரசிகர்கள். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 34/3.
மிடில் ஓவர்களில் ஸ்பின். ஜடேஜாவும் தீக்ஷனாவும். ஜடேஜாவை பவர்ப்ளேயில் பேட்டைச் சுற்றிக் கலாய்த்த வார்னர் மிடில் ஓவரில் அதே பேட்டை சுற்றிக் கலங்கடித்தார். ஜடேஜாவின் இரண்டாவது ஓவரில் மட்டும் 14 ரன்கள். 32 பந்துகளில் வார்னர் அரைசதம். அவரின் அடுத்த ஓவரில் பதிலுக்கு யஷ் துல்லைக் காலி செய்தார் ஜடேஜா. பதிலுக்கு ஜடேஜாவின் கடைசி ஓவரில் மூன்று சிக்ஸ், ஒரு பவுண்டரி என 23 ரன்கள் எடுத்தார்கள் வார்னரும் அக்ஷரும். 4-0-50-1 என்கிற சீசனின் மோசமான ஸ்பெல் ஜடேஜாவுக்கு. ஸ்கோர் 13 ஓவர்கள் முடிவில் 107/4.

அடுத்த ஓவரிலேயே அக்ஷரைக் காலி செய்தார் தீபக் சஹார். அப்போதே ஆறு ஓவர்களில் 114 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலை. அதன்பின்னர் நிகழ்ந்தது என்னவோ சம்பிரதாய பேட்டிங்தான். அதுவும் வார்னர் இருந்தவரையில்தான். ஸ்லோ பால் போட்டு அவரையும் பெவிலியன் அனுப்பினார் பதிரானா. கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் லலித் யாதவ் அவுட். தீக்ஷனாவிற்கு முதல் விக்கெட். அடுத்த பந்திலேயே 'இந்தாங்க ப்ளஸ் ஒன்' என தன் விக்கெட்டையும் இலவசமாய் கொடுத்தார் குல்தீப். ஹாட்ரிக் பந்து. சக்காரியாவின் பேடில் பந்து பட ரிவ்யூ கேட்டார் தீக்ஷனா. பாவம் அவருக்கும் ஆசையிருக்கும்தானே. அவுட்டில்லை எனத் தெரிந்தும் சிரித்தபடி ரிவ்யூ எடுத்தார் தோனி. அவுட்டில்லை. அதற்கடுத்த பந்தில் மீண்டும் எல்பிடபிள்யூ அப்பீல். இப்போது அம்பயர் அவுட் கொடுக்க, சக்காரியா ரிவ்யூ எடுத்தார். நாட் அவுட். இப்படி ஏகப்பட்ட காமெடி டிராமாக்களோடு முடிந்தது மேட்ச். ஆட்டநாயகன் ருத்துராஜ்.

77 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி. இதன்மூலம் இரண்டாவது இடம் சென்னைக்கு உறுதி. ப்ளே ஆஃப் சென்னையில்தான் என்பதால் பைனலைக் குறிவைத்து இறங்குவார்கள். அப்படி முதல் ப்ளே ஆஃப்பில் வென்று பைனல் போகும்பட்சத்தில் தோனி எதிர்பார்த்த, நமக்கு வாக்குக் கொடுத்த அந்த கனவு ஃபேர்வெல் சென்னை மண்ணில் நிகழும். காத்திருப்போம்!