நடப்பு ஐ.பி.எல் சீசனில் போட்டிகளைக் கடந்து அதன் சுவாரஸ்யங்களுக்கு அப்பாற்பட்டு வெளியே நடக்கும் விஷயங்கள் இன்னும் அதிக சுவாரஸ்யங்களை உள்ளடக்கியிருப்பதை பார்க்க முடிகிறது. அதில் ஒன்று போட்டிகளுக்குப் பிறகு இளம் வீரர்களுடன் தோனி நடத்தும் உரையாடல்.

சென்னை அணி ஆடும் ஒவ்வொரு போட்டியின் போதுமே எதிரணியின் இளம் வீரர்கள் போட்டி முடிந்த பிறகு தோனியிடம் வந்து ஆலோசனை பெறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது இந்த சீசனில் மட்டுமே நடக்கும் விஷயமல்ல. கடந்து மூன்று - நான்கு சீசன்களாகவே இளம் வீரர்களுடனான தோனியின் அந்த உரையாடல்கள் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு போட்டி முடிந்த பிறகு ஒட்டுமொத்த சன்ரைசர்ஸ் அணியுமே தோனியிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாக ஆகியிருந்தது. தோனியின் இந்த ஆலோசனைகள் சார்ந்து கவனித்து பேச வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது,
தோனியை ஏன் இத்தனை இளம் வீரர்கள் சூழ்கிறார்கள்? 42 வயதில் ஓய்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தோனி தன்னை இளம் வீரர்களுடன் எவ்வாறு ஒன்றிணைத்துக் கொள்கிறார்?

தோனிக்கு முன்னரே பல மூத்த வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் ஆடியிருக்கிறார்கள். ஆனால், அவர்களெல்லாம் பெரிதாக இந்த வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அதாவது, ஒரு குரு ஸ்தானத்திலிருந்து இளைஞர்களுக்கு பாடம் புகட்டும் வேலையை பெரிதாக யாரும் வாடிக்கையாக வைத்துக் கொண்டதில்லை. தோனி மட்டுமே அதை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
இளைஞர்களுடன் தோனியின் உரையாடல்கள் அவ்வளவு எளிதில் நடந்துவிடுவதில்லை. அதற்கு பின்னால் தோனி அவற்றை நிகழ்த்த பல நுணுக்கமான வேலைகளைச் செய்கிறார். குறிப்பாக,
தன்னை இளைஞர்களுடன் ஒன்றிணைத்துக் கொள்ள அவர்களுக்கு தன் மீதான சீனியாரிட்டி மற்றும் பிரமிப்பு சார்ந்த தயக்கத்தை உடைக்க எக்கச்சக்க மெனக்கெடல்களை செய்கிறார்.

தனிப்பட்ட அனுபவத்தின் மூலமே இதனை பல சமயங்களில் உணர முடிந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தின் புதிய ஸ்டாண்ட்டை திறக்கும் விழா நடந்திருந்தது. அந்த விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் தோனியும் தான் சிறப்பு விருந்தினர்கள்.
மேடையிலிருந்து அவர்கள்தான் புதிய ஸ்டாண்ட்டை திறந்து வைக்க வேண்டும். இவ்விழாவிற்கு, தோனி முதல்வரோடே அப்படியே நேராக சிறப்பு வழியாக வந்து மேடைக்கு சென்றிருக்கலாம். ஆனால், தோனி அவ்வாறு செய்யவில்லை. விழாவிற்கு வந்திருந்த சிஎஸ்கே வீரர்கள் அத்தனை பேரையும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நடுவே நடந்து வரச் செய்து, அவர்களுக்கு பின்னால் அவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி வந்து மேடைக்கு கீழே அந்த வீரர்களுடன் கொஞ்ச நேரத்தை செலவிட்டுவிட்டுதான் மேடையேறினார்.

