Published:Updated:

CSKvMI: சென்னையை மீட்டெடுத்த ருத்துராஜ்; தளபதிகளாக ஜடேஜா, பிராவோ... மும்பை சறுக்கியது எங்கே?

CSKvMI ( twitter.com/IPL )

சிஎஸ்கே பேட்டிங்கின் முதல்பாதியில் கொடநாடு கேஸ் போல நொண்டியடித்துக்கொண்டிருந்த ஸ்கோர், கடைசி ஐந்து ஓவர்களில் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு போல பரபரக்க, டீசன்ட் ஸ்கோர் வந்து சேர்ந்தது.

Published:Updated:

CSKvMI: சென்னையை மீட்டெடுத்த ருத்துராஜ்; தளபதிகளாக ஜடேஜா, பிராவோ... மும்பை சறுக்கியது எங்கே?

சிஎஸ்கே பேட்டிங்கின் முதல்பாதியில் கொடநாடு கேஸ் போல நொண்டியடித்துக்கொண்டிருந்த ஸ்கோர், கடைசி ஐந்து ஓவர்களில் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு போல பரபரக்க, டீசன்ட் ஸ்கோர் வந்து சேர்ந்தது.

CSKvMI ( twitter.com/IPL )
140 நாள்கள் - கடைசியாக ஐபிஎல் போட்டி நடந்து. இதற்குள் தமிழகத்தில் ஆட்சி மாறிவிட்டது. இந்திய கிரிக்கெட் கேப்டன்ஷிப்பில் காட்சியே மாறிவிட்டது. மும்பையுடனான ட்ராக் ரெக்கார்டிலும் ஒரு மாற்றம் நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் சென்னை ரசிகர்கள். ஐ.சி.சி தொடர்களுக்கு எப்படி இந்தியா பாகிஸ்தான் போட்டியோ அதேபோல ஐ.பி.எல்லுக்கு சென்னை - மும்பை. எப்போது ஆடினாலும் பைசா வசூல். அதனாலேயே ஒரு பெரிய இடைவேளைக்குப்பின், சர்வதேச லாபிக்குப் பின் தொடங்கும் இந்தத் தொடரிலும் ஓபனிங் மேட்ச் இந்த இரண்டு அணிகளுக்குமிடையேதான்.

அணித் தேர்வை பொறுத்தவரை சென்னையைப் போலத்தான் மும்பையும். முக்கிய வீரர்களை மாற்றவே மாட்டார்கள். ஆனால் இரண்டாம் பாதிக்கு முன்னால் வரும் இன்டர்வெல் ட்விஸ்ட் போல, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது மும்பை ரசிகர்களுக்கு. அணியின் கோர் வீரர்களான ரோஹித், ஹர்திக் இருவருமே ப்ளேயிங் லெவனில் இல்லை. இரண்டு முக்கியத் தூண்களை இழந்ததால் உத்தப்பாவின் புது ஹேர்ஸ்டைல் போல பாதி பலத்தோடுதான் பேப்பரில் காட்சியளித்தது மும்பை. இருவரின் பிட்னஸும் அணியில் அவர்கள் இல்லாததுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. அவர்களுக்குப் பதில் அனுமோல்ப்ரீத் சிங்கும், செளரப் திவாரியும்.

CSKvMI
CSKvMI
twitter.com/IPL

சென்னை அணியில் சுட்டிக்குழந்தைக்கு இன்னும் க்வாரன்டீன் காலம் முடியாததால் அவருக்குப் பதில் பிராவோ. கடைசியாக இதே மும்பையோடு ஆடி, 'என் அண்ணனுக்கு நான்தான்யா பண்ணுவேன்' என பொல்லார்டுக்கு போட்டுப் போட்டுக் கொடுத்த இங்கிடிக்கு பதில் ஹேசல்வுட். டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

தலையில் அடி, அதனால் கொஞ்ச காலம் பிரேக், அதன்பின் மீண்டும் ஒரு காயம், ஒரு பிரேக் என டுப்ளெஸ்ஸியின் பார்ம் குறித்து ஏகப்பட்ட கேள்விகள் இருந்தன. அதை மெய்யாக்குவதுபோல தடுமாற்றத்துடனேயே பந்துகளைச் சந்தித்தார். கிட்டத்தட்ட பவர்ப்ளே ஜாம்பவனாகவே மாறிவிட்ட போல்ட்டின் பந்தில் லூஸ் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து டக் அவுட்டில் வெளியேறினார். முதல் பாதியில் சென்னை ரசிகர்களின் பேவரைட் வீரரான மொயின் அலியும் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேற, மறுமுனையில் மில்னே வீசிய ஷார்ட் பால் ராயுடுவின் கை முட்டியை பதம் பார்த்தது. சுருண்டு விழுந்த ராயுடு, ரிட்டையர்ட் ஹர்ட்.

அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியனில். 13 ஆண்டுகள் ஐபிஎல் அனுபவமுள்ள ஒரு வீரர் எப்படி ஆடவேண்டும்? ஆனால், எப்படி ஆடக்கூடாது என்பதற்கு சாம்பிளாய் இருந்தது சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம். ஏற்கெனவே இறங்கி வந்து டாப் எட்ஜாகி தப்பிப் பிழைத்து நான்கு ரன்கள் எடுத்தார். மறுபடியும் அதே ஸ்டைலில் இறங்கி சுற்ற இன்னொரு டாப் எட்ஜ். இம்முறை கேட்ச். சிஎஸ்கே அணியின் ஸ்கோர் மூன்று ஓவர் முடிவில் 7/3 ப்ளஸ் ஒரு ரிட்டையர்ட் ஹர்ட். சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளில் பா.ஜ.க இருந்ததைப் போன்ற ஒரு பரிதாப நிலைமை.

CSKvMI
CSKvMI
twitter.com/IPL

களத்தில் தோனி. முதல்பாதியில் நிலையில்லாமல் தன் பேட்டிங் பொசிஷனை மாற்றிக்கொண்டே இருந்தவருக்கு இப்போது வேறு வழியே இல்லை. பொறுமையாக சிங்கிள்கள் தட்டி மூன்று ரன்கள் எடுத்தவரை ஷார்ட் பால் வீசி வழிக்குக் கொண்டுவந்தார் மில்னே. டீப் ஸ்கொயரில் கேட்ச். 'ஏம்ப்பா என்னை இன்னும் நீ பினிஷர்ன்னே நினைச்சுகிட்டு இருக்கல?' எனக் கேமராவை பார்த்துக் கேட்டபடியே வெளியேறினார் கேப்டன். பவர்ப்ளே முடிவில் 24/4. இத்தனைக்கும் பும்ரா இன்னும் பந்தைத் தொடவேயில்லை. சிஎஸ்கே ரசிகர்களுக்கு போன சீசன் பரிதாபங்கள் எல்லாம் கண் முன் வந்து போனது.

களத்தில் கெய்க்வாட்டும் ஜடேஜாவும். சும்மாவே கெய்க்வாட் கணக்கு வைத்து அடிவாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கும் 90'ஸ் ஹீரோக்களைப் போல 20 பந்துகளுக்கு அப்புறம்தான் அடித்து ஆடவே ஆரம்பிப்பார். இப்போது இன்னும் பொறுமையாக ஆடவேண்டிய நிலை. மறுபக்கம் ஜடேஜாவும் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தால் போதும் என ஆட, அப்டேட் ஆயிடாத ஆண்ட்ராய்ட் போன் போல ஸ்கோர்போர்ட் ஹேங் ஆனது.

11 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 48/4. பத்தாவது ஓவரில் க்ருணால் போட்ட வைட் புண்ணியத்தில் வந்த ஒன்பது ரன்களே அதுவரைக்குமான அதிகபட்சம். 12வது ஓவர் மறுபடியும் க்ருணால். ஸ்பின்னர்களை செமையாக ஆடக்கூடிய கெய்க்வாட் க்ருணாலை குறிவைக்க அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள். மறுபக்கம், உலகக் கோப்பை அணிக்கு நான் தகுதியானவன்தான் என டைட்டாக பந்துவீசி ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார் ராகுல் சஹார். 15 ஓவர் முடிவில் 87/4. பிரேக்கில் களத்திற்கு வந்த ப்ளெமிங், படையப்பா படத்தில் லட்சுமி, 'சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுப்பா' என பெர்மிஷன் தருவதைப் போல கெய்க்வாடிற்கு கண்ணைக் காட்டியிருப்பார் போல. சலங்கை கட்டி ஆடத் தொடங்கினார் கெய்க்வாட். 16 ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து அரைசதம் எட்டினார். ஐபிஎல்லில் ஆறாவது அரைசதம் அவருக்கு.

