Published:Updated:

தோனி, நியாயமாரே... பிராவோவுக்குப் பதில் கேதர் ஜாதவா... தலைவனுக்கு என்னதான் ஆச்சு?! #KKRvCSK #Dhoni

#Dhoni

கேப்டன் தோனியின் ப்ளேயிங் லெவன் குழப்பங்களால், பிடிவாதமான முடிவுகளால், மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத தலைவனின் மனநிலையால் தொடர் தோல்விகளைச் சந்திப்பதுதான் கவலையளிக்கிறது.

Published:Updated:

தோனி, நியாயமாரே... பிராவோவுக்குப் பதில் கேதர் ஜாதவா... தலைவனுக்கு என்னதான் ஆச்சு?! #KKRvCSK #Dhoni

கேப்டன் தோனியின் ப்ளேயிங் லெவன் குழப்பங்களால், பிடிவாதமான முடிவுகளால், மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத தலைவனின் மனநிலையால் தொடர் தோல்விகளைச் சந்திப்பதுதான் கவலையளிக்கிறது.

#Dhoni
6 போட்டிகளில் விளையாடி அதில் 4 போட்டிகளில் தோல்வி என 2020 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே-வுக்கு மிகவும் அவமானகரமாகத் தொடங்கியிருக்கிறது. மும்பை பழைபடி ஃபார்முக்கு வந்துவிட்ட நிலையில், டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா என எல்லோரும் பாயின்ட்ஸ் டேபிளில் போட்டிபோட்டுக்கொண்டு ஏற ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஆண்டு வெற்றிப்புள்ளிகளைவிட நெட் ரன்ரேட்தான் ப்ளேஆஃப் இடங்களை முடிவு செய்யும் அளவுக்குப் போட்டி கடுமையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் தோல்விகளால் துரத்தியடிக்கப்படுகிறது சென்னை.

இந்தத் தோல்விகள் எதிரணியின் பலத்தால் நடந்தவை என்றால் எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்த போட்டியில் கம்பேக் கொடுப்பார்கள் என நம்பலாம். ஆனால், கேப்டன் தோனியின் ப்ளேயிங் லெவன் குழப்பங்களால், பிடிவாதமான முடிவுகளால், மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத தலைவனின் மனநிலையால் தொடர் தோல்விகளைச் சந்திப்பதுதான் கவலையளிக்கிறது.

#Dhoni
#Dhoni

நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டி கேப்டன் தோனியின் அலட்சிய முடிவுகளின் உச்சம். வாட்சனும் - ராயுடுவும் சென்னையின் வெற்றியை எளிதாக்கியிருந்தனர். ராயுடு அவுட் ஆகும்போது 48 பந்துகளில் 69 ரன்கள்தான் டார்கெட். 'தோனி ஏன் இன்னும் இறங்கலன்னா கேட்குறீங்க... இதோ வர்றேன்டா' என்பதுபோல வழக்கமான பொசிஷனைவிடவும் நான்காவது பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் தோனி. வந்ததுமே வழக்கம்போல டாட் பால்தான். இங்கிருந்துதான் சென்னையின் தோல்விப்பயணம் ஆரம்பித்தது.

கேதர் ஜாதவை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் எனத் தொடர்ந்து அணியில் வைத்திருக்கும் தோனி, அவரைத்தான் நான்காவது பேட்ஸ்மேனாக இறக்கியிருக்கவேண்டும். அப்போது 13-வது ஓவர்தான் என்பதோடு, நன்றாக செட் ஆகி வாட்சன் ஆடிக்கொண்டிருப்பதால் அடுத்த இரண்டு - மூன்று ஓவர்களுக்குள் விக்கெட் போனாலும் ஃபினிஷிங் ரோலில் தோனியோ, சாம் கரணோ அல்லது பிராவோவோ இறக்கிவிடப்பட்டிருக்கலாம். ஆனால், தோனியே வந்தார். டார்கெட் பிரஷரைக் கூட்டினார்.