இதெல்லாம் ரொம்பவே சிறிய விஷயம் போலத்தான் தோன்றும். ஒரு அணியாக வீரர்கள் அத்தனை பேரையும் எந்த மனத்தடையும் இல்லாமல் ஒருங்கிணையச் செய்யவும் தன்னைவிட 20 வயது குறைந்த வீரர்களை கூட தன்னுடன் சகஜமாக்கிக் கொள்ளவும் இத்தனை நுணுக்கமான வேலைகளை அவர் செய்துதான் ஆக வேண்டும்.
சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோவிற்கு எதிரான போட்டிக்கு பிறகான பத்திரிகையாளர் சந்திப்பிலும் இப்படியொரு சம்பவம் நடந்திருந்தது. போட்டி முடிந்தவுடன், இரு அணி தரப்பிலும் யாரோ ஒருவர் வந்து பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள். நடு இரவை எட்டிவிட்டதால் அந்த பத்திரைகையாளர் கூட்ட அறையில் ஒரு சிலர்தான் இருந்தோம். முதலில் லக்னோ அணியின் சார்பில் மோர்னே மோர்கல் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார். அடுத்ததாக சென்னை அணியிலிருந்து ஒருவர் வர வேண்டும். கொஞ்சம் தாமதமானது. யார் வரப்போவது என்கிற எதிர்பார்ப்பு எல்லாருக்குமே இருந்தது. மொயீன் அலிதான் வருவார் என அந்த அறையில் முணுமுணுப்புகளையும் கேட்க முடிந்தது. ஏனெனில் மொயீன் அலிதான் அன்றைய போட்டியில் மேன் ஆஃப் தி மேட்ச். சில நிமிடங்களிலேயே 'மொயீன் அலிதான் வருகிறார்' என நிர்வாகி ஒருவரும் உறுதி செய்தார். உற்சாகம் தொற்றிக் கொண்டது. ஆனால்,

திடீரென 'Impact Player' துஷார் தேஷ்பாண்டே அறைக்குள் வந்தார். துஷார்தான் பத்திரிகையாளர்களை சந்திக்கப்போகிறார். கேள்விகளை கேளுங்கள் என்றனர்! கேள்விகள் தொடர்ந்தது. துஷார் நன்றாக பதிலும் அளித்திருந்தார்.
அன்றைய போட்டியை வெல்ல மொயீன் அலிதான் காரணம். துஷாரோ ரன்களை வாரி வழங்கியிருந்தார். ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வந்தனர். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பிற்கு மொயீனை ஒதுக்கிவிட்டு தோனி துஷாரின் பெயரைத்தான் டிக் அடித்திருந்தார். இதைவிட ஒரு இளம் வீரருக்கு பெரிய தன்னம்பிக்கை எங்கிருந்து கிடைத்துவிடும்? மோசமான காலக்கட்டத்தில் இருந்தாலும் கேப்டன் தன்னை நம்புகிறார். துணிச்சலாக சூழலை எதிர்கொள். கேள்விகளை எதிர்கொள் என அதற்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்கிறார். சுற்றி முற்றி அத்தனை பேரும் நம்பிக்கையற்ற உணர்வை வெளிக்காட்டுகையில் கேப்டன் தன்னோடு நிற்கிறார் என்கிற உணர்வே துஷாருக்கு பெரிய தெம்பைக் கொடுக்கக்கூடும். அதற்கடுத்த போட்டிகளில் துஷார் தன்னை மேம்படுத்திக் கொண்டு மெருகேறியதையும் பார்க்க முடிந்தது.

'எதிரணியின் இளம் வீரர்கள் சென்னைக்கு வரும்போதே போட்டி முடிந்த பிறகு தோனியுடன் செலவளிக்கப்போகும் அந்த சில நிமிடங்களில் அவரிடம் என்ன கேட்கப்போகிறோம் என்கிற ஆவலோடுதான் வருவார்கள்.
அது அவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. தோனியுமே ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் இதற்காகவே ஒரு நேரத்தை செலவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதுவே அவர் எப்படியான குணாதிசயத்தை கொண்ட மனிதர் என்பதை காட்டுகிறது.' தோனியுடன் நீண்ட நாட்களாக கிரிக்கெட் ஆடியவரும் சென்னை அணியின் முன்னாள் வீரருமான ராபின் உத்தப்பா இவ்வாறு கூறியிருக்கிறார்.