CSKvMI
CSKvMI
twitter.com/IPL

'நீங்க எனக்கு சிக்னல் தரலனாலும் நான் அடிப்பேன் கோச்' என அடுத்த ஓவரில் ஜடேஜாவும் அடிக்க முற்பட, கப்பென கேட்ச் பிடித்தார் பொல்லார்ட். ஸ்கோர் அந்த 17வது ஓவரின் முடிவில் 107/5. மில்னே வீசிய 18வது ஓவரில் கடைசி பந்தை பிராவோ சிக்ஸுக்குத் தூக்க, ஸ்கோர் 117/5. போல்ட்டைப் பொறுத்தவரை பவர்ப்ளேயில் சினிமாவில் வரும் ரஜினி போல. பிரமாதமான ஓபனிங், அடுத்தடுத்து விக்கெட் என ஹிட்டடிப்பார். டெத் ஓவர் போல்ட் அரசியலுக்கு வரும் ரஜினி போல. என்ன செய்வது, எப்படி பந்து போடுவது என எதுவுமே புரியாமல் சொதப்புவார். இந்த மேட்ச்சிலும் அப்படி சொதப்ப, பிராவோவும் கெய்க்வாட்டும் மாறி மாறி பொளக்க, 24 ரன்கள். பும்ரா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் வர, மும்பைக்கு டார்கெட் 157 ரன்கள் ஆனது.

CSKvMI
CSKvMI
twitter.com/IPL
முதல்பாதியில் கொடநாடு கேஸ் போல நொண்டியடித்துக்கொண்டிருந்த ஸ்கோர், கடைசி ஐந்து ஓவர்களில் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு போல பரபரக்க, டீசன்ட் ஸ்கோர். முக்கியக் காரணம் 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த கெய்க்வாட். அதுவும் பும்ரா வீசிய கடைசி பந்தை ஸ்கொயர் லெக் பக்கம் ப்ளிக் அடித்த ஸ்டைல் - அதி அற்புதம்!

போல்ட்டும் மில்னேயும் வீசிய விதத்தில் பவர்ப்ளேயில் நல்ல ஸ்விங் இருக்கும் எனத் தெரிந்தது. சஹாருக்கும், ஹேசல்வுட்டுக்கும் அனுகூலமான நிலை. ஆனால் ஹேசல்வுட்டோ, 'என்னை யாருக்குப் பதிலா எடுத்தீங்க? இங்கிடிக்கு பதிலா... அப்போ நானும் அதேமாதிரி போடுறதுதானே மொறை' என ரன்களை வாரி வழங்கினார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே 12 ரன்கள். மூன்றாவது ஓவரில் மிடில் லென்த் பாலை சஹார் வீச, அது டி காக்கின் பேடில் பட்டநொடி சஹார் அப்பீல் கேட்காமலேயே அவுட் என ஓடத்தொடங்கிவிட்டார். ஆனால், அம்பயர் முகத்தில் பாலிவுட்டின் புதுமுக ஹீரோ போல ரியாக்‌ஷனே இல்லை. தோனி சட்டென ரிவ்யூ எடுக்க, அவுட்! இலங்கைக்கு எதிரான தொடரில் செம பார்மிலிருந்த டி காக் அவுட். தன் அடுத்த ஓவரிலேயே புதுமுக வீரரான அன்மோல்ப்ரீத்தை நக்கிள் பாலில் சஹார் போல்டாக்க, மும்பை முகாமில் பிரஷர் கூடியது.

CSKvMI
CSKvMI
twitter.com/IPL

ஹேசல்வுட்டை இரண்டே ஓவர்களில் 26 ரன்கள் வெளுத்திருந்ததால் ஸ்பெல்லை மாற்றி ஷர்துலை கொண்டுவந்தார் தோனி. கை மேல் பலன். மும்பையின் பேட்டிங் தூணான சூர்யகுமாரை பெவிலியன் அனுப்பினார். பவர்ப்ளே முடிவில் 41/3. களத்தில் வேர்ல்ட் கப்பில் கலக்கக் காத்திருக்கும் கிஷனும் செளரப் திவாரியும். திவாரியைப் பொறுத்தவரை ஐபிஎல்லில் அவர் மேட்ச்சைப் படம்பிடிக்கும் கேமராமேன் போல. களத்தில் கடைசிவரை இருப்பார். ஆனால், மேட்ச்சில் அவரால் எந்தப் பாதிப்பும் இருக்காது. இந்த ஆட்டத்திலும் அதேதான்.

திவாரி பொறுமையாக ஆடுவார் என்பதால் மிடில் ஓவரில் ரன்ரேட்டை தக்கவைக்கும் வேலை இஷான் கிஷனுக்கு. இந்தப் பிரஷரை சூப்பர் சீனியர் பிராவோ பயன்படுத்திக்கொள்ள, கிஷன் அவுட். அவருக்கு ரெய்னாவை வைத்து கவரில் பீல்ட் செட் செய்துவைத்திருந்த பொறி அப்படி. ஸ்கோர் 9.2 ஓவர்கள் முடிவில் 58/4.

