Published:Updated:

IPL 2022: பொல்லார்ட், வில்லியம்சன் டு ஷாருக்கான் - அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றிய டாப் 10 வீரர்கள்!

மயங்க், சிராஜ், வெங்கடேஷ், ஷாருக்கான் ( IPL 2022 )

இவர்களைத் தாண்டி, மும்பையின் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, பஞ்சாபின் ஓடியன் ஸ்மித், சிஎஸ்கேவின் கிறிஸ் ஜோர்டன் எனப் பலரின் பெயர்களும் இடம்பெறுவதற்கான அத்தனை முகாந்திரங்களும் இருக்கின்றன.

Published:Updated:

IPL 2022: பொல்லார்ட், வில்லியம்சன் டு ஷாருக்கான் - அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றிய டாப் 10 வீரர்கள்!

இவர்களைத் தாண்டி, மும்பையின் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, பஞ்சாபின் ஓடியன் ஸ்மித், சிஎஸ்கேவின் கிறிஸ் ஜோர்டன் எனப் பலரின் பெயர்களும் இடம்பெறுவதற்கான அத்தனை முகாந்திரங்களும் இருக்கின்றன.

மயங்க், சிராஜ், வெங்கடேஷ், ஷாருக்கான் ( IPL 2022 )

கடந்த ஐந்தாண்டுகளாக மும்பைக்கும் சி.எஸ்.கே-வுக்கும் நடுவில் மட்டுமே ஊசலாடிக்கொண்டிருந்த சாம்பியன்ஷிப், இம்முறை குஜராத்தின் வசமுள்ளது. ஆரம்பத்தில் எதிர்பாராத ஒன்றாக, அந்த இரண்டு அணிகளுமே புள்ளிப் பட்டியலின் அடிவாரத்தில் தேங்கின. அணிகளைப் போலவே வீரர்களுக்கும் இது நேராமலில்லை.

ஏல மேஜைக்கும் 22 யார்டுக்கும் இடையே பல மைல் தூரம் உள்ளது. எக்ஸ் ஃபேக்டராக மாறுவார்கள், போட்டிகளை வென்று தருவார்கள் எனக் கணித்து எடுக்கப்படும் வீரர்கள், அதனை ஈடேற்றாமலேயே விடைபெற்று, அணிகள் செய்த காஸ்ட்லி மிஸ்டேக்காக அதனைச் சுட்டிக் காட்டுவதும் உண்டு. அந்த வகையில், இந்த சீசனில் ஏமாற்றமளித்த 10 வீரர்கள் குறித்த தொகுப்புதான் இது.
அக்ஸர் படேல் | PBKS v DC
அக்ஸர் படேல் | PBKS v DC

அக்ஸர் படேல்:

வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாகச் சார்ந்திருக்கும் டெல்லி, கடந்த சீசனில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, தங்களது ப்ளேஆஃப் வாய்ப்புக்குக் காரணமான அக்ஸர் படேலை ஒன்பது கோடி கொடுத்துத் தக்க வைத்தது. அவரது குறைவான எக்கானமியும் அதற்கு முக்கியக் காரணம். ஆனால், இந்த சீசனில் 13 போட்டிகளில் அக்ஸர் கோடிக்கு ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தவில்லை. வெறும் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே அவர் வீழ்த்தியதும் அணிக்குப் பெரும் பின்னடைவானது. இன்னொரு ஸ்பின்னரான குல்தீப் யாதவ், 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க அக்ஸரது பந்தும் மாயங்களை நிகழ்த்தியிருந்தால் டெல்லிக்கான ப்ளேஆஃப் வாய்ப்பாவது உறுதி ஆகியிருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் தனது மோசமான எக்கானமியான 7.47-ஐயும் அக்ஸர் இம்முறை பதிவு செய்துள்ளார்.

வருண் சக்ரவர்த்தி:

வருண் சக்ரவர்த்தி | CSK v KKR
வருண் சக்ரவர்த்தி | CSK v KKR

கேகேஆரின் விக்கெட் சக்ரவர்த்தியாக முன்னதாக வலம் வந்து கொண்டிருந்தவர் வருண் சக்ரவர்த்தி. கடந்த இரண்டு சீசன்களில், முறையே 17 மற்றும் 18 விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமன்றி குறைந்த எக்கானமியோடும் பந்து வீசி, பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி, பல போட்டிகளில் திருப்புமுனையைக் கொண்டு வந்தவர். தயக்கமின்றி கேகேஆர் 8 கோடி கொடுத்து அவரைத் தக்க வைத்ததற்கும் அதுதான் காரணம். ஆனால், முந்தைய வருண் - தினேஷ் கார்த்திக் சம்பாஷணைகளை மட்டுமல்ல, அந்த வருணையே கேகேஆர் இந்த சீசன் முழுவதும் காண முடியாமல் தவித்தது. ஆறு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தது மட்டுமல்லாமல், 8.51 என எகிறிய அவரது எக்கானமியும் பல தருணங்களில் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான போட்டியில் சஹால், குல்தீப், அஷ்வின், ராகுல் சஹார் என மற்ற ஸ்பின்னர்கள் எல்லாம் போட்டா போட்டி போட்டுக்கொண்டிருக்க, வருண் தனது பெயரை நாமினேட் செய்யக்கூட இல்லை என்பதே உண்மை.