இளம் வீரர்களுடன் தோனி இந்தளவுக்கு ஒன்றிப்போவதற்கும் அவர்களுக்காக நேரம் செலவளிப்பதற்குமே கூட சில பின்னணி காரணங்கள் இருக்கவே செய்கிறது. 'தோனி எப்படி இளம் வீரர்களுடன் இவ்வளவு இயல்பாக பழகுகிறார் என்பதை எண்ணி வியந்திருக்கிறேன். உணர்வுரீதியாக பெரும் நுண்ணறிவை கொண்டவர் அவர். மேலும், அவரின் டெஸ்ட் கேப்டன்சி அனுபவமும் இதற்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். அனில் கும்ப்ளே கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு தோனி கேப்டனாகியிருந்தார். அந்த சமயத்தில் அணியில் சச்சின், டிராவிட், வாசிம் ஜாஃபர், சேவாக், ஹர்பஜன், லக்ஷ்மண் போன்ற சீனியர்களும் ஜாகீர், கம்பீர் போன்ற வீரர்களும் இடம்பிடித்திருந்தனர்.
தோனி கேப்டனாக இருந்த அந்த தொடக்கக்காலத்தில் சீனியர்களிடம் தன்னுடைய கருத்தை எடுத்து முன் வைக்கவும் அவர்களை வழிநடத்துவதிலும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கக்கூடும்.
இளம் வீரராக அவர் சந்தித்த சிரமங்களிலிருந்துதான் இளம் வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்கிற பாடத்தை தோனி கற்றிருக்க முடியும்.
தோனி இளம் வீரர்களை ஊக்குவிப்பதோடு அவர்களின் குரலுக்கும் ஒரு வெளி கொடுத்து ஒலிக்க செய்கிறார்'
இளம் வீரர்களுடனான தோனியின் ஆலோசனை சார்ந்து தீவிர கிரிக்கெட் விமர்சகரான ஜாய் பட்டாச்சார்யாவின் பார்வை இது.
தோனியின் சொந்த அனுபவம் சார்ந்த படிப்பினை என்கிற ரீதியில் இது ஒரு முக்கியமான மதிப்பீடு. ஏனெனில், தோனி கேப்டனான தொடக்க காலத்தில் ஒரு பிரபலமான பிரஸ் மீட்டை நடத்தியிருந்தார். வழக்கமாக பிரஸ்மீட் என்றாலே கேப்டனோ பயிற்சியாளரோ அல்லது வீரர்களில் யாரோ ஒருவர் பங்கேற்பதே வழக்கம். ஆனால், தோனி அந்த பிரஸ்மீட்டிற்கு ஒட்டுமொத்த இந்திய அணியையும் அழைத்து வந்தார். காரணம், அணிக்குள் கேப்டனுக்கும் சில சீனியர் வீரர்களுக்கும் குறிப்பாக சேவாக்குக்கும் இடையே உரசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்துதான் தோனி இந்த பிரஸ்மீட்டை நடத்தியிருந்தார். பட்டாச்சார்யாவின் வாதத்திற்கு வலுசேர்க்கும் அம்சங்கள் இதிலேயே இருக்கிறது.
ஒரு முறை இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராகவும் இருக்கும் நெஹ்ரா ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார்.

'2004-05 அந்த காலக்கட்டத்தில்தான் தோனி இந்திய அணிக்கு அறிமுகமாகியிருந்தார். அந்த சமயத்தில் சச்சின், ஜாகீர், ஹர்பஜன், யுவராஜ் மற்றும் நான் என ஐந்து பேர்தான் ஒன்றாக உணவருந்த செல்வோம்.
எங்களுடன் தோனி ஒருநாள் கூட உணவருந்த வெளியே வந்ததாக எனக்கு ஞாபகமே இல்லை. தோனி எப்போதுமே அப்படி தனியாக அமைதியாகத்தான் இருப்பார். எந்த சீனியரின் அறைக்கும் தப்பித்தவறிக்கூட செல்லமாட்டார்.' என்கிறார் நெஹ்ரா.
இளம் வீரர்களுடனான தோனியின் நட்பைப் புரிந்துகொள்ள நெஹ்ராவின் இந்த கருத்தை நாம் இன்னும் ஆழமாகவே அலச வேண்டும். நெஹ்ராவின் தரப்பிலிருந்து தோனி ஒரு Introvert. அதனால் அவர் சீனியர்களிடம் பழகுவதில்லை என்பதே வெளிப்படுகிறது. அதே விஷயத்தை தோனியின் கண்கொண்டு அந்த சமயத்து தோனியாக நாம் யோசித்து பார்த்தோமெனில், தோனிக்கு தன்னை விட மூத்த பிரபல வீரர்களிடம் சகஜமாக பழகுவதில் எதோ மனத்தடையும் தயக்கமும் இருந்திருக்கக்கூடும் என்பது புலப்படும்.

