Published:Updated:

#CSK சோதனை மேல் சோதனை... சென்னையை மீண்டும் சாம்பியனாக்குவாரா தோனி?! LEAGUE லீக்ஸ் - 8

தோனி #CSK ( twitter.com/ChennaiIPL )

நான்காவது முறையாக சாம்பியனாகுமா சென்னை... பிரச்னைகளும், சவால்களும்!

Published:Updated:

#CSK சோதனை மேல் சோதனை... சென்னையை மீண்டும் சாம்பியனாக்குவாரா தோனி?! LEAGUE லீக்ஸ் - 8

நான்காவது முறையாக சாம்பியனாகுமா சென்னை... பிரச்னைகளும், சவால்களும்!

தோனி #CSK ( twitter.com/ChennaiIPL )

சென்னை சூப்பர் கிங்ஸ் - சிறு வரலாறு!

இந்தியன் பிரிமியர் லீகில் அதிக ரசிகர்களைக்கொண்ட நம்பர் 1 அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே சென்னைக்குதான் செல்வாக்கு அதிகம். முதன்முதலாக 2008-ல் ஐபிஎல் தொடங்குவதற்காக நடந்த ஏலத்தின்போது டெல்லி - ஷேவாக், மும்பை - சச்சின், கொல்கத்தா - கங்குலி, பெங்களூர் - டிராவிட், ஐதராபாத் - லட்சுமண், பஞ்சாப் - யுவராஜ் என எல்லா அணிகளும் தங்கள் மண்ணின் மைந்தர்களை கேப்டன்களாகவும், ஐகான் ப்ளேயர்களாகவும் அறிவிக்க அப்படியாரும் இல்லாத, அடையாளமில்லாத அணியாக இருந்தது சென்னை. ஏலத்தில் யாரை எடுக்கப்போகிறார்கள், யார் கேப்டன் என்கிற கேள்விக்கெல்லாம் ஒரே பதிலாக 6 கோடி ரூபாய்க்கு சென்னை வந்துசேர்ந்தார் தோனி. அன்றுமுதல் இன்றுவரை தோனிதான் சென்னையின் முகம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்
File Photo

சாம்பியன்ஷிப் எண்ணிக்கையில் மும்பை, சென்னையைவிட ஒரு கோப்பையை அதிகம் வென்றிருக்கிறார்கள் என்றாலும், சென்னையின் கன்சிஸ்டன்ஸி அவர்களிடம் இருந்ததில்லை. இதுவரை 10 ஐபிஎல் தொடர்களில் சென்னை விளையாடியிருக்கிறது. ஒருமுறைகூட ப்ளே ஆஃபுக்குள் நுழையாமல் சென்னை வெளியேறியதில்லை. இரண்டு ஆண்டு தடை நீங்கி 2018-ல் சென்னை மீண்டும் வந்தபோது 'அங்கிள்ஸ் ஆர்மி' என கிண்டல் அடிக்கப்பட்டது. ஆனால், அந்த அங்கிள்ஸ் ஆர்மிதான் கோப்பையை வென்றது. கடந்த ஆண்டும் கோப்பையை வென்றிருக்க வேண்டியது. தோனியின் ரன் அவுட்டால் கோப்பை ஜஸ்ட் மிஸ். தோனி ப்ளேயராக விளையாடப்போகும் கடைசி ஐபிஎல் இதுதான் என்கிறார்கள். கடைசி ஐபிஎல்-ல் சென்னைக்கு கோப்பையை வென்றுதரவேண்டும் என்பதில் தோனியும் தீவிரமாகவே உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல... இந்த முறை ஒன்றா, இரண்டா... கொரோனா தொடங்கி பல பிரச்னைகளோடு போராடிக்கொண்டிருக்கிறது சென்னை.

பிரச்னை ஒன்று - நம்பிக்கையின்மை!

தற்போதைய சூழலில் முழுமையான நம்பிக்கையோடு சென்னை அணி இல்லை என்பதுதான் உண்மை. கொரோனா பாசிட்டிவ், ரெய்னா விலகல், ஹர்பஜன் சிங் விலகல் என அடுத்தடுத்து வந்த நெகட்டிவ் செய்திகளால் சிஎஸ்கே கேம்புக்குள் பழைய பாசிட்டிவிட்டி இல்லை. தீபக் சஹார் கொரொனாவில் இருந்து மீண்டுவிட்டாலும் ரெய்னாவுக்கு மாற்றாக அடையாளம் காட்டப்படும் ரித்துராஜ் கெய்க்வாட் இன்னும் மீளவில்லை. 2018-ல் கோப்பையை வென்றிருந்தாலுமே ஏகப்பட்ட சீனியர் வீரர்களை தூக்கி சுமந்துகொண்டிருப்பது சென்னைக்கு பெரிய பிரச்னைதான். கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் டாப் 10 பேட்ஸ்மேன்களில் சென்னை வீரர் ஒருவர்கூட கிடையாது. இம்ரான் தாஹிரின் ஸ்பின்னே பல போட்டிகளில் காப்பாற்றியது. ஆனால், அது இந்த சீசனிலும் தொடருமா என்பதோடு, கரியரின் இறுதிக்கட்டங்களில் இருக்கும் வீரர்களையே நம்பிக்கொண்டிருப்பது சரியா என்கிற கேள்விகள் அணி நிர்வாகம் தொடங்கி அணியின் மற்ற வீரர்களுக்குமே இருக்கிறது.