வெங்கடேஷ் ஐயர்:

வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்
IPL

இந்த சீசனில் வருண் போலவே கேகேஆரை ஏமாற்றிய இன்னுமொரு வீரர். முதல் சீசனில் ஜொலித்து, பின் அதற்கடுத்த ஆண்டிலேயே சோபிக்கத் தவறுவது பல வீரர்களின் விஷயத்தில் நாம் பார்த்ததுதான். ஆனால், அது வெங்கடேஷிற்கு நடக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரது ஃபுட் வொர்க் குறித்த குறைபாடு கடந்த சீசனிலேயே சுட்டிக்காட்டப்பட்டாலும், அச்சமற்ற அவரது அட்டாக்கிங் பாணியும், கங்குலியோடு ஒப்பிடப்பட்ட ஷாட்டுகளும் அவரை அந்த சீசனின் சென்ஷேசன் ஆக்கியது. மேலும், கேகேஆரின் அடுத்த தலைமுறை வீரராகவும் இந்திய அணியின் முகங்களின் ஒன்றாகவும் பார்க்க வைத்தது. ஆனால் இந்த சீசன் அதற்கு நேர்மாறாக மாறிவிட்டது. கேகேஆரும் அவர்மீது வைத்த நம்பிக்கையைக் கைவிடாமல் 12 போட்டிகளில் ஆட வைத்தது. ஓப்பனிங், ஃபினிஷர் என எல்லா இடங்களிலும் சோதனை ஓட்டமும் செய்து பார்த்தது; வேலைக்கே ஆகவில்லை. வெறும் 16.6 சராசரியோடும், 108 ஸ்ட்ரைக் ரேட்டோடும் கசப்பான சீசனாக முடித்துள்ளார் வெங்கடேஷ்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ்

மார்கஸ் ஸ்டோய்னிஸ்
மார்கஸ் ஸ்டோய்னிஸ்

ஓவர்சீஸ் வீரர், அதுவும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஓவர்சீஸ் வீரர் சோபிக்கத் தவறுவது எப்போதுமே அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியாக இருக்கும். ஏனெனில், அந்த இடத்தை நிரப்புவதற்கான இன்னொரு வீரரைக் கண்டறிவது அவ்வளவு சுலபமில்லை. லக்னோவுக்கு ஸ்டோய்னிஸால் அதுதான் நடந்தது. பத்துக் கோடிக்கு ஏலத்துக்கு முன்னதாகவே, கேஎல் ராகுலுக்கு அடுத்தபடியான விலை கொடுத்து ஸ்டோய்னிஸ் வாங்கப்பட, பேட்ஸ்மேன் - பௌலர் என்ற இரு ரோலிலும் பொருந்திப்போவார் என்பதே காரணம். முதலில் சில போட்டிகளை சர்வதேசப் போட்டிகள் காரணமாகத் தவறவிட்ட இந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர், பிக் ஹிட்டராக மிரட்டுவார் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், ராஜஸ்தானுடனான இரு லீக் போட்டிகள், கேகேஆருடனான ஒரு போட்டி ஆகிய மூன்றைக் கழித்தால், எந்தப் போட்டியிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆர்சிபிக்கு எதிரான எலிமினேட்டரில்கூட இதே நிலைதான். பல போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதோடு பௌலராகவும் தடுமாறினார். 11.29 என்னும் எக்கானமி அதற்கான சாட்சியாகிவிட்டது.

மயங்க் அகர்வால்:

மயங்க் அகர்வால் | PBKS vs RCB
மயங்க் அகர்வால் | PBKS vs RCB

2011-ல் இருந்து ஐபிஎல் களத்தை அறிந்த வீரர். அக்காரணத்திற்காகவே, முந்தைய கேப்டன் கேஎல் ராகுலுக்குப் பிறகு, பஞ்சாப் மிகவும் நம்பிய வீரர். கடந்த சீசன்களில், ராகுலுடனான ஓப்பனிங்கில், அவரது குறைவான ஸ்ட்ரைக்ரேட் தரும் அழுத்தத்தைக்கூட தனது பேட்டால் நேராக்கியவர். கேப்டன்ஷிப் தந்த கூடுதல் அழுத்தம் இந்த சீசன் முழுவதும் அவரைப் பந்தாடி, 13 போட்டிகளில் வெறும் 196 ரன்களோடு இந்த சீசனை முடிக்க வைத்துள்ளது. 16 என்னும் அவரது சராசரியும், வந்து சேர்ந்த ஒரே ஒரு அரை சதமும் இது அவருக்கு எவ்வளவு மோசமான சீசன் என்பதற்குச் சான்றாகிறது. ஓப்பனராக இறங்கிய போதும், அணிக்காகத் தனது இடத்தைத் தாரைவார்த்துப் பின்வரிசையில் இறங்கியபோதும் என எப்போதுமே பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை. ஆறாவது இடத்தில் அணியை முடிக்க வைத்தது மட்டுமே கேப்டனாக அவரால் நினைவுகொள்ளத்தக்கதாகி உள்ளது.

ஷாருக்கான்:

ஷாருக்கான் | PBKS vs RCB
ஷாருக்கான் | PBKS vs RCB

மயங்கைத் தொடர்ந்து பஞ்சாப் அணியை ஏமாற்றிய இன்னுமொரு வீரர். சர்வதேச அளவில் ஆடாத ஒருவரை ஒன்பது கோடி கொடுத்து பஞ்சாப் வாங்கியதற்குக் காரணம் அவரது பிக் ஹிட்டிங் மற்றும் ஃபினிஷிங் திறமைகள்தான். தமிழக அணிக்குப் போட்டிகளை மட்டுமல்ல, கோப்பைகளையே சமீப காலத்தில் வாங்கித் தந்த வீரர்தான் ஷாருக்கான். இந்த சீசனில் எல்லாப் போட்டிகளிலும் ஆட அவருக்கான வாய்ப்பை பஞ்சாப் வழங்கவுமில்லை. தரப்பட்ட போட்டியிலும் அவர் சொல்லிக் கொள்ளும்படியாக ஆடவுமில்லை. 108 என்னும் ஸ்ட்ரைக்ரேட்டே, அதற்கான ஆதாரமாக உள்ளது. பஞ்சாப்பும் எடுத்த எடுப்பில் அவரைக் கைகழுவி விடவில்லை. தொடக்கத்தில் தொடர்ச்சியாக ஆட வைத்தது. ஆனால், அவரது பேட் எந்த விதப் புரட்சியையும் நிகழ்த்தாமல்போக, இறுதியில் வேறுவழியின்றிதான் அவரை பெஞ்சில் அமர்த்தியது.

முகமத் சிராஜ்:

சிராஜ், கோலி,
சிராஜ், கோலி,

ரெட்பால் மெட்டீரியலாக வலம் வந்தவரை, ஆர்சிபியின் ஆஸ்தான வேகப்பந்து வீச்சாளராக கோலி கொம்பு சீவி விட்டார். அவரது 2020-ம் சீசனின் 3/8, ஐபிஎல் இருக்கும் வரை நினைவில் இருக்கப் போகும் ஸ்பெல். ஆனால், மொத்தமாக சிராஜை இருட்டடிப்புச் செய்துவிட்டது இந்த சீசன். ஒரு போட்டி தவிர்த்து, ஆடிய அத்தனை போட்டிகளிலும் அவரை ஆர்சிபி நம்பிக் களமிறக்கியது. ஆனால், தனது ஃபார்மைத் திரும்பக் கைப்பற்றும் அந்தத் தீப்பொறி சிராஜிடம் கிளம்பவேயில்லை. 15 போட்டிகளில் 9 விக்கெட் என்பது மட்டுமல்ல, 10.08 என்னும் எக்கானமியும் அணியைப் பெருமளவில் பாதித்தது. பல போட்டிகளில் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டவர், ராஜஸ்தானுக்கு எதிரான குவாலிஃபயரில் இரண்டே ஓவர்களில் 31 ரன்களை அள்ளிக் கொடுத்து, அணியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக மாறினார். தனது 4 ஓவர் கோட்டாவை முழுமையாக முடிக்க முடியாமல் போவதைவிட ஒரு பிரதான பௌலருக்கான தோல்வியாக வேறு என்ன இருந்துவிடப்போகிறது?! அவர் கடந்து, மறந்துபோக வேண்டிய சீசன் இது.