ஹைதரபாத்துக்கு எதிரான போட்டியில் 2 டவுன் பேட்ஸ்மேனாக கேதர் ஜாதவைத்தான் இறக்கினார் தோனி. 10 பந்துகளில் 3 ரன்கள் அடித்துவிட்டு அவுட் ஆனார். அதேபோல் இந்தப்போட்டியிலும் நடந்துவிடக்கூடாது என தோனி நினைத்திருந்தால் அவரை கடைசிவரை இறக்கியிருக்கவே கூடாது. டி20 ஸ்பெஷலிஸ்ட்டான, டெத் ஓவர்களில் பெளலர்கள் எப்படி வீசுவார்கள் என நன்குத்தெரிந்த அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய பிராவோதான் கேதருக்கு முன்பாக இறங்கியிருக்கவேண்டும். ஆனால், இடது கை பெளலர்கள், இடது- வலதுகை பேட்ஸ்மேன் காம்போ என எந்த நியாயமான காரணமும் இல்லாமல், 21 பந்துகளில் 39 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற சூழலில் கேதர் ஜாதவ் க்ரீஸுக்குள் வந்தார்.

CSK CAMP
CSK CAMP
''அப்படி எதுமா என்கிட்ட உன்ன ஹெவியா லைக் பண்ணவெச்சது'' என கேதாரே கேட்டாலும், தோனியால் சரியான காரணத்தை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. பிட்சுக்கு வந்ததுமே கேதர் ஜாதவின் அற்புதமான டிஃபென்ஸிவ் ஸ்ட்ரோக்குகளால் மூன்று டாட் பால்கள்.

ப்ரஷர் கூடியதால் இன்னொரு முனையில் இருந்த சாம் கரண் சிக்ஸர்கள் விரட்ட ஆசைப்பட்டு அவுட் ஆனார். ஆனால், இந்த சம்பவத்துக்குப்பிறகும் கேதர் ஜாதவின் அட்ராசிட்டிகள் அடங்கவில்லை.

ரஸலின் 18-வது ஓவரில் மீண்டும் இரண்டு பந்துகளை டாட் பாலாக்கினார். 19-வது ஓவரில் நரைனின் பந்தை லாங் ஆன் பவுண்டரிக்கு விரட்டிவிட்டு, உடனடியாக பேட்டை எல்லாம் மாற்றி ஏதோ அதிரடி ஆட்டத்துக்கு தயாராவதுபோல ஆர்ம்ஸை இறுக்கினார். ஆனால், அடுத்த பந்தும் டாட் பால். அதற்கு அடுத்த பந்து சிங்கிள்.

கடைசி ஓவரில் பவர் ஹிட்டரான ஜடேஜா எதிர்முனையில் இருந்தும் முதல் பந்தில் சிங்கிள் ஓட மறுத்து அடுத்து 5 பந்துகளையும் சிக்ஸராக்கப்போகும் கெத்தோடு ஸ்ட்ரைக்கில் இருந்தார் கேதர். ஆனால், அடுத்தப்பந்தும் டாட் பாலாக, மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்து தான் அணிக்குள் இருப்பதற்கான நியாயத்தைச் சிறப்பாக செய்தார்.

மற்ற அணிகள் மட்டுமல்ல, கிரிக்கெட்டே பெரிதாகத் தெரியாத ரசிகன்கூட கிண்டலடிக்கும் அளவுக்கு இருந்தது சென்னையின் பர்ஃபாமென்ஸ். சென்னை தோல்வியடைந்திருக்கும் நான்கு போட்டிகளுமே சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்காததால் நிகழ்ந்த தோல்விகள். தெரிந்தே நடந்த தவறுகள்.

#Dhoni
#Dhoni

ஜூனியர்களுக்கு ஏன் வாய்ப்பில்லை?!

எல்லா அணிகளிலுமே ஜூனியர் வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து அவர்களை வளர்த்தெடுக்கிறார்கள். ஆனால், சென்னையில் ஜூனியர்களுக்கான இடம் டக் அவுட் பென்ச்தான். தண்ணீர்பாட்டில், டவல் கொண்டுவருவதுதான் அவர்கள் வேலை. தனக்கு செட்டான ஒரு சீனியர் டீமோடு பயணிப்பதையே தொடர்ந்து வழக்கமாக வைத்திருக்கிறார் தோனி.