அந்த தயக்கத்தை உடைக்க சீனியர்கள் சார்பில் எந்த முயற்சியுமே கூட எடுக்கப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது அவர்கள் எடுத்த முயற்சிகள் தோனிக்கு தன்னை இயல்பாக்கிக் கொள்ள போதுமானதாக இருந்திருக்காது. தனக்கேற்பட்ட இந்த அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொண்டதன் விளைவாக கூட தோனியின் இப்போதைய ஆலோசனைகள் என புரிந்துகொள்ளலாம்.
அதே நெஹ்ரா அதே பேட்டியில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டிருப்பார்.
'கேப்டனான பிறகு தோனியின் அறைக்கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும். எந்த ஒரு ஜூனியர் வீரரும் அவரை எளிதில் அணுக முடியும். அவரது அறையிலேயே உட்காந்து வீடியோ கேம் ஆட முடியும். நமக்கு தேவையானதை ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம். அவரிடம் நிறைய கிரிக்கெட் பேசலாம். ஆனால், ஒரு சமயத்திலும் புரளிகள் பேச மட்டும் அனுமதிக்கமாட்டார்.'

தனது சீனியர்களுடனான அனுபவத்தின் வெளிப்பாடுதான் இளைஞர்களை கையாளும் திறனை தோனிக்கு கொடுத்திருக்கிறது எனும் வாதத்திற்கு மேலும் வலுசேர்க்கும் ஸ்டேட்மெண்ட் இது. தோனிக்குப் பிறகு கேப்டனான விராட் கோலியிடம் இந்த பண்பு இல்லை என பலரும் விமர்சித்திருந்ததை கூட கவனித்திருப்போம்.
தோள் மீது கைபோட்டு அறிவுரை கூறுவது மட்டுமல்ல. தன் தோள் மீது கை போடவும் அனுமதிக்க வேண்டும். விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சஹால், குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் என தோனி இந்திய அணிக்கு ஆடிய போதே இப்படி தனக்கென ஒரு பெரும் இளம் நண்பர்கள் படையையே உருவாக்கி வைத்திருந்தார். 'தோனி மாடியிலிருந்து குதிக்க சொன்னாலும் குதிப்பேன்' என்பார் இஷாந்த். 'கடினமான காலங்களில் தோனியின் தொலைபேசி அழைப்புகள்தான் ஆதரவாக இருந்தது' என்கிறார் கோலி.
தோனி கீப்பராக இருந்த போது சஹால், குல்தீப்பின் பெர்ஃபார்மென்ஸையும் இப்போதைய பெர்ஃபார்மென்ஸையும் ஒப்பிட்டுப் பாருங்கள் பெரிய வித்தியாசம் தெரியும். இந்திய அணியில் தன்னுடைய நாட்களை தோனி நீட்டித்துக் கொண்டதற்குமே விராட் கோலி போன்ற இளம் வீரருடனான அவரின் இணக்கமும் ஒரு பெரிய காரணமாக இருந்தது.

தோனியின் அனுபவத்தை விட பதிரனா இளையவர். தோனிக்கு 42 பதிரனாவுக்கு 20. ஆனால், அந்த பதிரனா விக்கெட் வீழ்த்துகையில் எப்போதும் ரியாக்சனே காட்டாத தோனி கூட ஆச்சர்ய பாவனைகளை வெளிக்காட்டி ஆர்ப்பரிக்கிறார்.
இளம் வீரர்களுக்கும் தனக்குமிடையே தயக்கம் என்ற பெயரில் தடையாக நிற்கும் பெருஞ்சுவரை இடித்துத்தள்ள எப்போதுமே பிரயத்தனங்களை மேற்கொண்டு கொண்டே இருக்கிறார். சின்னச்சின்ன விஷயங்களில் கூட ஜூனியர் வீரர்களுக்கு தன் மீதான அந்த பிரமிப்பு ஒரு மனத்தடையாக மாறிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். தோனி அளவுக்கு வேறெந்த வீரரும் இந்த விஷயத்தில் இத்தனை கவனமாக இருப்பதாக தெரியவில்லை.
தோனி ஏன் இளைஞர்களால் சூழப்படுகிறார்? என்பதற்கு பதில் இதுதான்.

அவர் தன்னுடன் எந்த மனத்தடையும் தயக்கமும் இன்றி கண்ணுக்கு கண் பார்த்து பேசுவதற்கான வெளியை இளம் வீரர்களுக்கு உறுதிப்படுத்திக் கொடுக்கிறார். அவ்வளவே!