CSKvMI
CSKvMI
twitter.com/IPL
'பொல்லார்ட்தான் வர்றாரு, பொளந்துகட்டப் போறாரு. அதுதான் அதுதான் சிஎஸ்கே கூட அவர் ட்ராக் ரெக்கார்ட்' என ரசிகர்களின் ஆரவாரம் எகிற களத்திற்கு வந்தார் பொல்லார்ட். ஆனால், 'என்ன எல்லாத் தடவையும் நாம அடிக்கிற மாதிரியே இருக்கு' என நினைத்தாரோ என்னவோ, ஹேசல்வுட் பாலில் எல்.பி.டபிள்யூ ஆனார். 'ஒரு ஸ்பெல்லுதான் மிஸ்ஸாகும்' என தொடையைத் தட்டி நின்றார் ஹேசல்வுட்.

'சீசன் பர்ஸ்ட் பாதில அடிக்கவே அடிக்காத ரெண்டு பேரு யாரு? - ஹர்திக் பாண்ட்யாவும் க்ருணால் பாண்ட்யாவும்' என ரமேஷப்பா, சுரேஷப்பா ரேஞ்சுக்குத்தான் இந்த சகோதரர்கள் இணை ஆடி வருகிறது. இந்த மேட்ச்சிலும் க்ருணால் அஜாக்கிரதையாக ரன் அவுட் ஆக, கிட்டத்தட்ட ரிசல்ட் தெரிந்துவிட்டது. 'அதெப்படி தோத்துட்டதா நீங்களே முடிவு பண்ணலாம்? அப்புறம் நான் எதுக்கு? நான்தான் கடைசி வரை நின்னு டீமை தோற்கடிப்பேன்' என விடாப்பிடியாய் நின்று அரைசதமும் போட்டு மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸிற்கு எண்ட் கார்ட் போட்டார் திவாரி.

CSKvMI
CSKvMI
twitter.com/IPL
20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி. 24 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து முதலில் பேட்டிங் செய்த அணி மேட்ச்சை வெல்வது ஐபிஎல்லில் இது இரண்டாவது முறை. பவர்ப்ளேயில் நான்கு விக்கெட்களை இழந்தபின் மேட்ச்சை ஜெயிப்பது சென்னை அணிக்கும் இது இரண்டாவது முறை. ஆட்டநாயகன் சந்தேகமே இல்லாமல் ருத்துராஜ் கெய்க்வாட்.

'இந்த சீசன் வழக்கத்தைவிட மாறானது. நார்மலாக ஒரு சீசன் போகப் போக முன்னிலையில் இருக்கும் அணி அந்த பார்மை தக்கவைத்து ப்ளே ஆப்பிற்கு சென்றுவிடும். ஆனால் இந்த முறை இரண்டாவது பாதியை கிட்டத்தட்ட தொடரின் தொடக்கம் போல எடுத்துக்கொண்டு ஆடவேண்டும்' என டாஸின்போது சொன்னார் தோனி. மும்பையும் அப்படித்தான் நினைத்தது போல. வழக்கமாய் தொடரின் முதல் போட்டியில் தோற்பது போலவே இந்த முறையும். ஆனாலும் கடந்த ஆண்டு கைகொடுத்த யு.ஏ.இ என்பதால் மும்பை ப்ளே ஆப்பிற்கு வர வாய்ப்பிருக்கிறது.

CSKvMI
CSKvMI
twitter.com/IPL

மறுமுனையில் முதல் மூன்று வீரர்களைப் பெரிதாக நம்பியிருக்கிறது சென்னையின் பேட்டிங். நிலையில்லாத மிடில் ஆர்டரில் இப்போது ராயுடுவின் காயமும் சோதனை சேர்க்கிறது. ஒருவேளை அவரால் அடுத்த சில ஆட்டங்கள் ஆடமுடியாவிட்டால், உத்தப்பாவை அணியிலெடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஓபனிங் ஆடாமல் மிடில் ஆர்டரில் ஆடினால் தடுமாறுவார் உத்தப்பா. இவருக்காக ஓபனிங் பொசிஷனில் செட்டிலாகி இருக்கும் டுப்ளெஸ்ஸியை மாற்றுவது எந்தளவிற்கு பயன் தரும்? ஸ்லோ ட்ராக்கான யு.ஏ.இயில் முழுநேர ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்குவது சரிதானா?

எல்லாவற்றுக்கும் மேலாக, முக்கியமாக, பேட்ஸ்மேனாக தோனியின் பங்களிப்பு எப்படி இருக்கப்போகிறது போன்ற ஏராளமான கேள்விகளுக்கு அடுத்த இரண்டு வாரங்கள் பதில் சொல்லும்.