#CSK
#CSK
twitter.com/ChennaiIPL

பிரச்னை இரண்டு - தோனி?!

கடந்த ஜூலை 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் விளையாடியதுதான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேசப்போட்டி. அதன்பிறகு சர்வதேசப்போட்டி என்றில்லை, உள்ளூர் போட்டிகளில்கூட தோனி விளையாடவில்லை. 2018 ஐபிஎல்-லை சென்னை கைப்பற்ற தோனியின் அதிரடி ஆட்டம் மிகப்பெரிய காரணம். ஆனால், 2019 சீசனில் தோனியின் பர்ஃபாமென்ஸ் கொஞ்சம் இறங்கியது. ஆனாலும், சென்னைக்காக அதிக ரன்கள் அடித்தவர் தோனிதான். 13 போட்டிகளில் 416 ரன்கள். ஆவரேஜ் 31. ஐந்தாவது வீரராகக் களமிறங்கும் பேட்ஸ்மேனுக்கு இந்த ஆவரேஜ் ஓகேதான் என்றாலும் ஓராண்டுக்கும் மேலாக டச்சில் இல்லாமல் இருக்கும் தோனி மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிடுவாரா என்பது விடை தெரியா கேள்வி. தோனி ஃபார்மில் இல்லையென்றால் அது சிஎஸ்கே கேம்ப்பையே மனதளவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கும். அதனால் தோனியின் மீதான ப்ரஷர் இந்த ஆண்டு இன்னும் கூடியிருக்கிறது.

பிரச்னை மூன்று - ரெய்னா, ஹர்பஜன்!

தோனிக்கு அடுத்து சென்னையின் நிரந்தர நிலையக் கலைஞராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. 2008-ல் தொடங்கி தொடர்ந்து ஏழு ஆண்டுகள், ஒவ்வொரு சீசனிலும் 400 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர். சென்னை சரிவை சந்தித்தபோதெல்லாம் தூணாக நின்று அணியைத்தூக்கி நிறுத்தியவர். ரெய்னா இல்லாத 1 டவுன் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள்? ரெய்னா கொடுத்த நம்பிக்கையை மற்றவர்கள் கொடுப்பார்களா என்பதற்கெல்லாம் யாரிடமும் பதில் இல்லை. அதேபோல் ஹர்பஜன் சிங்கின் விலகல். சென்னையில் ஹர்பஜன் இருந்ததால் அவர்கள் ஏலப்போட்டிகளில் ஆஃப் ஸ்பின்னர் யாரையும் வாங்கவில்லை. ஆனால், கடைசி நேரத்தில் ஹர்பஜன் காலை வாரிவிட்டார். இந்தியாவில் போட்டிகள் நடந்திருந்தால் இது பெரும் பிரச்னையாக இருந்திருக்காது. ஆனால், ஸ்பின்னுக்கு சாதகமான அரபு பிட்ச்களில் போட்டிகள் நடப்பதால் ஹர்பஜன் இல்லாதது சென்னைக்கு கொஞ்சம் தலைவலியே. வெறும் லெக் ஸ்பின்னர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு முழு சீசனை சென்னை எப்படி சமாளிக்கும்?!

Stephen Fleming, Dhoni
Stephen Fleming, Dhoni
twitter.com/ChennaiIPL

2020 சவால்கள் - பேட்டிங் ஆர்டர்!

சிஎஸ்கே, 2019 சீசனில் பவர் ப்ளே ஓவர்களில் மட்டும் மொத்தம் 30 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இது மற்ற அணிகளை விட மிகவும் அதிகம். அது மட்டும் அல்ல இந்த பவர் ப்ளே ஓவர்களில் மிகக் குறைந்த ரன் ரேட் (6.44) வைத்திருந்த அணியும் சிஎஸ்கே-தான். இந்த முறை அரபு மைதானங்கள் பேட்டிங்கிற்கு இன்னும் சவாலானதாக இருக்கும் என்பதால் சென்னையின் டாப் ஆர்டரை வலுவானதாக்க வேண்டும். ஷேன் வாட்சன் - டுப்ளெஸ்ஸி அல்லது ஷேன் வாட்சன் - முரளி விஜய் என இந்த இரண்டில் ஒன்றுதான் ஓப்பனிங் காம்போவாக இருக்கும். ரெய்னா இல்லாததால் மூன்றாவது பேட்ஸ்மேனாக அம்பதி ராயுடு விளையாடுவார். டுப்ளெஸ்ஸி ஓப்பனிங் ஆடினால் முரளி விஜய் நான்காவது பேட்ஸ்மேனாகவும், தோனி ஐந்தாவது பேட்ஸ்மேனாகவும் களமிறங்குவார்கள். இதற்கடுத்து ட்வெய்ன் பிராவோ அல்லது ரவீந்திர ஜடேஜா இருப்பார்.

