Published:Updated:

SRH vs MI: மும்பையின் ஹாட்ரிக் வெற்றி; ஆனந்த கண்ணீரில் சச்சின்; என்ன நடந்தது?

கடந்த இரண்டு தொடர்களாக அமைதியாக இருந்த மும்பை ஹாட்ரிக் வெற்றியின் மூலமாக தற்போது "நாயகன் மீண்டும் வரார்" என மற்ற அணிகளுக்கு சமமாக‌ நிற்கத் தொடங்கியுள்ளது.

Published:Updated:

SRH vs MI: மும்பையின் ஹாட்ரிக் வெற்றி; ஆனந்த கண்ணீரில் சச்சின்; என்ன நடந்தது?

கடந்த இரண்டு தொடர்களாக அமைதியாக இருந்த மும்பை ஹாட்ரிக் வெற்றியின் மூலமாக தற்போது "நாயகன் மீண்டும் வரார்" என மற்ற அணிகளுக்கு சமமாக‌ நிற்கத் தொடங்கியுள்ளது.

17 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிரீன் முதல் முறையாக மும்பை அணிக்காக ஒரு போட்டியை வென்று கொடுத்துள்ளார்.
Green
Green

கிரீன் மும்பை அணியில் எந்த பேட்டிங் வரிசையில் வருவார்? எத்தனை ஓவர்கள் பந்து வீசுவார்? அவருக்காக பிரெவிஸ், ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் எல்லாம் வெளியே அமர்வது நியாயமாக இருக்குமா போன்ற பல கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தனது ஆட்டத்தின் மூலமாக நேற்று பதில் கூறினார் கிரீன். அதுவும் போக அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடியதும் நேற்றைய ஆட்டத்தின் மற்றொரு ஹைலைட்.

தொடர்ந்து இரண்டு தோல்விகளைச் சந்தித்தாலும் அதன் பிறகு இரண்டு வெற்றிகளுடன் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்திற்கு வந்திருந்தது மும்பை. மும்பையில் இணைவதற்கு முன்பு ரோஹித் இந்த மைதானம் சார்ந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு விளையாடிய காரணத்தால் டாஸ் போட ரோஹித் வந்த போது ரசிகர்களின் சத்தம் விண்ணைப் பிளந்தது. டாஸ் வென்ற ஹைதராபாத் எந்த அதிர்ச்சியும் தராமல் பந்து வீசப் போகிறோம் என்று கூறியது.‌

SRH
SRH

ஹைதராபாத் மைதானத்தில் ஆரம்பத்தில் நல்ல ஸ்விங் இருக்கும் என்பதாலும், நல்ல ஸ்விங் செய்யும் புவனேஷ்வர் மற்றும் யான்சன் இருந்ததாலும் சிறிது நேரத்திற்கு ஒரு நல்ல போட்டி காணப்பட்டது. ஆனால் ரோஹித், ஸ்பின்னர் வாஷிங்டன் வந்தவுடன் தனக்கே உரிய பாணியில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். அடுத்து நடராஜன் வீசிய ஓவரிலும் இரண்டு பவுண்டரிகளை அடித்தாலும் அதே ஓவரில் அவுட்டும் ஆனார். 18 பந்துகளில் 28 என சிக்கலான பிட்ச்சிலும் நல்ல அடித்தளம் அமைத்துச் சென்றார் ரோகித்‌. பவர்பிளே முடிவதற்குள்ளேயே ரோஹித் அவுட் ஆனதால் கிரீன் களமிறங்கினார். வந்ததிலிருந்து இருக்கிற எல்லா திசைகளிலும் தனது பேட்டைச் சுழற்றி சுழற்றி அடிக்கப் பார்த்தார் கிரீன். ஆனால் பாவம் அவருக்கு ஒரு பந்து கூட மாட்டவில்லை.

அதே நேரத்தில் இஷான் கிஷனும் ரன் எடுக்க சிறிது திணற, ஒரு குட்டி பிரஷர் உண்டானது.‌ கிரீன் ஒரு கட்டத்தில் 18 பந்துகளுக்கு 20 ரன்கள் என்று இருந்ததால் ஸ்கோரை உயர்த்த யான்சன் வீசிய ஓவரை அடிக்க நினைத்து ஆட்டம் இழந்தார் இஷான் கிஷன். அதே ஓவரில் தன்னுடைய இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்த சூர்யகுமார் மூன்றாவது பந்தில் அவுட் ஆனார். அதன் பின்பு மும்பை அணியின் வருங்கால சூப்பர் ஸ்டார் திலக் களத்திற்கு வந்தார். ஒரு பக்கம் திலக் நின்றாலும் மும்பை ரசிகர்களே 'எப்படா அவுட் ஆவான்' என்று வெறுத்துப் போகும் அளவுக்கு ஆடிக் கொண்டிருந்தார் கிரீன்.

பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று 13வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் கிரீன். அடுத்து யான்சன் ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள். கிரீன் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் அமைதிப்படை சத்யராஜ் போல மெல்ல மெல்ல நிம்மதியாக உட்கார்ந்தனர் மும்பை ரசிகர்கள்.
MI
MI

திலக் மறுபக்கம் இரண்டு பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் என அதிரடி காட்டி புவனேஸ்வர் பந்துவீச்சில் அவுட் ஆனார். 17 பந்துகளில் 37 ரன்களை திலக் எடுத்தது மிகப்பெரிய பூஸ்ட். இந்த வேகத்தை அப்படியே பிடித்துக் கொண்ட கிரீனும், நடராஜன் பந்துவீச்சில் மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்சர் என ஒரே ஓவரில் அடித்து அரைசதம் கடந்தார். மொத்தம் 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார் கிரீன். கடைசி ஓவரில் டிம் டேவிட் இரண்டு பவுண்டரிகள் அடிக்க மொத்தமாக 192 ரன்கள் எடுத்தது மும்பை அணி.

பெரிய டார்கெட் என்றாலும் இந்த ஐ.பி.எல் தொடரை பொருத்தவரை இரண்டாவது இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய டார்கெட் என்றாலும் அடிக்க முடியும்தான். இந்த உத்வேகத்துடன் களமிறங்கியது ஹைதராபாத். கடந்த ஆட்டத்தைப் போலவே முதல் ஓவரை அர்ஜுன் டெண்டுல்கர் அற்புதமாக வீசினார். வெறும் ஆறு ரன்கள் மட்டுமே முதல் ஓவரில் வந்தன. அடுத்த ஓவரில் ஹைதராபாத்தின் அதிரடி ஓப்பனரும் கடந்த ஆட்டத்தில் சதம் அடித்தவருமான் ப்ரூக் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை பெஹரண்டாஃப் வீழ்த்தினார். இவரே இரண்டாவது ஓவர் வீசும் போது திரிப்பாதியும்‌ அவுட் ஆக 4 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது ஹைதராபாத்.

இதன் பிறகு அணியை மீட்கும் வேலையில்‌ இறங்கினார் கேப்டன் மார்க்ரம். ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக விளையாடும் இவர், ஷோக்கின் மற்றும் சாவ்லா பந்துவீச்சை சிறப்பாகச் சமாளித்தார். இதை உணர்ந்த கேப்டன் ரோஹித் கிரீனிடம் பந்தைக் கொடுத்தார். நேற்று தொட்டதெல்லாம் தங்கமாகும் வரம் வாங்கி வந்திருந்த கிரீன் மார்க்ரமை அவுட் ஆக்கினார். அடுத்த ஓவரில் அபிஷேக்கும் அவுட் ஆக ஆட்டம் மும்பை பக்கம் சாய்ந்தது. ஆனால் அதை நிறுத்த வந்தார் கிளாசன். சாவ்லா வீசிய 14வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என அதிரடி காட்டி ஹைதராபாத்தை ஆட்டத்திற்குள் மீண்டும் அழைத்து வந்தார். ஆனால் அதே ஓவரில் சாவ்லா கிளாசனை வெளியேற்ற ஆட்டம் சம நிலைக்கு வந்தது.

SRH
SRH
இந்த நேரத்தில் ஷோக்கின் அல்லது அர்ஜுன் ஒரு ஓவரை வீசியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. எந்த கேப்டனாக இருந்தாலும் கடைசி ஓவர்கள் வருவதற்குள் இந்த ஓவரை வீசி முடிக்கவே நினைப்பர். ஆனால் ரோஹித் ஆட்டத்தை வெல்ல விக்கெட்டுகளே அவசியம் என்று கருதி தனது பிரதான பௌலர்களைப் பயன்படுத்தி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டிம் டேவிட் மட்டுமே நேற்று 4 கேட்ச்சுகள் ஒரு ரன் அவுட் என ஜான்ட்டி ரோட்ஸாக‌ மாறி இருந்தார். முக்கியமான விக்கெட்டுகளை எல்லாம் வீழ்த்திய பின்பு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்று வந்தபோது அர்ஜுனை அழைத்து பந்து வீசச் சொன்னார் ரோஹித்.

MI
MI
மிகச் சிறப்பாக வீசி தனது ஐந்தாவது பந்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டையும் பதிவு செய்தார் அர்ஜுன்.

மும்பை 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. IPL போட்டிகளில் விக்கெட் எடுத்ததை குறிப்பிட்டு சச்சின் கூட செய்யாததை அர்ஜுன் செய்து விட்டதாக வர்ணனையில் ஆனந்தமாகப் பேசினார் ரவி சாஸ்திரி.

சச்சினின் கண்களில் கூட சிறிது ஈரம் படிந்து இருந்தது. கடந்த இரண்டு தொடர்களாக அமைதியாக இருந்த மும்பை ஹாட்ரிக் வெற்றியின் மூலமாக தற்போது "நாயகன் மீண்டும் வரார்" என மற்ற அணிகளுக்கு சமமாக‌ நிற்கத் தொடங்கியுள்ளது.