கேன் வில்லியம்சன்:

கேன் வில்லியம்சன் - விராட் கோலி
கேன் வில்லியம்சன் - விராட் கோலி
IPL

ஃபேபுலஸ் 4-ல் கோலிக்குப் பின் அதிகமாக இந்திய ரசிகர்களால் நேசிக்கப்படுபவர். 2018-ல் ஆரஞ்சு கேப்பை தட்டித் தூக்கியவர். கடந்த சீசன்களில் 40-களில் அவரது சராசரி இருந்துவந்தது. சன்ரைசர்ஸ் தத்தித் தடுமாறும் போதுகூட தோல்வியை ஏற்காமல், இவரது பேட் வாளாக இறுதிவரை போராடியுள்ளது. சில போட்டிகளில் அது வெற்றிக்கனியையும் பறித்துள்ளது. அந்த வில்லியம்சனை இத்தொடரில் ரசிகர்களால் சந்திக்கவே முடியவில்லை. பொதுவாக, ஆங்கரிங் ரோலில் கச்சிதமாகப் பொருந்திப்போவதோடு அணியை மெல்ல இலக்கை நோக்கி இழுத்துச் செல்லக்கூடியவர், இந்த சீசனில் எல்லாப் போட்டிகளையும் ஒரு தடுமாற்றத்தோடே கடந்தார். கேப்டன் இன்னிங்ஸை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 93 என்னும் ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் ஒருநாள் போட்டிக்கே தவறானது என்பது இலக்கணம். ஆனால், அதுதான் வில்லியம்சனின் இவ்வாண்டு ஸ்ட்ரைக்ரேட். அவரது இவ்வாண்டு ஆவரேஜான 19-தான் அவரது ஐபிஎல் கரியரிலேயே மோசமான சராசரி. சன்ரைசர்ஸின் 14 கோடியும் பேட்ஸ்மேன் வில்லியம்சன் விஷயத்தில் விரயம் என்றே சொல்ல வேண்டும்.

பொல்லார்ட்:

Krunal Pandya, Pollard | LSG v MI
Krunal Pandya, Pollard | LSG v MI

மும்பையின் சாம்பியன் கனவுக்குப் பலமுறை கலரடித்தவர். ஆனால், இவ்வாண்டு அக்கனவு அவுட் ஆஃப் ஃபோகஸில் சென்று காட்சி மங்கக் காரணமானார். 14 ஆவரேஜோடு வந்து சேர்ந்த அவரது 144 ரன்களும் 107.5 ஸ்ட்ரைக் ரேட்டும் மும்பைக்கான விடியலைத் தரவேயில்லை. 2018-ல் இதே போன்றதொரு கடினமான காலகட்டத்தை அவர் கடந்திருந்தாலும், இந்த சீசன் முன்னிலும் மோசமானதாக மாறிவிட்டது. மும்பையால் தக்க வைக்கப்பட்ட ஒரே ஆல் ரவுண்டர், அதுவும் ஓவர்சீஸ் பிளேயர் என்ற எந்தப் பெருமைக்கும் அவர் நியாயம் சேர்க்கவே இல்லை.

ரவீந்திர ஜடேஜா:

ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சன்
ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சன்

சிஎஸ்கேயின் ரசிகர்களது மொத்த நம்பிக்கையையும் அடுத்த கேப்டனாகத் தூக்கிச் சுமப்பார் என நம்பப்பட்டவர்‌. தோனியை விட நான்கு கோடிகள் அதிகமாகக் கொடுத்துத் தக்கவைத்துக் கொள்ளப்பட்டவர்‌. ஆனால், வருகின்ற வெள்ளம் இருப்பதையும் அடித்துச் செல்வதைப் போல், கேப்டன் பதவி ஜடேஜாவிடமிருந்த முப்பரிமாண வீரரையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டது. பேட்ஸ்மேனாக, பௌலராக மட்டுமல்ல, ஃபீல்டராகக்கூட அவரிடம் அந்தப் பழைய துடிப்பு காணப்படவேயில்லை. அவர் தனது தனித்தன்மையை மட்டுமல்ல தன்னையே தொலைத்துத் தேடியது தெளிவாகத் தெரிந்தது. பிரதான ஸ்பின்னர்கள் தேவையில்லை, ஜடேஜாவே போதுமென கேப்டன்கள் களமிறங்கிய போட்டிகளைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த ஜடேஜா புதிதாகத் தெரிந்தார். சிஎஸ்கே சறுக்க இதுவும் ஒரு காரணம்.

இவர்களைத் தாண்டி, மும்பையின் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, பஞ்சாபின் ஓடியன் ஸ்மித், சிஎஸ்கேவின் கிறிஸ் ஜோர்டன் எனப் பலரின் பெயர்களும் இடம்பெறுவதற்கான அத்தனை முகாந்திரங்களும் இருக்கின்றன.

ஆனால், சரிவினைத் தலைகீழாகத் திருப்பி வைத்தால் அதுவே உயரத்தை எட்ட உதவும் ஏணியாகிவிடும். இந்த சீசனின் டாப் 10 வீரர்கள்கூட, கடந்த சீசன்களில் ஃப்ளாப் 10-ல் இடம் பெற்றிருந்திருப்பார்கள்.

ஃபார்ம் எப்போதும் தற்காலிகமானதுதான், காலக்கோட்டில் வரவிருக்கும் தொடர்களில் இந்த வீரர்களும் தங்களது கதையைத் திருத்தி எழுதலாம்.