ஸ்பின் டு வின்!

ஸ்பின்னர் ஸ்பாட் யாருக்கு என்பதில்தான் ட்விஸ்ட் இருக்கிறது. கடந்த சீசனில் 26 விக்கெட்டுகள் எடுத்து ஐபிஎல்-ன் நம்பர் 1 பெளலராக இருந்தவர் இம்ரான் தாஹிர். அவர் நிச்சயம் அணிக்குள் இருந்தாகவேண்டும். அவர் அணிக்குள் வந்தால் நான்கு வீரர்கள் என்கிற வெளிநாட்டு கோட்டா முடிந்துவிடும். அதனால் சான்ட்னர் அணியில் விளையாடமுடியாது. அதனால் இன்னொரு ஸ்பின்னர் இடத்தை பியுஷ் சாவ்லாவைக்கொண்டே தோனி நிரப்பக்கூடும். இவரும் தாஹிரைப்போன்றே வலது கை லெக் ஸ்பின்னர்தான். இவர் இல்லையென்றால் தமிழக வீரர் சாய் கிஷோர் அணிக்குள் இடம்பிடிக்கலாம். இவர் ஜடேஜாவைப் போன்றே இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர். ப்ளேயிங் லெவனுக்குள் தாஹிர் உறுதி. இன்னொரு ஸ்பின்னரைத் தேர்ந்தெடுப்பதுதான் தோனிக்கு சவாலாக இருக்கும். சஹார், ஷர்துல் தாக்கூர் என இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைக்கொண்டே வேகப்பந்து ஏரியாவை தோனி நிரப்பவேண்டியிருக்கும். லுங்கி எங்கிடி ப்ளேயிங் லெவனுக்குள் இடம்பிடிப்பது கஷ்டம். பிராவோ தொடர்ந்து சொதப்பினாலும் சான்ட்னருக்கே தோனி வாய்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ருத்துராஜ் கெய்க்வாட் கொரோனா, க்வாரன்டீன் எல்லாம் முடிந்துவந்தால் அவர் டுப்ளெஸ்ஸி இடத்தை நிரப்பலாம். அப்போது லுங்கி எங்கிடி அணிக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Du Plessis, Watson
Du Plessis, Watson
twitter.com/ChennaiIPL

டெத் ஓவர்ஸ்:

சென்னையின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ட்வெய்ன் பிராவோ. ஆனால், பிராவோ கரீபியன் லீகில் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. இவர் டெத் ஓவர்களில் சொதப்பினால் அது சென்னைக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும். கடந்த ஆண்டு சில போட்டிகளில் தீபக் சஹாரை டெத் ஓவர்களை வீசவைத்திருக்கிறார் தோனி. ஆனால், அது எல்லா நேரத்திலும் கைகொடுக்கவில்லை. தாக்கூரும் 15 ஓவர்களுக்கு முன்பாகவே தன்னுடைய ஸ்பெல்லை முடித்துவிடுவார். அதனால் டெத் ஓவர்களை சமாளிப்பது இந்த சீசனில் சென்னைக்கு சவாலாகவே இருக்கும்.

Dhoni
Dhoni

தோனி மேஜிக்!

தோனி இருக்கும் ஒரே நம்பிக்கையில்தான் சென்னை அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதற்கு தோனி மேஜிக் இந்த ஆண்டும் கைகொடுக்கவேண்டும். ''யார் போனாலும் நான் இருக்கேன்!'' என ஶ்ரீனிவாசனுக்கு மட்டுமல்ல சென்னை ரசிகர்களுக்கும் நம்பிக்கைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் தோனி. அவரின் களசெயல்பாடுகள் மட்டுமே சென்னையைக் காப்பாற்றும். சரியான ப்ளேயிங் லெவன், சரியான பெளலிங் ரொட்டேஷன், சரியான ஃபீல்ட் ப்ளேஸ்மென்ட்ஸ் என இந்த ஏரியாக்களில் தோனி தன் முழுத்திறமையையும் காட்டினால் சென்னைக்குப் பெரிய விசில் போடலாம்!