சென்னை அணியில் சாம் கரண் மட்டுமே இளைஞர். இவருக்குமே வெளிநாட்டு வீரர் என்பதால்தான் அணிக்குள் இடம் கிடைத்திருக்கிறது. உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்புகளே சென்னை அணியில் இல்லை. பாபா அபராஜித் எல்லாம் பல சீசன்களாக பென்ச்சில் மட்டுமே உட்காரவைக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டவர். அந்த வழக்கம் இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்கிறது.

சிஎஸ்கே டீமுக்கான தேடுதல் வேட்டையை தமிழ்நாடு பிரிமியர் லீக் மூலம் நடத்துகிறார்கள். ஆனால், டிஎன்பிஎல் மூலம் உருவான சிறந்த கிரிக்கெட்டர்களை மற்ற அணிகள்தான் ஐபிஎல் ஏலத்தில் வாங்கியதே தவிர சென்னை கண்டுகொள்ளவே இல்லை. நடராஜன், வாஷிங்டன் சுந்தர், நேற்று தோனியின் விக்கெட்டை எடுத்த வருண் சக்ரவர்த்தி எல்லோரும் டின்பிஎல் தயாரிப்புகள்தான்.

சென்னை, ஐபிஎல்-ல் தடை செய்யப்பட்ட 2016-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் ரன்கள் குவித்திருக்கும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசன். விக்கெட்கீப்பிங் பேட்ஸ்மேனான ஜெகதீசன் நான்கு சீசன்களில் விளையாடி 1,352 ரன்கள் அடித்திருக்கிறார். அதிகபட்சம் 9 போட்டிகள் கொண்ட ஒரு சீசனில் சராசரியாக 300 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். அதேபோல் டிஎன்பிஎல்-ல் தொடர்ந்து சிறப்பாக பர்ஃபார்ம் செய்யும் ஸ்பின்னர் சாய் கிஷோர். இடது கை ஆர்த்தடாக்ஸ் பெளலரான இவர் கடந்த மூன்று சீசன்கள் மட்டுமே விளையாடி 30-க்கும் மேல் விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். 2018-2019 சீசனில் ரஞ்சி தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் சாய் கிஷோர்தான்.

இவர்கள் இருவரும் இப்போது சிஎஸ்கே அணிக்குள்தான் இருக்கிறார்கள். கேதர் ஜாதவும், பியுஷ் சாவ்லாவும் தொடர்ந்து சொதப்பியும், ஜெகதீசனுக்கும், சாய் கிஷோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடந்த சீசனில் டிஎன்பிஎல் போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய பெரியசாமியை சிஎஸ்கே கண்டுகொள்ளவேயில்லை. தினேஷ் கார்த்திக், கொல்கத்தாவின் நெட்பெளலராகவாவது பெரியசாமிக்கு வாய்ப்பளித்திருக்கிறார். ஆனால், சென்னையிலோ இளம் வீரர்களுக்கு, குறிப்பாக தமிழக வீரர்களுக்கு எப்போதுமே நோ என்ட்ரிதான் போலிருக்கிறது.

Bravo
Bravo
ஃபார்மிலே இல்லாத, கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிற முரளி விஜய்க்கு தொடர்ந்து மூன்று போட்டிகளில் வாய்ப்பளித்திருந்தார் தோனி. அதுபோன்ற ஒரு வாய்ப்பாவது ஜெகதீசனுக்கு வழங்கலாம்.

இந்த சீசனோடு தோனி ஓய்வுபெறுவார், அடுத்த ஆண்டில் இருந்து தோனிதான் சென்னையின் மென்ட்டார் என்கிற பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், வெற்றியோ/தோல்வியோ இந்த ஆண்டே அவர் ஜூனியர் வீரர்களைவைத்து அணியின் பலத்தை டெஸ்ட் செய்யலாம். ஆனால், அவரோ தவறான ரூட்டிலேயே தொடர்ந்து பயணிக்கிறார்.

இவ்வளவு காலமும் அனுபவத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு பயணித்த சிஎஸ்கே இப்போது அந்த அனுபவ வீரர்களாலேயே சரிவைச் சந்திக்க ஆரம்பித்திருக்கிறது. சிஎஸ்கே மீண்டும் கோப்பையை வெல்ல பேரதிசயங்கள் நடக்கவேண்டும். அதிசயங்களை இவர்களிடத்தில் எதிர்பார்க்கலாமா?!